Tamil Bible study

இதழ்:2283 தலைமுறையாய்த் தொடரும் ஆசீர்வாதம்!

1 இராஜாக்கள் 10:8-9 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் , எப்போதும் உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக.

சேபாவின் ராஜஸ்திரீ தன்னுடைய அழகிய பயணத்தின் கடைசிப் பகுதிக்கு வருகிறாள். அவளுடைய கடினமான விடுகதைகளால் சாலொமோனை சோதித்த பின்னர், தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அளித்திருந்த ஞானத்தையும், அவனுடைய ராஜ்யத்தின் செழிப்பையும், அங்கு காணப்பட்ட ஒழுங்கு முறைகளையும் தன்னுடைய கண்ணாரக் கண்டு அவள் தன்னுடைய ஆச்சரியத்தை அடக்க முடியாதவளாய், இத்தனை மகத்துவத்தை அவனுக்கு வழங்கிய , சாலொமோனுடைய தேவனை ஸ்தோத்தரிக்கிறாள்.

இந்தப் பகுதியை வாசித்தபோது எனக்கு மத்தேயு 21:9 ல், 

முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் ..

என்று ஆர்ப்பரிப்பதை நினைவூட்டியது.

தேவனுடைய மகத்துவத்தைக் கண்கூடாகக் காணும் ஒருவர், அது சேபாவின் ராஜஸ்திரீயாக இருக்கட்டும், அல்லது இயேசுவை பின்சென்ற திரளான ஜனங்களாவாவது இருக்கட்டும், அல்லது அதை ஒவ்வொருநாளும் கண்கூடாகக் காணும் நாமாக இருக்கட்டும், அந்த ஆச்சரியத்தை அடக்க முடியாமல், அந்த தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம் அல்லவா!

தேவனுடைய கரத்திலிருந்து எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களை பெறும் நாம் ஆனந்த சத்தத்துடன் ஆர்ப்பரித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்தரிக்கிறோம்.

இதை எழுதும்போது அப்போஸ்தலர் 3:1-12 ல் பார்க்கும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. பேதுருவும் யோவானும் ஆலயத்துக்கு போகிறார்கள், அங்கே ஒரு முடவன் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறான். இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் பிச்சைக் கேட்கிறான். அதற்கு பேதுரு வெள்ளியும் பொன்னும் எங்களிடத்தில் இல்லை என்று கையை விரிக்கிறார். பின்னர் அவர், என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று அவனைப் பிடித்துத் தூக்கி விடுகிறார்.  வேதம் சொல்கிறது அவன் உடனே குதித்தெழுந்தான் என்று, அது மட்டுமல்ல, அவன் நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு அவர்களுடனே ஆலயத்துக்கு சென்றான்.  அவனுக்கு சம்பவித்ததைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு பிரம்மித்தார்கள் என்று பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட ஆச்சரியமும், பிரம்மிப்பும் தான் சேபாவின் ராஜஸ்திரீயின் வார்த்தைகளில் தெரிந்தது. இயேசுவின் வல்லமையைக் கண்ணாரக்கண்ட திரளான மக்களின் முகத்தில் தெரிந்தது, பேதுருவின் கட்டளையால் குதித்தெழுந்த முடவனைக் கண்டவர்கள் முகத்தில் தோன்றியது.

தேவனுடைய ஆசீர்வாதத்தை கண்ணாரக் கண்ட ஒவ்வொருவரும்

நம்முடைய பிதாவாகிய தேவனுடைய அன்பும்,

குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,

பரிசுத்த ஆவியானவருடைய அந்நியோன்ய ஐக்கியமும்

நம்மனைவரோடும் என்றென்றைக்கும் இருப்பதாக

என்று செய்யும் ஜெபத்தோடு அது தலைமுறை தலைமுறையாய்த் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment