Tamil Bible study

இதழ்:2270 உன் வாழ்வின் நோக்கத்தை அறிவாயா?

1 இராஜாக்கள் 5:2-5  அப்பொழுது சாலொமோன் ஈராமிடத்தில் ஆட்களை அனுப்பி…..

ஆகையால் நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று இருக்கிறேன்.

இஸ்ரவேலின் புதிய ராஜாவாகிய சாலொமோனை அண்டை நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. தீருவின் ராஜாவாகிய ஈராம் முதலில் அவனுக்கு தன்னுடைய ஊழியர் மூல பரிசுகள் அனுப்பினான் என்று பார்த்தோம்.

இந்த நட்பு சாலொமோனுக்கு எவ்வளவு தேவைபட்டது என்று இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு காட்டுகிறது. சாலொமோன் ஈராமிடத்தில் ஆட்களை அனுப்பி, அவன் தாவீதோடு கொண்ட நட்பு இன்னும் தொடரும் என்பதை அவனுக்கு உறுதிப்படுத்தினான்.

அதுமட்டுமல்லாமல், இளம் சாலொமோன் எந்த பயமுமில்லாமல் , தம்முடைய தகப்பனாகிய தாவீதின் தேவனாகிய கர்த்தரே, தனக்கும் ஆண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறான். ஒவ்வொரு ராஜாவும் பிபற்றும் தேவர்கள், அவர்களுடைய ஜனங்களையும் எவ்வளவு பாதிக்கும் என்பது ராஜாக்களின் சரித்திரத்தை படிக்கும்போது தெரியும். இங்கு சாலொமோன் தம்முடைய தகப்பனின் தேவனாகிய கர்த்தரே தனக்கும் தேவன் என்று கூறுகிறான்.

இன்னும் சாலொமோன் எவ்வளவு அழகாக ஈராமிடம், வானத்தையும் பூமியையும் படைத்த தங்கள் தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலையும் எதிரிகளிடமிருந்து வெற்றியையும், கொடுத்திருக்கிறார் என்று கூறுவதைப் பாருங்கள்.

பின்னர் சாலொமோன் தன்னுடைய வாழ்வின் நோக்கமான, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதைப் பற்றியும் கூறுகிறான். அதனால் தான் தேவன் தம்மை சிங்காசனத்தில் அமரச் செய்தார் என்று அவன் திட்டமாக நம்பினான்.

நாம் தாவீதின் வாழ்க்கையின் நோக்கத்தோடும், சாலொமோனின் வாழ்வின் நோக்கத்தோடும் நம்மை நிறுத்தி பார்த்தால், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தேவனுடைய நோக்கம் வேறு படுவது நமக்குத் தெரியும்.

அப்போஸ்தலனாகிய பவுல்  கிறிஸ்தவர்களை கொல்ல புறப்பட்டு தமஸ்குவுக்கு போய்க்கொண்டிருந்தபோது, தேவன் அவன் வாழ்வில் வைத்திருந்த நோக்கத்தை புரிந்து கொண்டான். பவுல் எபேசு திருசபையில் இருந்த  தம்முடைய நண்பர்களுக்கு எழுதும்போது, தேவன் நம்மை உலகத் தோற்றத்துக்கு முன்னே தெரிந்து கொண்டார் என்று எழுதுகிறார். (எபே 1:4)

அப்படியானால் என் வாழ்வின் நோக்கம் என்ன என்று நாம் சிந்திக்கிறோம் அல்லவா!  நான் அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேனா?

கர்த்தராகிய இயேசு பரலோகத்திலுள்ள தன்னுடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே இந்த பூமிக்கு வந்தார். அது ஒன்றே அவரது நோக்கமாயிருந்தது. அவர் இந்த பூமியில் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் இந்த நோக்கம் பிரதிபலித்தது.

என்னுடைய வாழ்வில் இவ்வாறு ஒரே ஒரு நோக்கம் இருக்குமானால் ….. அது என்னுடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருந்தால்…… என்னுடைய எல்லா  முடிவுகளும், செயலும் அந்த ஒரே நோக்கத்துக்காக செயல் பட்டால்…… எப்படியிருந்திருக்கும்?

எத்தனை தவறான முடிவுகள்?? எத்தனை வியாகுலங்கள்???? நோக்கம் தவறிப்போனதால் அல்லவா??

2 கொரி 5:9  பவுல் எழுதுகிறார், நாம் சரீரத்தில் குடியிருந்தாலும், குடியிராமற்போனாலும், அவருக்கு பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

தேவனுடைய சித்தத்தை மாத்திரமே நம்முடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, அவருடைய நாமத்துக்குக் மகிமையாக வாழ தேவனுடைய உதவியை நாடி ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment