கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2218 உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது?

2 சாமுவேல் 13:13  …. இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

வேதத்தைப் படிக்கும் ஒவ்வொருநாளும் அதில் நான் கண்டெடுக்கும் முத்துக்கள் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என்று நான் மறுபடியும் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று தெரியாது!

இன்றைய வேதாகமப்பகுதி நான் அடிக்கடி நினைக்கும் ‘இதை நான் படித்ததே இல்லையே’  என்று நினைத்த பகுதிகளில் ஒன்று! ஒருவேளை இந்தப்பகுதி உங்களுக்கும் இன்று புதிதாகத் தெரியலாம்!

நேற்று நாம் அம்னோன் தாமாரை வெட்கப்படுத்தும்படி செய்த செயலைப் பார்த்தோம். என் சகோதரனே என்னை அவமானப்படுத்தாதே என்று தாமார் அழுத சத்தம் நமக்குக் கேட்டதே!

இந்தப் பகுதியை நாம் வேகமாக கடந்து சென்று விட்டால் நாம் ஒரு முக்கியமான கருத்தைக் கடந்து போய் விடுவோம்.

தாமார் அம்னோனிடம் நீ ராஜாவிடம் பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள் என்று வேதம் சொல்கிறது.

தாமாருக்கு ராஜாவைப்பற்றி என்ன தெரிந்திருந்தது? தாவீதை அவள் அப்பா என்று கூட அழைக்கவில்லையே!  அம்னோன் அவளுடைய கற்பை சூறையாட காத்துக்கொண்டிருக்கும்போது அவள் ராஜாவைப்போய்க் கேள் அவர் நீ விரும்புவதை தராமல் மறுக்க மாட்டார் என்கிறாள். இப்படிப்பட்ட பொல்லாப்பை செய்ய ராஜாவாகிய தாவீதால் மட்டுமே  முடியும் என்ற அர்த்தம் தான் அது!

தாவீதின் இந்த இரண்டு வாரிசுகளின் பேச்சு தாவீதுடைய பொல்லாங்கான நடத்தையை பிள்ளைகள் அனைவரும் அறிந்திருந்தனர் என்றே காட்டுகிறது. அந்தப் பொல்லாப்பின் விளைவுதான் பின்னர் தாவீதின் குடும்பத்துக்குள் முளைத்த பழிவாங்குதலும், கொலைகளும்!  தாவீது விதைத்த விதையின் அறுவடை!

தாமார் தன்னுடைய தகப்பனை ‘ராஜா’ என்று அழைத்ததைப் பார்த்தேன். ஒருவேளை அங்கு அவளுடைய அண்ணன் இல்லாமல் வேறொருவர் இருந்திருந்தால் அவள் ராஜா என்று சொன்னதை சற்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அங்கு இருந்த இருவருமே தாவீதின் பிள்ளைகள் ஆனால் அவர்களுக்குள் பேசும்போதும் தகப்பன் என்ற வார்த்தையையே காணோம். அப்படியானால் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்திருக்கும்?  தாமாருக்கும் அவள் தகப்பனுக்கும் இடையில் நல்ல அப்பா மகள் உறவு இருந்தமாதிரியே தெரியவில்லை!

இன்று பிள்ளைகளே உங்கள் உறவு உங்கள் அப்பாவோடு எப்படி இருக்கிறது? தகப்பன்மாரே உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது? பிள்ளைகள் உங்களை இவர் என்னுடைய அப்பா என்று பெருமையோடு சொல்ல முடிகிறதா?

அப்பா என்பது ஒரு அற்புதமான உறவு! அப்பா என்றால் ஒரு நல்ல நண்பர், பிள்ளைகளின் மனதை புரிந்தவர், பிள்ளைகளுக்காக உழைப்பவர், ஆலோசனை கொடுப்பவர், பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு களிப்பவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒருவேளை இன்று உங்களுடைய அப்பா உங்களோடு இல்லாவிட்டால், அல்லது தாமாரைப்போல உங்களுக்கு நல்ல அப்பா இல்லாதிருந்தால்,  உங்களை இந்த உலகத்தில் அதிகமாக நேசிக்கும் பரம தகப்பன் ஒருவர் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்! அவரை அப்பா பிதாவே என்று அழைக்கலாம்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment