கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2201 அசுத்தமான இடத்தை சுத்திகரிப்பது போல!

2 சாமுவேல் 12:13  ….. நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.

ஒரு குழைந்தைகள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அறையிலிருந்து குழந்தைகள் ஓடி இன்னொரு அறைக்குள் நுழைந்தனர். அந்த கதவு உடனே மூடப்பட்டது. அது அவர்களை வேறொரு கால கட்டத்துக்கு அழைத்து சென்றது. அந்தக் குழந்தைகளால் அங்கிருந்து வெளியே வரவே முடியவில்லை.  அவர்கள் எவ்வளவு எட்டியும் அந்தக் கதவு அவர்களுக்கு எட்டவேயில்லை! அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்ததால் ஒருவர் கூட அடுத்த குழந்தையைத் தோளில் நிற்கவைக்கும் பெலனில்லை.

நானும்கூட  சில நேரங்களில் இந்த சிறு குழந்தைகளைப் போல தப்பிக்கவே முடியாமல் மாட்டிக் கொண்டதாக நினைத்ததுண்டு.  உங்களில் ஒருசிலர் இன்றுகூட அப்படிப்பட்ட நிலையில் இருக்கலாம். நாம் எவ்வளவு முயன்றும் பாவங்களை விட முடியாமல், கர்த்தரைப்பிரியப்படுத்தவும் முடியாமல், உயரத்தை எட்ட முடியாமல் அவஸ்தைப் படவில்லையா?

ஒருவேளை இன்று நீயோ அல்லது நானோ அப்படிப்பட்ட நிலையில் இருப்போமானால்  இன்றைய வேதாகம வசனம் உனக்கும் எனக்கும்தான்!

தாவீது தேவனுடைய கட்டளையை மீறியது மட்டுமல்ல, தேவனையே அசட்டை பண்ணினான்,  தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தான் என்று பார்த்தோம். ஆனால் நாத்தானுடைய வார்த்தையைக் கேட்ட தாவீது உடனே தன்னுடைய பாவத்தை உனர்ந்து அறிக்கையிட்டான். அவன் பாவத்தை அறிக்கையிட்டவுடன் தேவனாகிய கர்த்தர் நாத்தான் மூலம் கூறிய முதல் வார்த்தையே கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்ற மன்னிப்புதானேத் தவிர அவனை திட்டித் தீர்த்த கடின வார்த்தைகள் அல்ல!

நாம் சற்று கர்த்தர் கூறிய இந்த வார்த்தையைப் கூர்ந்து பார்ப்போம். நீங்க செய்தார் என்பது கடந்த காலம் அல்லவா? தாவீதே உன்னுடைய பாவம் கடந்த காலம் ஆகிவிட்டது என்று கூறியது போல இல்லை?

.. நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுகிறார்.  ( மீகா: 7:19)

கர்த்தர் ஆழத்தில் போட்டு புதைத்துவிட்ட பாவங்களை நாம் தோண்டி எடுக்க எந்த உரிமையும் கிடையாது!

தேவனாகிய கர்த்தர் தாவீது மனந்திருந்தியவுடனே அவனுடைய பாவத்தை ஆழத்தில்போட்டு புதைத்து விட்டார். அவனுடைய பாவம் அவனுடைய கடந்த காலமாகி விட்டது! அப்படியேதான் அவர் உனக்கும் எனக்கும் செய்கிறார்!

அது மட்டுமல்லாமல் கர்த்தர் தாவீதுக்கு இன்னொரு வாக்கும் இங்கு கொடுக்கிறார்.கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்றால் என்ன? நாம் அசுத்தமான எதையாவது ஒரு இடத்திலிருந்து நீக்கி விட்டால் அந்த இடத்தை சுத்திகரிக்க மாட்டோமா?

அதைத்தான் கர்த்தர் தாவீதுக்கு செய்தார்!  இதையேதான் தேவனாகிய கர்த்தர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கும் செய்கிறார்!

அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்  ( 1 யோவான் 1:7)

அவரை நம்பு! அவரண்டை வா! உன்னுடைய பாவங்களை ஆழத்தில் போட்டுவிட்டு உன்னை சுத்திகரிப்பார்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment