கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2211 நம்முடைய பிள்ளைகளை சிக்க வைக்கும் வலை!

2 சாமுவேல் 13:1,2  இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான்.

தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். 

தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா! ஒரு பாடகன்,  இசைக்கருவி வாசிக்கும் கலைஞன்!  ஒரு மகா பெரிய யுத்த வீரன்!  மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் –  அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய மனைவிமாரும், பிள்ளைகளும் இதற்கு சாட்சி!

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தாவீதுக்கு எல்லாமே இருந்தமாதிரிதான் இருந்திருக்கும். ஆனால் தாவீதின்  அரண்மனைக்கு உள்ளே புகைந்து கொண்டிருந்தது!

இந்த 13ம் அதிகாரம் தாவீதின் அரண்மனைக்கு உள்ளே நடந்த காரியங்களை நாம் பார்க்கும்படி திரையை விலக்குகிறது! தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் கூறியவை நிறைவேற ஆரம்பித்தன! அவனுடைய பாவத்தின் விளைவை அறுக்க ஆரம்பித்து விட்டான்.

தாவீது பத்சேபாளின் கதை விறுவிறுப்பாக நடந்தபோது அவனுடைய பிள்ளைகளின் கண்கள் எல்லாவற்றையும் காணும், செவிகள் எல்லாவற்றையும் கேட்கும் என்பதை அவன் கவனிக்கவே இல்லை! தாவீது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அவனுடைய பிள்ளைகள் பார்த்து விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அரண்மனையை சுற்றிவந்த கிசுகிசுப்பையும் அவர்கள் நிச்சயமாக கேட்டு விட்டார்கள்!

அதே பிள்ளைகள் சற்று வளந்தவுடன் தங்கள் தகப்பனைப்போல நினைத்தபடி வாழ ஆரம்பித்தார்கள்!  அப்பா செய்ததைப்போல அவர்களும் நடந்து கொள்ளலாம் அல்லவா!  முதலில் அவனுடைய மகனான அம்னோனிடம் அப்படிப்பட்ட நடத்தை ஆரம்பிக்கிறது!

அந்த கால கட்டத்தில் வாழ்ந்த ராஜாக்கள் அனைவரும் இப்படித்தானே பல மனைவிமாரோடும், மறுமனையாட்டியாரோடும், அநேக பிள்ளைகளோடும் வாழ்ந்தார்கள். தாவீது மட்டும் பல பெண்களோடு வாழ்ந்தது எப்படி தவறு ஆகும் என்று யோசிப்பீர்கள்! யாரோ எப்படியோ வாழலாம் ஆனால் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களும், தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுடைய ராஜாவும் , அப்படி நடந்து கொள்ளும்போது அவர்களுக்கு துக்கமே முடிவானது, நமக்கு ஆபிரகாம், சாராள், ஆகார் என்பவர்களின் கதையிலிருந்து தெரியும் அல்லவா!

அநேக மனைவிகளின் பிள்ளைகள் நடமாடிய அரண்மனையில் ஒருசில காரியங்கள் தலைதூக்க ஆரம்பித்தன! அண்ணன் தங்கை உறவை மீறி காதல் எழும்ப ஆரம்பித்தது!  அம்னோனுக்கு அவனுடைய தங்கை தாமார் மீது இச்சை எழும்பியது. அம்னோனுக்கும் தாமாருக்கும் ஒரே தந்தைதான்! அவர்களுக்குள் எந்த உறவு  ஏற்படுவதையும் கர்த்தர் ஏற்றுக்கொள்ள மாட்டார், அவனுடைய தந்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.  இது நன்கு தெரிந்த அவனுக்கு ஏக்கம் பிடித்து விட்டது.

எப்படியாவது தாமாரை அடைய வேண்டும் என்ற ஏக்கம் நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? அவனுடைய தந்தையாகிய தாவீது பத்சேபாளை அடையவேண்டும் என்ற ஏக்கம் கொண்டதையல்லவா?

ஆம்! பிள்ளைகள் எல்லாவற்றையும் கவனித்தே வளர்ந்தனர். அவர்கள் பார்த்த எதுவும் பரிசுத்தமாக இல்லையே! தகப்பனிடத்தில் பார்த்ததைத்தானே அம்னோன்  இங்கு எதிரொலிக்கிறான்!

நம்முடைய பிள்ளைகள் நம்மைத்தானே எதிரொலிப்பார்கள்! நம்முடைய தினசரி வாழ்க்கையில் பிள்ளைகள் எதைப்பார்க்கிறார்கள்? நாம் தேவனோடு நடப்பதை அவர்கள் நம்மில் காண முடிகிறதா? அல்லது நாம் ஏமாற்றுவதையா? லஞ்சம் வாங்குவதையா? வயதான அம்மா அப்பாவை கேவலமாக நடத்துவதையா? இருட்டில் வாழும் வழ்க்கையையா?

பிள்ளைகள் நம்மைக் கவனிக்காத நேரத்தில் நாம் பின்னும் பாவம் என்னும் வலையில் நம்முடைய பிள்ளைகளே சிக்கிக்கொளவார்கள் என்பது நாம் அனுபவிக்கும்போதுதான் புரியும் உண்மை! ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment