1 இராஜாக்கள்3: 24,25 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
உண்மை பெலவீனமாகத் தோன்றினாலும் உண்மை எப்பொழுதுமே மிகவும் பெலமுள்ளது என்று சொல்வார்கள்.
இரண்டு தாய்மார்! ஒரு குழந்தை! இருவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்! யாரிடம் உண்மை உள்ளது? யார் பொய் சொல்கிறார்கள்?
தேவனாகிய கர்த்தர் வாலிபனாகிய சாலொமொன் கேட்ட ஞானத்தை அவனுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல், அவனுடைய விண்ணப்பத்தில் மிகுந்த திருப்தியடைந்தார் என்று பார்த்தோம். இப்பொழுது அந்த ஞானத்தை பரீட்சை பார்க்கும் சம்பவம் இதோ வந்து விட்டது. எல்லோருடைய கண்களும் சாலொமோனின் நியாயத்தீர்ப்பின் மேல் நோக்கமாயிருந்தன.
சாலொமோன் அங்கிருந்தவர்களிடம் ஒரு பட்டயத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றவுடன் அங்கிருந்தவர்களுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்திருக்கும். சாலொமோன் பட்டயத்தை வைத்து குழந்தையை கொன்றுவிடுவானோ என்று எல்லோரும் கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சாலொமோன்ராஜா ஒரு இளம் வாலிப பிராயத்திலிருப்பவர்தானே, ஏதாவது அவசர முடிவு எடுத்து விடுவாரோ என்ற பயமும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருந்திருக்கலாம்.
ஆனால் தேவனாகிய கர்த்தரிடன் அவன் அவருடைய ஜனங்களை புரிந்து நியாயம் தீர்க்கும் ஞானத்தையல்லவா கேட்டிருந்தான்! அதுமட்டுமல்லாமல் அல்லாமல் அவனுடைய தகப்பனாகிய தாவீது அவனிடம் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவர் வழிகளில் நடக்கும்படியாக அறிவுரை சொன்னதையும் நாம் பார்த்தோம்.
ஒரு பட்டயத்தை கொண்டு வாருங்கள் என்று அவன் ஆணையிட்ட போது இவை இரண்டுமே அவன் உள்ளத்தில் எதிரொலித்திருக்கும் என்று நம்புகிறேன்.
இதை எழுதும்போது எனது கவனத்தில் இன்னொரு பட்டயம் வந்து கொண்டேயிருக்கிறது.
எபிரேயர் 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும்,
கர்த்தருடைய ஞானம் நமக்கு பட்டயத்தைப் போல கொடுக்கப்படும்போது நம்மால் நன்மையை தீமையிலிருந்து வகையறுக்க முடியும் என்று பார்க்கிறோம். இந்த ஞானத்தை தானே சாலொமோன் நாடினான்? தேவனுடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமையை வகையறுக்கவும் பரலோக ஞானம் வேண்டும் என்று ஜெபித்தான்.
இந்த சம்பவத்தை ஜெபத்தோடு படித்துக் கொண்டிருந்த போது , இந்த ஞானத்தினால் எத்தனை முறை என்னை, அவசரமாக பேசின வார்த்தைகளிலிருந்தும், அவசரமாய் தவறாக எடுத்த முடிவிலிருந்தும், தவறாக மற்றவர்களை நியாயம் தீர்த்ததிலிருந்தும் காத்துக் கொண்டிருக்க முடியும் என்று சற்று யோசித்துப் பார்த்தேன்.
சாலொமோன் எடுத்த முடிவைத் தொடர்ந்து படிக்கு முன்னர், தேவனுடைய வார்த்தை என்னும் பட்டயம் நமக்கு அளிக்கும் பரலோக ஞானத்துக்காக ஜெபிப்போம். நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்த ஞானம் நமக்கு அவசியம்!
கர்த்தர் தாமே இந்த ஞானத்தை வாஞ்சிக்கும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
