Tamil Bible study

இதழ்:2282 நீங்களும் ருசி பாருங்களேன்!

1 இராஜாக்கள் 10:7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும்  அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை, இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்….

இன்றைய வேதாகமப் பகுதி எனக்கு ரோமர் 14:5 ல் , ..அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு கூறியது நினைவுக்கு வந்தது.

இதை என்னிடம் பிரித்து எழுதும்படி சொன்னால் இப்படித்தான் எழுதுவேன்,

‘வேதாகமத்தை வாசி, ஆழமாகப் படி, அதைக் கற்றுக்கொள், உன் உள் மனதில் நிச்சயமாய் விசுவாசி!’

ஆனால் பல நேரங்களில் நாம் ஆழமாகப் படித்து உண்மையை அறிந்து கொள்ளும்  வேலையை செய்வதே இல்லை. அதை மற்றவர்களிடம் விட்டு விடுகிறோம். அவர்கள் பிரசங்கத்தில் கண்டதாகக்  கூறும் உண்மைகளை நாமே கண்டதாகக் கற்பனை பண்ணி பேசுகிறோம்.

இதிலிருந்து நாம் சேபாவின் ராஜஸ்திரீயை பற்றி என்ன அறிந்து கொள்ளப்போகிறோம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?

இந்த அந்நிய தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனிடம் கூறுவதைப் பாருங்கள்.  நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும்  அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை, இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்…. என்கிறாள்.

அவள் செவிகளால் கேள்விப்பட்டதை ஓரளவுக்கு நம்பினாலும், எவ்வளவு கடினமான பயணமானாலும் சரி, தன் கண்களால் காண வேண்டும் என்று முடிவு செய்தாள்.

நாமும் ஏன் இந்தப்பெண்ணைப் போல உண்மைகளை ஆழமாகத் தேடி அறியக்கூடாது என்று தோன்றியது எனக்கு. ஒருவேளை நாம் வேதத்தின்மூலம்  நம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பற்றி அதிகமாய் அறிய் , ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் கொடுக்க வேண்டியிருக்கலாம். உங்களில் ஒருசிலர் பிறர் பிரசங்கிப்பதையே கேட்க பலமணி நேரம் கொடுக்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் போதிப்பதையே  கேட்பதைவிட நானே அவருடைய பாதத்தில் அமர்ந்து கற்றுக் கொள்ளும் அனுபவமே தனி! அது ருசித்தால் தான் தெரியும்!

உண்மையாக சொல்லப்போனால் கடந்த 15 வருடங்களாக இந்த ராஜாவின் மலர்களுக்காக நான் வேதத்தை பல மணி நேரங்கள் படித்து,  ஆழமான கருத்துகளை உணர்ந்தபின்னரே எழுதுவதுண்டு. இதனால் நான் வேதத்தை ருசி பார்க்கிறேன்! உங்களையும் ருசிபார்க்க அழைக்கிறேன்!

தயவுசெய்து பலமணி நேரங்கள் டெலிவிஷன் போதனைகளுக்கு நேரத்தை செலவிடாதீர்கள்!

அதில் ஒருமடங்கு நேரம் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்தால் அவருடைய மெல்லிய சத்தம் உங்கள் செவிகளில் தொனிக்கும். பிறர் சொல்லி கேட்பதைவிட, அவரோடு செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் அவருடைய மகத்துவத்தை நம்முடைய கண்ணால் காண உதவும்!  

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment