1 இராஜாக்கள் 11:4 சாலொமோன் வயது சென்றபோது அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களை பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.அதினால் அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
11:5 சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும்,அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.
இஸ்ரவேல் தேசம் இரண்டாய் பிளவு பட்டதைப் பற்றி நாம் படிக்கும் முன்னர், சாலொமோனை இன்னும் ஒருமுறை உற்றுப்பார்த்து நம்முடைய வாழ்க்கைக்கு வேண்டிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
சாலொமோனின் தாய் பத்சேபாள் என்பதையும், அவனுக்கு 1000 பெண்கள் மனைவிகளாகவும், மறுமனையாட்டிகளாகவும் இருந்தனர் என்பதையும் மறந்து போக வேண்டாம். இவர்கள் மட்டும் அல்லாமல் அவன் வாழ்க்கை அநேகப் பெண்களைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கும், அநேகரின் உள்ளங்களை கவர்ந்திருக்கும் என்றாலும் மிகையாகாது.
இதுதான் கடைசி முறையாக நாம் சாலொமோனைப் பற்றி ப்டிக்கப் போகிறோம் என்று நினைத்து விடாதீர்கள். அவன் எழுதிய நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு எல்லாவற்றையும் சில மாதங்கள் படிக்கலாம்.
இப்பொழுது இந்த 21 வது நூற்றாண்டில், சாலொமோனின் வாழ்க்கையின் மூலம் நம்முடைய வாழ்க்கையை நேரிடையாகத் தொடும் ஐந்து காரியங்களைப் பற்றி மாத்திரம் காணலாம்.
இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு, சாலொமோனின் இருதயம் அவனுடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உத்தமமாக இல்லை என்று வெளிப்படுத்துகிறது. எபிரேய மொழியாக்கத்தில் இந்த வார்த்தை உத்தமம் என்பதற்கு முழுவதும் என்றும் அர்த்தம் உள்ளது. இங்கிருந்துதான் நாம் இந்த உத்தமம் அல்லது முழுவதும் என்ற வார்த்தையின் மூலமாய் சாலொமோனையும் அவனுடைய தகப்பனாகிய தாவீதையும் ஒப்பிட்டுப் பார்க்கப்போகிறோம்.
நான் இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தபோது தாவீது நடந்து கொண்டதைத்தான் சிந்தித்துப் பார்த்தேன். அவன் ஒரு — விபசாரக்காரன், ஒரு பொய்யன், ஒரு கொலைகாரன் — அவன் நிச்சயமாக ஒரு உத்தம இருதயத்துக்கு நல்ல உதாரணமே இல்லை.
தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்ததை, தேவன் அவனுக்கு உணர்த்தியவுடனே, அவன் தன்னுடைய ஒரே தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி, தன் பாவத்துக்காக மனங்கசந்து அழுது, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் ஆண்டவரே, என்று சங்கீதம் 51 ல் கதறுகிறான். என்னுடைய இருதயத்தின் ஒரு பகுதியை சுத்திகரியும் என்று அவன் சொல்லவில்லை, தன்னுடைய முழு இருதயத்தையும் சுத்திகரிக்கும்படியாக ஒப்புக் கொடுக்கிறான்.
ஆனால் சாலொமோனின் இருதயமோ பிளவு பட்டிருந்தது. அவன் அந்நிய தேவர்களுக்கு தன் இருதயத்தில் இடத்தைக் கொடுத்தான். தேவனாகிய கர்த்தருக்கு அவனுடைய இருதயத்தில் 100% இடம் ஒதுக்கப்படவில்லை. நாம் இதுவரை படித்தவிதமாக அவன் வாழ்க்கையில் ஆடம்பரங்கள், பேராசை ,பொருளாசை, விக்கிரகாராதனை போன்றவை நுழைந்தன. அருமையான ஞானமுள்ள ராஜாவாக ஆரம்பித்த அவன் தன்னுடைய செலவுகளுக்காக மக்களிடம் அதிக வரி வசூலித்தான்.
சாலொமோனின் கதை, 1 இராஜாக்களில் ஆரம்பித்தபோது 3:3 ல் சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான் என்று பார்க்கிறோம். ஆனால் 11:1 ல் முடிவடையும்போது, ராஜாவாகிய சாலொமோன் பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல்… அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள் மேலும் ஆசை வைத்தான் என்று பார்க்கிறோம். அவன் தேவனுடைய அன்புக்கு பதிலாக சிற்றின்ப அன்பைத் தேடிக்கொண்டான். என்ன பரிதாபம்!
சாலொமோன் ஒருநாளும் தன்னுடைய ராஜ்யத்தில் தேவாதி தேவனுக்கு இடமில்லை என்று கூறவில்லை ஆனால் தன்னுடைய இருதயத்தில் அவருக்கு ஒரு சிறிய இடத்தை மட்டும் கொடுக்க முடிவு செய்தான்.
ஜாண் வெஸ்லி கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், பரலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு? இந்த பூமியில் உம்மைத்தவிர யாரை நான் விரும்புவேன்?
இதுவே நம்முடைய அர்ப்பணிப்பானால் , நம்முடைய இருதயம் பிதாவாகிய தேவனுக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
இன்று உன்னுடைய இருதயம் முழுவதும் கர்த்தருக்கு சொந்தமா? 100% கர்த்தருக்கு கொடுக்கப்பட்டுள்ளதா அல்லது 20% கர்த்தருக்கும், 80% சிற்றின்பங்களுக்கும் கொடுக்கப்பட்டுளதா? சாலொமோனைப்போல் உன் வாழ்வை அழித்து விடாதே! தேவனாகியக் கர்த்தரை உன் முழு மனதோடும் நேசி!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
