கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2186 பாழும் கிணற்றுக்குள் தள்ளி விடும் இச்சைகள்!

2 சாமுவேல் 12: 4    அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

ஆதியாகமத்தில் நாம் ஆபிரகாமின் குடும்பமும், லோத்தின் குடும்பமும் பலுகிப் பெருகிப்போனதைப் பார்க்கிறோம்.

இருவரும் பெரிய ஆஸ்தியை சேர்த்துவிட்டனர், அவர்களுடைய ஆடு மாடுகளுக்கு இடம் கொள்ளவில்லை. அதனால் ஆபிரகாம் தன்னுடைய குமாரனைப்போல இருந்த லோத்தை அழைத்து நமக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உனக்குப் பிரியமான இடத்தை நீ பிரித்து எடுத்துக் கொள் என்றான்.

லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து யோர்தானின் சமனான வெளியைத் தெரிந்துகொண்டான். மிகவும் செழிப்பாக காணப்பட்ட அங்குதான் சோதோம் என்ற பட்டணமும் இருந்தது.

லோத்து உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது,  நல்ல நீர் வளமுள்ள பச்சை பசேலென்ற சமவெளி ஒரு பெரிய தோட்டம் போலவும் சோதோமின் பள பளவென்ற வாழ்க்கை மிகவும் அழகாகவும் தெரிந்ததால், அவன் சோதோமை நோக்கி தன் கூடாரத்தைப் போட்டான் என்று வாசிக்கிறோம். ( ஆதி:13)

கண்ணுக்குத் தெரியும் அழகான வாழ்க்கை மீது கொண்ட  மோகம் ஆபிரகாமின் சகோதரன் மகனாகிய லோத்தை தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனாகிய ஆபிரகாமை விட்டும், ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரை விட்டும் பிரித்து விட்டன. பின்னர் லோத்தின் குடும்பத்துக்கு நடந்தது நமக்குத் தெரிந்ததே!

லோத்து உயரமான இடத்திலிருந்து சோதோமைப் பார்த்தற்கும், தாவீது உய்ரமான இடத்திலிருந்து பத்சேபாளைப் பார்த்தற்கும் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை! இருவரும் பெரிய பணக்காரர்கள்! பணத்தின் மேட்டிமையால் தாங்கள் விரும்பியதை அடைய ஆவல்.

இதைத்தான் நாத்தான் கூறும் கதையில் வரும் பணக்காரனும் செய்கிறான். பணத்தின் மேட்டிமையிருந்து அவன் கண்களை நோக்கிப் பார்த்தபோது அவ்னுக்குத் தென்பட்டது அந்த ஏழையின் அழகான செல்ல ஆட்டுக்குட்டிதான். அதை அடிக்க முடிவு செய்து விட்டான்.

இது அவனுடைய அடிப்படை தேவை அல்ல! இச்சை மட்டுமே!

ஆனால் மிகவும் உயரத்திலிருந்து தேவனாகிய கர்த்தர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை லோத்தும், தாவீதும், இந்த பணக்காரனும் மறந்து விட்டார்கள்.

நீ இன்று உயரத்திலிருந்து  எதைப் பார்க்கிறாய், எது உன் கண்களில் பச்சையாக தெரிகிறது, எதை நீ அடைய இச்சிக்கிறாய், என்பதை கர்த்தர் மிகவும் உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதே!

உன்னுடைய தேவை என்பது வேறு, இச்சை என்பது வேறு! இதை கர்த்தர் நன்கு அறிவார்!

உன் தேவையை அவர் சந்திப்பார் ஆனால் உன் இச்சை உன்னை பாழும் கிணற்றுக்குள் தள்ளி விடும்!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment