கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2213 பெருமையான இருதயமும் உயரமான மலையும்…….

2 சாமுவேல் 13:4  அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். 

இந்த வருடத்தின் இரண்டாம் மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் தேவனுடைய பிரசன்னம் நம்மைத் தொடரும்படியாக ஜெபிப்போம்.

அம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான்.

அந்த இச்சையை அடைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பன் யோனதாபை, வேதம் மகா தந்திரவாதி என்று கூறியதையும் பார்த்தோம்.

இன்று யோனதாப் தந்திரமாய்  நுழையும் காட்சியைப் பார்க்கிறோம். ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், என்ற அவனுடைய தந்திரமான வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள்! ஏக்கம் பிடித்தவனாய் மெலிந்து கொண்டிருந்த அம்னோனிடம், நீ ஒரு ராஜ குமாரன், உன்னால் அடைய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. நீ நினைப்பதை அடையும் மேலான நிலையில் நீ உள்ளாய் என்று யோனதாப் கூறுகிறான்.

இப்படிக் கூறுவதின் மூலம் யோனதாப், அம்னோனுக்குள் புதைந்து இருந்த ராஜகுமாரன் என்ற பெருமையைத் தட்டி எழுப்புகிறான்.

ஒருநிமிடம் ஏதேன் தோட்டத்துக்கு போய் வருவோம்!  தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. (ஆதி3:1 )

இந்த  தந்திரமுள்ளதாயிருந்தது என்ற வார்த்தையை எங்கோ கேட்ட மாதிரி இல்லை? யோனதாபை ஒரு  மகா தந்திரவாதி என்று வேதம் கூறவில்லையா?

அந்த சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் (ஆதி 3:5) என்பதைப் பார்க்கிறோம்.

தேவனாகிய கர்த்தர் புசிக்கக்கூடாது என்று தடை செய்த கனியைப் புசித்தால் நீங்கள் சாதாரண மனிதர்களாக இருக்க மாட்டீர்கள், தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று ஏவாளின் மனதில்,  தான் இருக்க வேண்டிய இடம் இது அல்ல, தேவர்கள் இருக்கும் இடம் என்ற ஆவலைத் தூண்டி விட்டான் சாத்தான்.

ஏவாளையும், அம்னோனையும் தந்திரவாதியான சாத்தான் தாங்கள் இருப்பதை விட மேலான நிலையை அடைய முடியும் என்று நம்ப வைத்தான்.

இதே தந்திரவாதி  சில நேரங்களில் நம்மிடம் வந்து ,  தேவன் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய காரியத்தை நாமே செய்து சாதித்து விடலாம் என்று நம்ப வைக்கிறான்.

எத்தனை முறை நாம் பெருமை என்னும் சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்லப்படுகிறோம்?

நான் தான் இதை சாதித்தேன், என் திறமையால் தான் இது முடிந்தது நான்…… நான்….. நான் ….என்ற எண்ணம் நம்மை நிரப்பும் போது,  தேவனாகிய கர்த்தருக்கு கொஞ்சம் கூட இடம் கொடாமல் நம்  வாழ்க்கை முழுவதும் நாமே நிரப்பி விடுவோம்!

பெருமையான இருதயமும் உயரமான மலையும் எப்பொழுதுமே வெறுமையாகத்தான் இருக்கும் என்று யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது!

மற்ற எல்லா பாவமும் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமானது ஆனால் பெருமையும் மேட்டிமையுமோ தேவாதி தேவனுக்கே விரோதமானது!

 

உங்கள் சகோதரி,

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment