Tamil Bible study

இதழ்:2271 மரியாதை கொடுக்கத் தவறாதே!

1 இராஜாக்கள் 5:6, 7, 12   ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்கள் வெட்டக் கட்டளையிடும்.சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும் …… நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.

ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு….. தாவீதுக்கு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்தரிக்கப்படுவாராக என்று சொல்லி, 

….. ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதுக்கும் , தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கும் நடுவில் உள்ள நல்லதொரு தொடர்பையும், அதன் பின்னர் அந்த அற்புதமான தொடர்பு ராஜாவாகிய சாலொமோனுடனும் இருந்ததையும்  நமக்குத் தெளிவு படுத்துகிறது.

அது மட்டுமல்ல சற்று சரித்திரத்தையும் திரும்பிப் பார்ப்போமானால் இஸ்ரவேலில் ராஜாக்கள் ஆண்ட காலத்தில், துறைமுகப் பட்டினங்களாகிய தீருவும், சீதோமும் , பினீசியாவுக்குள் அடங்கின பகுதியாயிருந்தது.

வேதத்தில் யோசுவாவின் புத்தகத்தில், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் நாட்டை பங்கு போட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த இரண்டு பட்டினங்களைப் பற்றி முதன் முறையாகப் படிக்கிறோம்.

சாலொமோன் ராஜா தேவனுடைய பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டும் பணியை மேற்கொண்ட பொழுது, ஆலயப் பணிக்குத் தேவையான மரங்களை இறக்குமதி செய்ய, இந்தத் துறைமுகப் பட்டினங்களின் உதவி அதிகமாகத் தேவைப்பட்டது. தாவீது ராஜா ஈராமுடன் கொண்ட நீண்ட கால நட்பு சாலொமோனுக்கு பணியை இலகுவாக்கியது.

ஆகிலும், சாலொமோன் தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு அளித்த மரியாதையே எனக்கு இன்றைய தியானத்துக்கு வழி வகுத்தது.

கர்த்தருடைய பெரிய கிருபையால் சாலொமோன் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தான். தாவீதின் காலத்தில் இஸ்ரவேல் ஒரு பெலமுள்ள, செல்வாக்கு மிக்க நாடாக உருவெடுத்து விட்டது.  தாவீதும், சாலொமோனும் இது தேவனுடைய கிருபை என்று அறிந்து அவருக்கு மகிமையைக் கொடுத்தனர். இப்பொழுது சாலொமோனுக்கு தேவன் அளித்திருந்த விசேஷ ஞானம் பற்றிய செய்தி வேறு காட்டுத்தீ போல பரவியிருந்தது.

இங்கு சாலொமோன் தன்னுடைய எந்த அதிகாரத்தையும் உபயோகப்படுத்தாமல், தன்னை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பேசாமல், தீருவின் ராஜாவிடம் கேதுரு மரங்கள் வேண்டி உதவிகேட்பதைப் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், தீருவின்  ராஜாவுடைய ஊழியரின் மரவேலை செய்யும் தாலந்துக்கு பதிலுதவியாக சாலொமோன் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகக் கூறுகிறான்.

தன்னுடைய இளவயதில் வல்லமை மிக்க நாடான இஸ்ரவேலை ஆண்ட  ராஜாவாகிய சாலொமோனிடம் காணப்பட்ட மரியாதையைப் பார்க்கும்போது, மரியாதை என்ற வார்த்தையை சற்று சிந்திக்கத் தோன்றியது.

இன்றைய உலகத்தில் வாழும் நாம்  எல்லாவற்றையும் பணத்தால் வாங்கி விடலாம் என்று நினைப்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய காரியம். தாவீதும் ஈராமும் கொண்டிருந்த நட்பு பணத்தால் வாங்க முடியாது. சாலொமோன் ஈராமிடம் காட்டிய மரியாதை கலந்த நட்பு பணத்தால் வாங்க முடியாது. அந்த  மரியாதை தேவனுடைய நாமத்துக்கு மகிமையைக் கொண்டு வந்தது.

மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்க வேண்டும் என்பார்கள்.  நம்முடைய எண்ணங்களை அங்கீகரிக்காத ஒருவரிடம் நாம் மரியாதையாகப் பேசும்போது, அந்த நபரிடம்கூட நல்ல நட்பு ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல் நாம் காட்டும் மரியாதை தேவனுடைய நாமத்துக்கு மகிமையைக் கொண்டு வரும்.

எல்லாரையும் கனம் பண்ணுங்கள்.சகோதரரிடத்தில் அன்பு கூறுங்கள்  ( 1 பேதுரு 2:17)

இதை ஒருபோதும் நம் வாழ்வில் மறந்து போக வேண்டாம்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment