கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2212 தவறான நட்பு என்பது ஒரு கொடிய நோய் போன்றது!

2 சாமுவேல் 13:3 அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

நாம் இன்னும் ஒரு சில நாட்கள் படிக்கப்போகும் இந்த சம்பவம் தாமார் அவளுடைய சகோதரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம். இது வேதத்தை சற்று படித்த எல்லோருமே அறிந்த ஒரு சம்பவம் தான்.  இந்த சம்பவம் தாவீதின் பிள்ளைகள் அத்தனைபேரையும் இதில் சம்பந்தப்படுத்தியது என்பதும் நமக்குத் தெரியும்.

ஆனால் இதை ஆழமாக படிக்கும்போதுதான் இந்த மனமுடைய வைக்கும் சம்பவத்துக்கு பின்னால் பல காரியங்கள் இருந்தது தெரியவரும்!

நான் முதலில் கூறிய மாதிரி இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம் தாவீதுதான். அவனுடைய வாழ்க்கை தன்னுடைய பிள்ளைகள் மத்தியில் சாட்சியாக இல்லாததே குடும்பத்தில் ஏற்பட்ட அவலத்துக்கு முதல் காரணம்!

இரண்டாவது தாவீதோடு வாழ்ந்து வந்த அவனுடைய உறவினர் ஒருசிலருடைய உறவு நன்மை பயக்கும் உறவாக இல்லை!

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது அம்னோனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அந்த யோனதாப் நண்பன் மட்டுமல்ல தாவீதின் அண்ணன் மகன் கூட. அம்னோனுக்கு பெரியப்பா மகன்!  இங்கு பெரியப்பா மகன் அம்னோனுக்கு நெருங்கிய நண்பனாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.

அம்னோனுக்கு அவனுடைய சகோதரியான தாமார் மேல் ஏற்பட்ட இச்சையைப் பார்க்கும்போது அவனுடைய நெருங்கிய சிநேகனாகிய யோனதாபைப்பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் உன் நணபனைக் காட்டு உன்னைப்பற்றி சொல்லிவிடுகிறேன் என்று நாம் சொல்வது உண்டு அல்லவா? பாருங்கள்! இந்த யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று அழைக்கிறது!

இந்த ஒரு வார்த்தை நமக்கு யோனதாபும், அம்னோனும் எப்படிப்பட்டவர்களாய் இருந்திருப்பார்கள் என்று விளக்குகிறது அல்லவா?

தாவீதுடைய பெரிய குடும்பம் ஒன்றாய் வாழ்ந்ததால் வெவ்வேறு குணமுடைய அநேகம்பேர் அங்கு இருந்தனர். ஆனால் ஒரு கெட்டவனோடு நெருங்கிய  நட்பு கொள்ளவேண்டும் என்று யாருக்கும் கட்டளையில்லையே!

ஆனால் அங்கு தாவீதின் இல்லத்தில் நடந்த ஏமாற்றல், கற்பழிப்பு இவற்றின் பின்னால் ஓடிய இழைகளை நாம் பார்க்கும்போது அவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு தவறான நட்பு என்று திட்டமாக சொல்ல முடியும்.

உறவினரை நண்பராகவோ, அல்லது அந்நியரை நண்பராகவோ தெரிந்து கொள்ளும்போது ஒன்றை மட்டும் மறந்து போக வேண்டாம்! நட்பு வாழ்க்கையையே மாற்றும்!

தவறான நட்பு ஒரு கொடிய நோய் போன்றது!  அது நாய்களின் உடம்பில் ஒட்டிக்கொண்டு இரத்ததை உறிஞ்சும் உன்னியைப் போன்றது!

நல்ல நட்பு நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும்!  இன்னும் சொல்லப்போனால் நல்ல நட்பு தேவனுடைய அழகை பிரதிபலிக்க வேண்டும்!

உங்களுடைய நட்பு இன்று யாருடன் உள்ளது? வேதம் காட்டும் வெளிச்சத்தில் சிந்தியுங்கள்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment