கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2223 உள் நோக்கங்களும் கர்த்தருடைய சித்தத்திற்குள் இருக்க வேண்டும்!

2 சாமுவேல் 13: 21,22  தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.

ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட ஆரம்பித்தனர்! இவர்கள் என்ன செய்கிறார்கள்! ஒருவரை மற்றொருவர் பேசவிடாமல் தடுப்பதுதான் இவர்கள் உள்நோக்கமா என்று நினைக்கத்தோன்றியது!

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நம்முடைய உள்நோக்கம் வெளிப்படும் என்பது உண்மை அல்லவா! சில நேரங்களில் நம்முடைய உள்நோக்கத்தை நாம் மூடி மறைத்தும் வாழ்கிறோம்.

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, தாவீதுராஜா அம்னோன் தாமாரை ஏமாற்றி கற்பழித்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது கோபமாயெரிந்தான் என்று. ஆனால் அவன் அம்னோனைக் கூப்பிட்டு இந்த விஷயத்தைப் பற்றிக் கண்டித்ததாக வேதம் எங்குமே கூறவில்லை. தன்னுடைய வீட்டுக்குள் நடந்த இந்தப் பாவத்தைத் தட்டி கேட்க அவனால் ஏன் கூடாமல் போயிற்று என்று என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை! அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தால் அவனுடைய வீட்டிலும், நாட்டிலும் நீதி குறைவுபட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தாமாரின் அண்ணனாகிய அப்சலோம் தன்னுடைய தங்கையை யாரிடமும் இதைப்பற்றி பேசாதே என்று சொல்லித் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வைக்கிறான். அப்சலோம் அம்னோனிடம் இதைக்குறித்து பேசவில்லை ஆனால் அம்னோனை வஞ்சம் தீர்க்கும் உள்நோக்கம் அவனுக்குள் மறைந்திருந்தது.

நம்மில் எத்தனைபேர் இன்று கர்த்தருடைய சித்தத்திற்கு மாறாக வஞ்சம் என்ற உள்நோக்கத்தை மறைத்து வைத்திருக்கிறோம். என்றைக்காவது ஒருநாள் தருணம் கிடைக்கும்போது அவன் எனக்கு செய்ததை இரண்டுமடங்காக கொடுத்து விடுவேன், நான் அனுபவித்ததை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லையா? அதை மறைத்துக்கொண்டு ஒன்றுமே நடக்காதுபோல் நாம் நடந்து கொள்வதில்லையா? வார்த்தையில் ஒன்று மனதில் ஒன்று வைத்து பேசுபவர்களில் நாமும் ஒருவரா? வாயில் தேன்! மனதிலோ நஞ்சு!

நம்முடைய எண்ணமும் செயலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் பரிசுத்தமானவைகளாய் இருக்கவேண்டுமானால் நமக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  

வேதத்தில் யோவான் 16:13 ல் சத்திய ஆவியாகிய அவர்வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்று பார்க்கிறோம்.

சத்திய ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணும்போது நமக்குள் சத்தியம் அல்லது உண்மை நிலைத்திருக்கும். எந்த ஒளிவு மறைவுக்கும் இடம் இருக்காது. நம்முடைய செயல்களும், நம்முடைய உள் நோக்கங்களும் கர்த்தருடைய சித்தத்துக்குள் அடங்கியுள்ளன என்ற நிச்சயத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்குக் கொடுக்க முடியும்!

என் பிள்ளைகளே வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூறக்கடவோம். ( 1 யோவான் 3:18)

கர்த்தர்தாமே இந்த வேத வசனங்கள் மூலமாய் உங்களை இன்று ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர்ராஜ்

Leave a comment