மத்தேயு 12:42 தென் தேசத்துக் ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்….. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்த சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றம்சுமத்துவாள்.
இன்று கடைசியாக பத்தாவது நாளாக சேபாவின் ராஜஸ்திரீயைப் பற்றிப் படிக்கப் போகிறோம்.
இன்றைய நாட்களில் அநேக தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தீர்க்கதரிசிகளைப் பற்றியும் கேள்விப் படுகிறோம். உண்மையாகவே தேவனுடைய செய்தி தான் நமக்குக் கொடுக்கப்படுகிறதா அல்லது அது ஒரு தனிப்பட்ட மனிதனின் செய்தியா என்று கூட நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உள்ளத்தில் விசுவாசத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்யக்கூடியவை தான். அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் இந்த சேபாவின் ராஜஸ்திரீயைப் பற்றி எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களும்.
மத்தேயு 12: 37 ல் பரிசேயரும், வேதபாரகரும் வந்து கர்த்தராகிய இயேசுவிடம் தம்மைக்குறித்து அடையாளங்களைக் கொடுக்கும்படி கேட்டபொழுது, நியாயத்தீர்ப்பின் நாளிலே சேபாவாவின் ராஜஸ்திரீ சாட்சி சொல்லுவாள் என்று கூறினார்.
இந்த தெற்கு தேசத்து ஸ்திரீயைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை நாம் இந்த இராஜாக்களின் புத்தகம் அல்லாத புத்தகத்தில் பார்க்கப் போகிறோம்.
சங்கீதம் 72 ல் சேபாவின் ராஜஸ்திரீயின் வருகை தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டுள்ளது.
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
-சங்கீதம் 72 : 10
இந்த சங்கீதம் சாலொமோனால் எழுதப்பட்டது என்று கூறப்பட்டாலும், இது தாவீது தன்னுடைய மரணப் படுக்கையில் இருந்தபோது சாலொமோனுக்காக ஜெபித்த ஜெபம். 20ம் வசனம் இதை நமக்குத் தெளிவு படுத்துகிறது.
அதுமட்டுமல்ல , இந்த சங்கீதம், எதிர்காலத்தில் கட்டப்படப் போகும் இயேசுவின் ராஜ்யத்தைப் பற்றிய தீர்க்கதரிசனமும் கூட. இதை ஒருவேளை தாவீது சொல்ல, சாலொமோன் எழுதியிருக்கலாம்.
இங்கு சேபாவின் ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டு வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுபவர்கள் எப்பொழுதுமே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் என்றழைக்கப்படும் இஸ்ரவேலர் மட்டுமே இல்லை என்று வேதம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. நான் முதலிலேயே எழுதியபடி, இந்த புறஜாதியினரின் நம்பிக்கையோ, அவர்களுடைய தேசமோ, அவர்களுடைய தேவர்களோ , அவர்கள் மூலமாக தேவசித்தம் நிறைவேறத் தடையாயிருக்க முடியவில்லை. இந்த உண்மை அரேபிய ராணியின் வருகையிலும் விளங்கியது.
1 இராஜாக்கள் புத்தகத்தைப்பற்றி எழுதும்போது டேல் டேவிஸ் அவர்கள், 10 அதிகாரம் ஒரு தீர்க்கதரிசன அதிகாரம் என்கிறார். சாலொமோனின் ராஜ்யம் அன்றைய காலத்தில் அண்டைய நாடுகளைத் தன் வசமாகத் திருப்பினது, இந்த பூமியில் வரப்போகும் தேவனுடைய ராஜ்யத்துக்கு ஒரு முன்னொளியாகும் என்கிறார். சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுக்கு வெகுமானங்கள் சுமந்து வந்ததும் ஒரு அடையாளமே என்கிறார்.
இதைவிட நாம் சற்று அதிகமாக இந்த அரேபிய ராணியின் வருகையை ஒரு அடையாளம் என்று நாம் புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு , மதத் தலைவர்களைப் பார்த்து கூறியபோது காண்கிறோம்.
இந்த சேபாவின் ராஜஸ்திரீயின் வருகை எதற்கு அடையாளம்? தேவனாகியக் கர்த்தரைப் பற்றி அதிகமாக அறியத்துடித்த அவளுடைய வாஞ்சையே அவளை எல்லாக் கடினமானப் பாதைகளையும் தாண்டி அவரைத் தேடி வரச் செய்தது. அவள் வாஞ்சித்த அத்தனையையும் அவள் கற்றுக்கொள்ளும்வரை எதுவுமே அவளைத் தடை செய்ய முடியவில்லை. தேவனாகியக் கர்த்தரால் விசேஷமான ஞானம் வழங்கப்பட்ட ஒருவரையே அவள் தேடி வந்தாள்!
ஆனால் பரிசேயரோ, தேவனாகியக் கர்த்தரே அவர்களோடிருந்த போது அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அவர்கள் அறிந்திருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு, அவருடைய போதகத்தை அலட்சியப்படுத்திவிட்டு, ஒரு அடையாளத்தை தாரும் என்றார்கள். அவர்களுக்கு எதிராக தூர தேசத்திலிருந்து அவரை வாஞ்சையோடுத் தேடி வந்த சேபாவின் ராஜஸ்திரீ நியாயத்தீர்ப்பின் நாளிலே சாட்சி சொல்வாள் என்று இயேசு கூறினார்.
இது நமக்கும் பொருந்தும் அல்லவா? கர்த்தராகிய இயேசு சாலொமோனைப் பார்க்கிலும் பெரியவர், சாலொமோனுக்கு ஞானத்தை அருளியவரே நம்மோடிருக்கும்போது நாம் அவரை வாஞ்சையோடு தேடி, ஒவ்வொருநாளும் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டாமா?அவர் பிதாவோடு இருப்பதால் இயேசு மட்டுமே பிதாவை நமக்கு வெளிப்படுத்த முடியும்!
நாம் இதை செய்யாவிட்டால், ஐயோ எனக்கு நேரமே இல்லை, குடும்ப பாரத்தை சுமக்க முடியவில்லை, நான் அதிக நேரம் வேலை செய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும், என் பிள்ளைகளைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி தேவனுடைய முகத்தைத் தேடாமல் இருந்தால் ஒருவேளை அந்த தெற்கத்திய ராணி நமக்கு விரோதமாகக் கூட சாட்சி சொல்லலாம்! ஜாக்கிரதை!
இன்று அவருடைய முகத்தை வாஞ்சையோடு தேடுவாயா?
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
