கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2197 எதை விதைத்திருக்கிறாய் என்று அறிவாயா?

2 சாமுவேல் 12: 10,11  இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக  எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு  மூலையில் செடிகள் போடும்படியாக எங்களை ஊக்குவித்தனர். நாங்களும் அதை கொத்தி, பதப்படுத்தி கேரட் விதைகளையும், முள்ளங்கி விதைகளையும் போட்டோம். திடீரென்று எங்களுக்கு பூச்செடி விதைகளை வரிசை வரிசையாகப் போட்டுப் பார்ர்க வேண்டுமென்று. பலவித நிறங்களில் பூக்கும் பால்சம் பூக்களின் விதைகளை வரிசையை வரிசையாய் போட்டோம். எல்லா விதைகளும் முளைத்து எழும்பின! என்ன நிறத்தில் பூக்கள் வருமோ என்று ஆசையோடு காத்திருந்தபோது, கேரட்டுகளும், முள்ளங்கிகளும் இடத்தை நிரப்ப ஆரம்பித்தன! பூச்செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு அவை வளைந்து நெளிந்து வளர இடமில்லாமல் பெலனற்று நின்றன! நாங்கள் விதைத்த போது எங்களுக்கு அது பெரிய யோசனையாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் விதைத்திருந்த பூமிக்கடியில் விளையும் காய்கறி செடிகளின் வேர்கள் அதை நாசம் செய்து விட்டன!

நம்முடைய வாழ்க்கையிலும்  தவறாக விதைத்தால் தவறாகவே அறுப்போம் என்பது நமக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியும் அல்லவா? இதுதான் நம்முடைய தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் நடந்தது!

தாவீது இன்னொரு மனிதனின் மனைவி மீது ஆசைப்பட்டு விட்டான். அவள் கணவனைக் கொலை செய்தும் விட்டான், பின்னர் கர்த்தர் அவனை மன்னித்து விட்டார், அதற்கு பின் தாவீது சுகமாக வாழ்ந்தான் என்று எழுதத்தான் எனக்கும் ஆசை! ஆனால் அப்படி எழுத முடியவில்லையே!

ஒரு இடத்தில் நடக்கும் குற்றம் அதில் சம்பத்தப்பட்ட ஒருவரையா பாதிக்கிறது? அந்தக் குடும்பங்களை, சமுதாயத்தை, அந்த ஊரை, அந்த நாட்டையும் கூட பாதிக்கவில்லையா?

அதுமட்டுமா? இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த  மீடியா மூலம் உலகமே அதிர்ச்சியாகிறது அல்லவா?  நாம் ஒன்றும் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்வில்லை! நன்மையோ தீமையோ எதுவுமோ மற்றவரை பாதிக்காமல் செல்லாது. நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதால் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நம்முடைய ஒவ்வொரு செயலும் மற்றவரையும் தொடுகிறது.

தாவீதின் செயலால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒருநிமிடம் சிந்திப்போம்!  தாவீதின் வாழ்க்கையோடு ஒரு நாடே சம்பத்தப்பட்டு இருந்தது. அநேகர் அவனோடு பின்னி இணைந்து இருந்ததால் அவன் விதைத்த விதை அவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவருக்கும் வேதனையைக் கொண்டு வந்தது.

பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன் என்று தேவனாகிய கர்த்தர் கொடுத்த தண்டனை தாவீதுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்திருந்தவருக்கும் தான்!

தாவீது விதைத்த விதையின் பலனை அவனுடைய குடும்பமும், அவனுடைய ராஜ்யமும் அவன் வாழ்நாள் முவதும் அனுபவித்தனர்.

நாம் இன்று எதை விதைக்கிறோம்? நாம் விதைக்கும் விதை நாம் நேசிக்கும் நம்முடைய குடும்பத்தை பாதிக்கும் என்பதை மறந்து போக வேண்டாம்!

நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும் என்பதற்கு தாவீதே சாட்சி!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment