Tamil Bible study

இதழ்:2289 எதைக் கொண்டு உன்னை திருப்திபடுத்துகிறாய்?

1 இராஜாக்கள் 11:4,9,10   சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்…..ஆகையால் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும்…. அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

தானியேலின் புத்தகம் 3 ம் அதிகாரத்தில் பாபிலோனின் ராஜாவாகிய நெபுகாத்நேச்சார் ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, கீத வாக்கியங்களின் சத்ததைக் கேட்கும்போது அதைத் தாழ் விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய சகல தேசத்தின் எல்லா மக்களுக்கும்  கட்டளையிட்டான். அதை செய்யத் தவறினால் அக்கினிச் சூளையின் நடுவில் போடப்படுவார்கள் என்று கட்டளையிட்டான்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று எபிரேய இளைஞர்கள் ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவர்கள் அக்கினிச் சூளையிலே தள்ளப்பட்டார்கள். நான் என்னுடைய சிறுவயதில் இந்த மூன்றுபேரும் அக்கினிசூளையிலே அவியாமல் இருந்து, ஒரு துளிகூட பாதிக்கப்படாமல் வெளியில் வந்ததைப் பற்றி முதன் முதலில் புரிந்து கொண்டபோது, ஏதோ ஒரு போட்டியில்  கர்த்தருடைய கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது போல மகிழ்ந்தேன்.

ஆனால் நான் வளர்ந்து வேதத்தை அதிக்மாக படிக்க ஆரம்பித்தபோதுதான் நான் சிறுவயதில் புரிந்து கொண்டதைவிட அதில் மிகப்பெரிய உண்மை இதில் புதைந்து இருந்ததை அறிய முடிந்தது.   ராஜாவாகிய சாலொமோனும், ராஜா நெபுகாத்நேச்சாரும் ஒருவிதத்தில் என் கண்களுக்கு ஒரேமாதிரியாகத் தென்பட்டார்கள். மிதமிஞ்சியதான செல்வசெழிப்பும், வெற்றிகளும், புகழும், பொன்னும் வெள்ளியும் அவர்கள் இருவருடைய வாழ்க்கையையும் ஆளத்துவங்கியது. நெபுகாத்நேச்சாருடைய பொற்சிலையும், சாலொமோனுடைய மிகுதியான பொன் குவிப்பும் ஒரேவிதமான விக்கிரகம் போலவே எனக்குத் தோன்றியது.

400 வருடங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் எகிப்தியரின்  விக்கிரகங்களை பார்த்து வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டதும், தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ,

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் ( யாத்த்:20:3) 

என்ற கட்டளையைக் கொடுத்தார். ஆனால் இன்று, ‘ விக்கிரகங்களை நாம் தேடிப் போகவேண்டாம்.  நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட எதை, யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவையே நம்முடைய விக்கிரகம் அவை நம்முடைய வாழ்க்கையில் அதிகமாகவே காணப்படுகின்றன’ என்று டி.எல் மூடி பிரசங்கியார் கூறியவிதமாக நம்முடைய ஒவ்வொருவர் வாழ்விலும் பல விக்கிரகங்கள் உள்ளன.

தனக்கு கிடைத்த மிகுதியான பொன்னால் தன்னை திருப்தி படுத்த ஆரம்பித்த சாலொமோன் ராஜா, தனக்கு கிடைத்த மிகுதியான மனைவிகளாலும், தனக்கு கிடைத்த மிகுதியான புகழாலும், தன்னை திருப்தி படுத்திக் கொண்டான். அவன் உலகமே தலைகீழாக மாறிவிட்டது. அவனால் தேவனாகிய கர்த்தர் மேல் நோக்கமாயிருக்க முடியவில்லை. அவருடைய சித்தத்தை அறிய முடியவில்லை, அவரோடு உறவாட முடியவில்ல! அவன் வாழ்க்கை ஒரு தோல்வியாயிற்று.

இன்று உனக்கும், உன் தேவனாகிய கர்த்தருக்கும் நடுவில் எதை அல்லது யாரை விக்கிரகமாக வைத்திருக்கிறாய்? தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை யாருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்? தேவனையல்லாமல் எதற்கு தலை வணங்குகிறாய்?

சிந்தித்து பார்த்து ஜெபி!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment