கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2208 மனந்திரும்புதலோடு வரும் மாறுதல்!

2 சாமுவேல் 12:24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி…..

நான் சில நாட்களில் இந்த தியானத்தை எழுத அதிகமாய் ஆசைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் இது.  தாவீதின் வாழ்க்கையில் பாவத்தினால் ஏற்பட்ட புயல் ஓய்ந்து, ஒரு திருப்புமுனை ஏற்பட்ட நேரம் இது.

இந்த வேதாகம தியானத்தை படிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்களின் இருதயத்தில் ஏற்படும் ஒரு பெரிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் வேதப் பகுதி இது!

தாவீதின் வாழ்க்கையை நாம் இதுவரை பார்த்ததின் மிகச் சுருக்கமான நினைவூட்டல் இது!

 தாவீதின் சரித்திரத்தில் பெண்களை அவன் சரியாக நடத்தவில்லை என்றுதான் நினைக்கிறேன்.  அவன் பெண்களை தன்னுடைய அரசியல் நோக்கத்துக்காகவோ, அல்லது இச்சைக்காகவோ தான் உபயோகப்படுத்தினான். சவுல் தன்னுடைய மகளாகிய மீகாளை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தது அரசியல் என்றாலும், அவன் அதை எதிர்க்கவில்லை. ஆனால் அவன் சவுலின் வீட்டிலிருந்து தப்பித்து ஓடியபின் மீகாளைப் பற்றி அவன் நினைக்கவேயில்லை. அவன் பணக்கார விதவையான அபிகாயிலைத் திருமணம் செய்கிறான். அவளோடு நிறுத்தினானா? இல்லை 1 சாமுவேல் 25: 43 ல் யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் அவன் திருமணம் செய்தான் என்று பார்க்கிறோம்!.

மறக்கப்பட்ட மீகாளோடு கூட சேர்ந்து, இந்த இரண்டு மனைவிமார் அவனுக்கு பற்றவில்லை. 2 சாமுவேல் 3: 2 – 5 ல் அவன் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று, மாக்காள், ஆகீத், அபித்தால், எக்லாள் என்பவர்களையும் மணந்தான். இவர்கள் எல்லோர் மூலமும் அவனுக்கு பிள்ளைகள் இருந்தார்கள்.

கடைசியாக குளித்துக்கொண்டிருந்த அழகி பத்சேபாளைத் தன் வீட்டின் உப்பரிகையிலிருந்து பார்த்து அவள் திருமணம் ஆனவள் என்றுத் தெரிந்தும் அவளை அழைத்து வரச் சொல்லி அவளை அடைந்தான். பின்னர் அவளுடைய கணவனும், நியாயமான உண்மையான தன்னுடைய சேனையின் வீரனுமான உரியாவைக் கொலையும் செய்தான்.

உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன். அவன் திருமணம் செய்த பெண்களை அவன் மதிக்கவேயில்லை! மதித்திருந்தால்  அடுத்த பெண்ணை அந்த வீட்டுக்குள் கொண்டு வந்திருக்க மாட்டான். திருமணமான பெண்ணின் கணவனையும் மதிக்கவில்லை! ராஜா என்கிற வெறி அவன் தலைக்கு ஏறிவிட்டது!

ஆனால் 2 சாமுவேல் 12 ல் நாத்தான் அவனிடம் வந்து அவனுடைய நடத்தையைப் பற்றி கர்த்தர் என்ன நினைக்கிறார் என்று உணர்த்தியபின்னர், அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது.

என்ன மாறுதல்?

முதன் முறையாக அவன் தான் மற்றவர்களைத் துக்கப்படுத்தியதை உணர்ந்தான். அவனுடைய இவ்வளவு கேவலமான நடத்தைக்கு பின்னும் தேவனாகிய கர்த்தர் அவனை எப்படி நடத்தினார் என்பதையும் உணர்ந்தான்.

இன்றைய வேதாகமப்பகுதி தாவீது தன்னுடைய மனைவியான பத்சேபாளை ஆறுதல் படுத்தினான் என்று பார்க்கிறோம். எபிரேய மொழியில் ஆறுதல் என்ற வார்த்தைக்கு‘ வருத்தப்படுதல்’ என்ற அர்த்தமும் உண்டு.

தாவீது பத்சேபாளை முதல் முதல் பார்த்தபோது இச்சையினால் அவளை ஒரு பொருளைப்போல பார்த்து அடைய ஆசைப்பட்டான். ஆனால் இப்பொழுது அவனுடைய நடத்தைக்காக வருத்தப்பட்டு அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்! அவளை ஒரு பொருளைப்போல நடத்தியதற்காக வருந்துகிறான்.

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் என்று தேவனோடு உறவாடிக்கொண்டிருந்து இளம் தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற மனிதன் என்ற பெயர் வாங்கியவன். அவருடைய ஆறுதலை அவன் நன்கு அறிந்திருந்தான். அவருடைய ஆறுதளிக்கும் கரம் அவனை நடத்தி இஸ்ரவேலின் ராஜாவாக அவனை உயர்த்தியதும் அவனுக்குத் தெரியும்!

இன்று அவன் தேவனிடம் பெற்ற ஆறுதலைத் தன்னால் உபயோகப்படுத்தப்பட்டு, வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பத்சேபாளுக்குக் கொடுக்கிறான். இதுவரை உரியாவின் மனைவி என்று அழைக்கப்பட்டவள்  இங்கு  தாவீதின் மனைவி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். அவள் இனி இன்னொருவனின் மனைவி அல்ல! தன்னுடைய மனைவிக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை அவன் கொடுக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது இதுதான்! பெண்ணுக்குரிய மரியாதை! அவள் ஒரு பொருள் இல்லை! இன்று ஒருவேளை உங்கள் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அவளுக்குரிய மரியாதை கொடுக்கப்படாமல் இருக்குமானால் இந்த வேத வார்த்தைகளின் வெளிச்சத்தில் சற்று சிந்தித்து பாருங்கள்!

தாவீது மனம் மாறிய போது பெண்களை மனந்திருந்திய ஆறுதலோடு, மரியாதையோடு நடத்த ஆரம்பித்தான்!  நீங்கள் எப்படி?

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment