2 சாமுவேல் 12:5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் (அந்தப் பணக்காரன் மேல்) மிகவும் கோபம் மூண்டவனாகி….
நீ யாருடைய தவறையாவது சீர்திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன்.
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ( மத்:7:1)என்று கர்த்தராகிய இயேசு சொன்னார்.
மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான் தாவீதுக்கும் ஆகிவிட்டது. நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் வந்த பணக்காரன், ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி தன்னுடைய வீட்டுக்கு வந்த வழிப்போக்கனுக்கு சமையல் செய்ததைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்து விட்டது.
நாத்தான் அவனிடம் அந்த பணக்காரன் ஏழையினுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததைக் கூறினான். மற்றவருடைய பொருளுக்கு ஆசைப்படுவதும் தவறு அதை அடைய நினைப்பதும் தவறு.
ஆனால் இங்கு தாவீது கோபப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியத்தை மூட்டுகிறது.
உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை இச்சித்தது அவன்,
உரியாவை போரில் வெட்டுண்டு சாகடித்தது அவன்,
அவனுக்கு சொந்தமில்லாத பத்சேபாளைத் தனக்கு சொந்தமாக்கியது அவன்,
ஆனால் அவன் தன் குற்றத்தைக் காணாமல் கதையில் வந்த ஐசுவரியவான் மேல் கோபப்படுகிறான்.
இன்று தாவீதின் மூலமாக நாம் பார்ப்பது நம்முடைய சுயரூபத்தைத்தானே!
நம்முடைய தவறை நாம் ஒப்புக் கொள்ளாமல், மற்றவர்களுடைய தவறைப்பற்றி பெரிதாகப் பேசுகிறோம் அல்லவா? நம்முடைய தவறை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது நமக்கு எவ்வளவு கடினமான காரியம். அதனால் தான் நம்மைப்போலவே தாவீதும் மற்றவனுடைய குற்றத்தைப்பற்றி கேள்விப்பட்டவுடன் கோபப்பட்டான்.
ஆனால் உண்மையில் யார் அந்தக் குற்றவாளி??????
இன்று நம்முடைய கண்களை நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்து நம்முடைய கண்ணில் உள்ள தூசியை எடுத்துப்போட தாவீதுக்கும், நமக்கும் தைரியம் உள்ளதா?
தவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஒரு தாலந்து தான்! ஆனால் அந்த தாலந்து புதைக்கப்பட வேண்டிய ஒன்று!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
:
