1 இராஜாக்கள்: 6: 12 -13 நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம்நடந்து கொள்ளும்படிக்கு அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
இன்றைய வேதாகமப் பகுதியையும், சாலொமோனுடைய வாழ்க்கையையும் ஆராய்ந்து படிக்கும்போது, மூன்று வார்த்தைகள் என் மனதில் வந்து கொண்டேயிருந்தன!
இன்று என் மனதில் வந்த முதல் வார்த்தையைப் பற்றி சிந்திக்கலாம்!
தேவனுடைய வாக்கு என்ற முதல் வார்த்தை சாலொமோனுடைய வாழ்வில் முற்றிலும் நிறைவேறிற்று. தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த செல்லக் குழந்தையாகிய அவன் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான் என்று தேவன் வாக்குக் கொடுத்தார்.
சில நேரங்களில் கர்த்தருடைய வாக்கு நமக்கு ஒரு வங்கியின் வெற்று காசோலை போலத் தோன்றுகிறது. ஆனால் தேவனுடைய வாக்கைப் பற்றி சற்று ஆழமாகப் படிப்போமானால், அதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய காரியங்கள் உள்ளன என்று புரியும்.
அநேக நேரங்களில் தேவனுடைய வாக்கானது அவர் நமக்கு அளிக்கும் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களுடன் இணைக்கப் படுகிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருவருக்கு இருந்த சொத்துகள், வேலையாட்கள், ஆடுமாடுகள் இவை தேவனுடைய வாக்கோடு இணைக்கப்பட்டன்.
மோசே மரிக்கும் முன் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த பிரசங்கம் அடங்கிய உபாகமம் 28 ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்போது கிடைப்பவைகளாகும். அதே நேரத்தில் கீழ்ப்படியாமல் போனால் சாபங்களும் உள்ளன. அவர் சொன்னதை நிறைவேற்றுவார் என்று நமக்கு எடுத்துரைக்கும் வேதாகமப் பகுதி இது.
தாவீதிடமும், சாலொமோனிடமும் தேவன் வாக்களித்த போது, அவர்கள் அதை முற்றிலும் விசுவாசித்தனர். தேவன் வாக்கு மாறார் என்று முற்றும் நம்பினர். இளம் சாலொமோன் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தன்னில் நிறைவேறுவதைக் கண்கூடாகக் கண்டான்.
நாலாம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயப்பணி பதினோராம் ஆண்டு நிறைவுற்றது. அந்த வேளையில், சாலொமோனின் உள்ளம் தேவனுடைய வாக்கு நிறைவேறிற்று என்பதை உணர்ந்து அவரை ஸ்தோத்தரித்தது.
இன்றைய நூற்றாண்டில் , நம்முடைய தினசரி வாழ்க்கையில் தேவனுடைய வாக்குகள் நிறைவேறிக் கொண்டிருப்பதை நாம் உணர முடிகிறதா?
பவுல் கொரிந்து பட்டணத்திலிருந்த தன்னுடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கு எழுதும்போது, கூறிய இந்த வார்த்தைகள் என் உள்ளத்தில் திட நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே ( 2 கொரிந்தியர் 1:20)
ஆம்! தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஒவ்வொரு வாக்கும் ஆம் என்று முத்திரையிடப்படுகிறது.
இதைத்தான் பிஸ்காவின் கொடுமுடியில் மோசே கற்றுக் கொண்டார். இதைத்தான் ஆபிரகாமும், சாராளும் தங்கள் குமார்னாகிய ஈசாக்கின் பிறப்பில் கற்றுக் கொண்டனர். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் அவருடைய வாக்கு நிறைவேறியதை நாம் கண்டிருக்கிறோம்.
இன்று உன்னை சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தாலும், தேவன் வாக்கு மாறாதவர், அவர் வாக்கு ஒவ்வொன்றும் ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது என்பதை மறந்து விடாதே.
தேவனுடைய வாக்குகள் இருளில் மின்னும் நட்சத்திரங்கள் போன்றவை என்று யாரோ கூறியிருக்கிறார். இருள் அதிகமாகும்போதுதான் நட்சத்திரம் அதிகமாக மின்னுவதும் நமக்குத் தெரியும் அல்லவா!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
