Tamil Bible study

இதழ்: 2277 அதிகமாய் அறிந்து கொள்ள வாஞ்சை!

1 இராஜாக்கள் 10:1  கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக,

சேபாவின் ராஜஸ்திரீ என்ற பட்டப்பெயர் கொண்ட பெண் அவள்.  வேதாகம வல்லுநர்கள் அவளை தெற்கத்திய ராஜஸ்திரீ என்றும் கூறுகிறார்கள் ஏனெனில் சேபா ஒரு தெற்கத்திய நாடு.  அவள் எங்கிருந்து வந்தாள் என்பது முக்கியம் அல்ல, அவள் எதற்காக வந்தாள் என்று பார்ப்போம்.

சேபாவின் ராஜஸ்திரீ , கர்த்தருடைய நாமத்தைக் குறித்து சாலொமோனுக்கு உண்டான கீர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனிடம் எருசலேமுக்கு வந்தாள் என்று வேதம் சொல்கிறது. அவள் சாலொமோனக் காணவோ அல்லது பழகவோ வரவில்லை. அவனுடைய தேவனைக் குறித்து அறிய ஆசைப்பட்டாள். அவள் வந்ததின் இன்னொரு நோக்கத்தையும் இந்த வசனம் நமக்கு விளக்குகிறது. அவள் விடுகதைகளால் அவனை சோதிக்கும்படி வந்தாள் என்று பார்க்கிறோம்.

அவள் சாலொமோனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருந்தாள். அவனுடைய ஞானம், அவனுடைய கூர்மையான அறிவு, அவனுடைய எழுத்தின் அரிய  படைப்புகள் எல்லாமே அவள் கேள்விப்பட்டதுதான். இவை எல்லாவற்றையும் நேரில் பார்த்து ,கடினமானவற்றையும் அறிந்துகொள்ள ஆசைப்பட்டே அவள் வந்தாள்.

எதையும் சோதித்துஅறிந்து, அதைக் கற்றுக் கொள்ளும் ஆவலுடன் இந்த ராஜஸ்திரீ சாலொமோனின் அரமனைக்குள் வருகிறாள். அவளுடைய நாட்டின் கலாசாரமோ, அல்லது அவர்களுடைய நம்பிக்கையோ , அவர்களுடைய தேவர்களோ அவளுடைய திறந்த மனதுக்கு அணை போட முடியவில்லை.

வேதாகம வல்லுநராகிய மத்யூஹென்ரி அவர்கள், வேதத்தை ஆழமாக படிப்பதைப் பற்றிக் கூறிய போது, கடினமானவைகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் தரும்படி தேவனை நோக்குவோம் என்று எழுதினார். ஒருவேளை அவர் அப்படி எழுதியபோது அரேபிய தேசத்திலிருந்து வந்த ராஜஸ்திரீ தான் அவருடைய நினைவில் இருந்தாளோ என்னவோ!

என்னைப் பொருத்தவரை சேபாவின் ராஜஸ்திரீ ஒரு ஆச்சரியமான பெண். தான் கேள்விப்பட்டவைகளை நேரில் சோதித்து அறிந்து கொள்ள ஆசைப்பட்டாள்.  கர்த்தருடைய நாமத்தையும், அவர் சாலொமோனுக்கு கொடுத்த ஞானத்தையும் அறிய ஆசைப்பட்டாள்.

நாமும் இந்தப் பெண்ணைப்போல கர்த்தருடைய வார்த்தைகளின் மூலமாய், அவரையும், அவருடைய நாமத்தின் வல்லமையையும் பற்றி அதிகமாய் அறிந்து கொள்ள முயற்சி செய்வோமா?

அந்த முயற்சி நிச்சயமாக  நாம் தேவனுடைய ஆவியானவர் மேல் சார்ந்து வாழ உதவி செய்யும்.

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment