Tamil Bible study

இதழ்:2262 உம்மைப் பிரியப்படுத்தும் ஞானம் தாரும்!

1 இராஜாக்கள் 3: 16  அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

சாலொமோன் புதிதாக சிங்காசனம் ஏறியிருக்கிற ராஜா என்று பார்த்தோம். கிபியோனில் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, அவன் உம்முடைய ஜனத்தை நியாயம் தீர்க்க ஞானம் வேண்டும் என்று கேட்டான். அந்த விண்ணப்பம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருந்தது.

இன்று ஒருவேளை கர்த்தர் நமக்கு தரிசனமாகி நாம் வேண்டிய ஞானத்தை அருளினால், அவர் நமக்கு ஞானம் கொடுத்திருக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?  நம்முடைய ஜெபம் கேட்கப்பட்டது   என்று எப்படி தெரியும்? நாம் என்ன திடீரென்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகி விடுவோமா? அப்படியே ஆனாலும் அதற்கு  என்ன அடையாளம்?

சாலொமோனுக்கு கர்த்தர் அருளிய ஞானத்தை வெளிப்படுத்தத் தான் இந்த இரண்டு வேசிகள் சம்பவம் நடந்தது என்று நான் விசுவாசிக்கிறேன்.

1 ரஇராஜாக்கள் 3: 15 ல் பார்க்கிறோம் , சாலொமோனுக்கு நித்திரை தெளிந்த போது, அது சொப்பனம் என்று அறிந்தான், அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளை செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்து செய்தான்.

சாலொமோனின் தகப்பனாகிய தாவீதுதானே , கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் ( சங்:111:10) என்று கூறியது. அதனால் தான் அவன் எருசலேமுக்கு திரும்பிய பின்னர், அவன் எல்லா பரிசுகளையும் நமக்கு வழங்கும் தேவாதி தேவனுக்கு தகனபலிகளையிடுகிறான்.

நல்ல சுவையுள்ள உணவை ருசித்தால் தானே அதன் சுவை நமக்குத் தெரியும்!

எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தாவீது இஸ்ரவேலுக்கு ஒரு வல்லமையுள்ள ராஜாவாக இருந்தான். இஸ்ரவேல் மக்கள் இப்பொழுது இளம் சாலொமோனைப் பார்த்து இவன் எப்படி இருப்பானோ என்றுதானே நினைத்திருப்பார்கள்! எல்லா கண்களும் அவனையே நோக்கிக் கொண்டிருந்திருக்கும் அல்லவா? இவன் ஒரு சிறந்த ராஜா என்று எப்படி நிரூபிக்கப் போகிறான்?

இப்படிப்பட்ட வேளையில் தான் இந்த இரண்டு வேசிகளும் உள்ளே வருகிறார்கள்! என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

ஒரு நிமிஷம்!  ஞானம் என்றால் என்ன? நம்முடைய அறிவை சரியான இடத்தில், சரியான முறையில் உபயோகிப்பது தானே! சாலொமோனைப் பற்றிய உண்மை என்னவென்றால், அவன் ஒரு மிக சிறந்த ஞானவான், அவனுடைய ஞானம் அவனை கர்த்தருக்கு பயப்பட செய்தது. ஆனால் மிகவும் வருத்தத்திற்குரிய காரியம் என்னவென்றால் அதே ஞானம் அவனுக்கு அவப்பெயர் வரவும் காரணமாயிற்று.

இந்த சம்பவத்தை நாம் நாளையும் தொடருமுன், தேவனே எதை நான் அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் ஞானத்தை எனக்குத் தாரும், உமக்கு அருவருப்பானதை அருவருக்கும் ஞானத்தையும் தாரும், எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை எப்பொழுதும் பிரியப்படுத்தும் ஞானத்தையும் தாரும்  என்ற சிறிய ஜெபத்தை ஏறெடுப்போமா!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment