Tamil Bible study

இதழ்:2240 தவறிப் போன ஒரு மகன் போல…

சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும்.

தேவனாகிய கர்த்தர் தாவீதை எதனால்நேசித்தார்?  இந்தத் தலைப்பை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம்,  சில வாரங்கள் படிக்கப்போகிறோம் என்று சொல்லியிருந்தேன். இன்று இரண்டாவது நாள்!

சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது எழுதிய வரிகள் தேவனாகிய கர்த்தர் அவனுடைய வாழ்வில் நேரிடையாக சந்தித்ததை அவன் உணர்ந்ததின் பிரதிபலிப்பு தான்.

தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தபின் தேவனாகிய கர்த்தர் அவனை சந்திக்க நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று படித்தோம். அவர் தாவீதுக்கு நெருங்கியவர்,  தைரியமாக சிங்காசனத்தின் முன் நின்று ராஜாவிடம், தேவன் அவன் செய்த யாவையும் அறிவார் என்று சொன்னார். அவர் தாவீதிடம் நீயேதான் அந்த மனிதன் என்று குற்றம் சாட்டினார்.

ஒருநிமிஷம்! தாவீதுடைய போதகர் வீட்டுக்கு வந்திருக்கிறார். உபசரணைக்கு பின்னர் போதகர் தாவீதை நோக்கி, தாவீதே நீ ஒரு விபசாரி, நீ ஒரு கொலை காரன், நீ ஒரு பொய்யன்! என்று சொல்வது போல் இல்லை!

தாவீது நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் நாத்தானுடைய உயிரை எடுத்து இருக்க முடியும்! ஆனால் தாவீது அதை செய்யவில்லை!  உண்மையை சுமந்து வந்த நாத்தானை அழித்து விடாமல், தாவீது தேவனிடம்,தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும் என்று அவரைப்பற்றி நன்கு அறிந்த அவருடைய கிருபையை நாடுகிறான்.

இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! தான் செய்த தவறுக்கு காரணம் சொல்லவில்லை! குற்றத்தை வேறொருவர் மேல் சுமத்த முயலவில்லை!  அல்லது நான் கர்த்தருக்காக எவ்வளவு காரியங்களை செய்திருக்கிறேன் என்று வாதாடவில்லை! கர்த்தர் அவனுடைய பாவத்தை சுட்டிக்காட்டியவுடன், அவன் குற்றத்தை உடனே ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய தயவையும், கிருபையையும் நாடுகிறான்!

தாவீது தன்னைத் தாழ்த்தி, அவர் பாதத்தில் விழுந்து,  தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும் என்று கதறியவுடன் இரக்கமே உருவான தேவனாகிய கர்த்தர் அவனைத் தன் கரத்தில் தூக்கி ஏந்தியிருப்பார்!

கர்த்தர் மிகுந்த இரக்கங்கள் கொண்டவர் என்று அவன் அறிந்ததால், தோல்வியின் உச்சத்தில் வெட்கி, நாணி தன்னுடைய தகப்பன் தன்னைக் கைவிடமாட்டார் என்று அவருடைய பாதத்தில் விழுந்தவுடன், கர்த்தர் அவனை தவறிப்போன  ஒரு மகனாகக் கண்டு தூக்கி எடுத்தார்.

ஆம்! கர்த்தர் தாவீதை நேசித்தார் ஏனெனில் அவன் தேவனாகிய கர்த்தரின் பிள்ளை!

தாவீதைப் போல கர்த்தர் நம்முடைய பாவங்களை திருத்தும்போதும், அவர் மிகுந்த இரக்கம் உள்ளவராக நமக்குத் தம்முடைய இரக்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்று நீ அவரை விட்டு ஒடிக்  கொண்டிருக்கலாம், அவருக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் கர்த்தர் உன்னைத் தம்முடைய மிகுந்த இரக்கங்களால் தம்முடைய பிள்ளையாகப் பார்க்கிறார். அவருடைய கிருபையை நீ காணும்படி செய்கிறார். உன்னைத் தம்முடைய மென்மையான கரத்தால் தொடுகிறார்!

கர்த்தர் தாவீதை நேசித்ததில் ஆச்சரியமே இல்லை! அவர் என்னையும் தம்முடைய மிகுந்த இரக்கங்களால் நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன்!

நீ அவரை அறிவாயா? அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர்! கிருபை உள்ளவர்! அவரண்டை நீ வரும்போது தம்முடைய மென்மையான கரத்தால் உன்னைத் தொடுவார்!

ஒரு சிறிய ஜெபம் உன் வாழ்க்கையை மாற்றும்! ஜெபிப்பாயா?

கள்ளனைப்போல கதறுகிறேன் என்னை மன்னியும்!

பேதுருவைப்போல கதறுகிறேன் என்னை மன்னியும்!

கல்லால் அடிக்கப்படவிருந்த பெண்ணைப்போல் புலம்புகிறேன் என்னை மன்னியும்!

உம்முடைய மிகுந்த இரக்கங்களால் என்னை மன்னியும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment