1 இராஜாக்கள்:6:1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
நாம் பிறந்த போதே தேவன் நம்முடைய வாழ்வில் ஏதோ நோக்கம் கொண்டிருந்தார் என்பதை உண்மையிலேயே விசுவாசிக்கிறாயா? அப்படியானால், தேவன் தம்முடைய நோக்கத்தை முதலிலிருந்து கடைசிவரை வெளிப்படுத்தியிருக்கிறாரா?
இந்த இரண்டு கேள்விகளே சாலொமோனின் வாழ்விற்குத்தான் பொருத்தமாக உள்ளது என்ற எண்ணம் இன்றைய வேதாகமப் பகுதி எனக்குக் கொடுத்தது.
சாலொமோன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் பருவத்திற்கு வந்தபோதே அவனுக்கு தன் வாழ்க்கையில் தேவன் கொண்டிருந்த திட்டம் தெரியும். அவன் தேவனுடைய திட்டத்தையும், தன் தகப்பன் அவன் வாழ்வில் கொண்ட திட்டத்தையும் சந்தோஷமாகத் தன் வாழ்வின் நோக்கமாக ஏற்றுக் கொண்டான்.
அவன் பதவியேறிய நாலாம் வருஷம் தேவனுடைய பிரம்மாண்டமான ஆலயத்தைக் கட்டும் பணியை ஆரம்பிக்கிறான்.
வேதத்தில் இந்த அளவுக்கு எந்த தனி மனிதனின் வாழ்க்கையிலும் தேவனுடைய நோக்கம் வெளிப்படுத்தவில்லை. மோசே எகிப்தில் இளவரசனாக நாற்பது வருடங்கள் வாழ்ந்தபோதும், பின்னர் வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோதும் , அவன் தன்னுடைய கடைசி நாற்பது வருடங்களில் மனித ஆடுகளை வழிநடத்தும் பணியை தேவனாகிய கர்த்தர் தனக்கு ஆயத்தப்படுத்தியிருந்ததை அறியாதிருந்தான்.
உன்னுடைய வாழ்விலும் என்னுடைய வாழ்விலும் நிச்சயமாக தேவனாகிய கர்த்தர் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளார். தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை திட்டமாக அறிந்த சாலொமோனைப் போல அல்லாமல் நான் பல நேரங்களில், நீரை விட்டு வெளியே வந்த மீனைப்போல என்னுடைய வாழ்வில் போராடிக் கொண்டிருந்திருக்கிறேன்.
உங்களுடைய வாழ்வில் தேவனுடைய நோக்கம் என்ன என்று அறிய நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? தேவன் உங்கள் முன் வைக்கும் பாதையில் நடக்க நீங்கள் ஆயத்தமா? அது இருளாய்த் தோன்றினாலும் என்னைக் கரம் பிடித்து நடத்தும் ஆண்டவரே என்று ஜெபிப்பீர்களா?
ஆண்டவரே அந்தப் பாதை வேண்டாம், இதுவே சுலபமான வழி,
ஆண்டவரே அந்தப் பாதை வேண்டாம், இதுவே சுவாரஸ்யமான வழி,
ஆண்டவரே அந்தப் பாதை வேண்டாம், இதுவே என்னுடைய வழி,
என்று நான் தெரிந்து கொள்ளும் தவறான பாதையை மன்னியும்!
என் வழிகள் உன் வழிகள் அல்ல என்று என்னை உம்முடைய வழியிலே நடத்தும்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
