Tamil Bible study

இதழ்:2294 எச்சரிக்கைகளை அனுபவித்திருக்கிறாயா?

1 இராஜாக்கள் 11:14,23,  கர்த்தர் ஏதோமியனான ஆதாத் என்னும் ஒரு விரோதியை சாலொமோனுக்கு எழுப்பினார்.

எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்

…யெரோபெயாம் என்ற சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாக கையெடுத்தான்.

தேவன் நமமை ஆளுகை செய்கிறார் என்ற உண்மை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் செய்யும் வேலையாயிருக்கட்டும், நாம் சந்திக்கும் மனிதராயிருக்கட்டும் எல்லாமே தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதே. தேவன் நம்மை பரலோகத்திலிருந்து கொண்டு நூல் கட்டி ஆட்டும் பொம்மை போல நடத்துகிறார் என்று நான் சொல்லுகிறேன் என்று தயவுசெய்து என்னைத் தவறாக நினைக்காதீர்கள்.

சங்கீதம் 115:3  நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார். தனக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்  என்று சஙீதக்காரன் கூறியிருப்பதை மனிதராகிய நாம் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினம் என்று வேதாகம வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை மனதில் கொண்டவர்களாய் நாம் இன்றைய வேதாகமப் பகுதியைப் பார்ப்போம். தேவனாகிய கர்த்தர் சாலொமோன அவன் பிறப்பிலேயேத்  தெரிந்து கொண்டு , அவனுக்கு யெதிதியா அல்லது கர்த்தருக்கு பிரியமானவன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தரே சாலொமோனை தாவீதின் சிங்காசனத்தில் அமர்த்தினார். சாலொமோன் தன் சுய இச்சையினாலும், சிற்றின்பங்களாலும் இழுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பெண்களை மணந்து, வழி தப்பி சென்றபோது தேவனாகிய கர்த்தர் அவனுக்கு மூன்று முறை எச்சரிக்கை மணியை அடிக்கிறார். அவனுக்கு மூன்று பலத்த எதிரிகளை தேவன் எழுப்பினார்.

டேல் டேவிஸ் என்னும் வேதாகம வல்லுநர் அந்த சூழலை இவ்வாறு விவரிக்கிறார், ஆதாத், ரேசோன், யெரோபெயாம் இவர்கள் மூவரும் சரித்திரத்தில் தலையெடுத்தது தற்செயலாக நடந்தது அல்ல. அவர்கள் வந்த நேரம், இடம் , அவர்களால் சரித்திரத்தில் ஏற்பட்ட விளைவுகள் இவை அத்தனையுமே தேவனாகியக் கர்த்தர் தம்முடைய விரல் அசைவால் நடத்தியவையே!

இதனை முற்றிலும் உணர்ந்த சாலொமோன் நீதிமொழிகள் 21: 1 ல்

ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார் என்று எழுதுகிறான்.

சாலொமோன் வழித்தப்பி சென்றபோது,  பரலோக தேவன் அவன் வாழ்வில் ஆழமாக கிரியை செய்ய ஆரம்பிக்கிறார். அவன் மனந்திரும்பி தேவனிடம் கிட்டி சேரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தேவனாகிய கர்த்தர் அவனுக்கு எதிரிகளை எழுப்பினார்.

அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இதையேதான் நம் தேவன் நம்முடைய வாழ்விலும் செய்கிறார். நாம் அவரோடு ஐக்கியம் கொண்டிருப்பதையே அவர் வீரும்புகிறார். இன்று நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கனமும், மகிமையும் கொண்டு வருகிற வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அப்படியல்லாமல்  சில நேரங்களில் நாம் வழிதவறிப் போகும்போது அவருடைய பலத்த கரம் நம்மைத் திருத்த முயற்சி செய்வது நமக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் அவரே ஆளுகை செய்கிறவர்!

உன் வாழ்க்கையில் அப்படிப்பட்ட எச்சரிக்கைகளை அனுபவித்திருக்கிறாயா? அல்லது அப்படிப்பட்ட கடினமான பாதையைக் கடந்து கொண்டிருக்கிறாயா? உன்னைத் தம் வழியில் திருப்பவே தேவன் இந்த சோதனைகளை அனுமதித்திருக்கிறார் என்பதை மறந்து போகாதே! இன்றே அவரிடம் திரும்பு!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment