Tamil Bible study

இதழ்:2296 மனுஷராகிய நம்மேல் விழுந்த கடமை!

1 இராஜாக்கள் 11:41 சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

நமக்கெல்லாருக்கும் நோபெல் பரிசு என்பது இந்த உலகத்தில் அமைதிக்காக போராடும் ஒருவருக்கு வழங்கப்படுவது தெரியும். அது ஆல்பிரட் நோபெல் என்ற விஞ்ஞானியின் பெயரால் கொடுக்கப்படுகிறது.

அவரைப்பற்றிய ஒரு கட்டுரையை நான் ஒருமுறை வாசிக்க நேர்ந்த போது  அவர் தான் டைனமைட் என்ற கொடூரமாக வெடிக்கக்கூடிய ஒரு வெடியைக் கண்டுபிடித்தவர் என்று அறிந்து இவர் பெயரில் அல்லவா நோபெல் பரிசு கொடுக்கப்படுகிறது என்று வியந்தேன்.

முதலில் அவர் கண்டுபிடித்த இந்த கெமிக்கல் வெடித்ததால் அவருடைய தம்பி அங்கேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அவர் கடுமையாக உழைத்து  அதை பாதுகாப்பான முறையில் தயாரிக்க கண்டுபிடித்தார்.

அவர் இந்த வெடியை மிகுந்த பாதுகாப்பான முறையில் கையாளும்படியாக தயாரிக்க ஆரம்பித்ததும் அவருக்கு பணம் வந்து குவிய ஆரம்பித்தது. ஏனெனில் அந்த வெடியே நம்முடைய நிலக்கரி சுரங்கங்கள் போன்ற இடங்களில் உபயோகப்படுத்தப் படும் ஒன்று. அவருக்கு ஏறக்குறைய 100 தொழிற்சாலைகள் இருந்தன.

அப்படிப்பட்ட வேளயில் 1888 ல் ஒருநாள் காலையில் தன்னுடைய மரணச் செய்தியை அவர் செய்தித்தாளில் வாசித்தார். அவருடைய மற்றொரு சகோதரனின் மரணத்தைத் தவறாக அவருடைய மரணம் என்று செய்தித் தாள்கள் பிரசுரித்திருந்தன! ஒரு செய்தித்தாள் மரணத்தின் வியாபாரி  மரணம் எய்தினார் ( The Merchant of Death is dead) என்று தலைப்புக் கொடுத்து, ஐரோப்பாவிலேயே மிகுந்த பணக்காரரான அவருடைய பணம் எப்படி பலருடைய உயிரை எடுத்த வெடிகுண்டு தயாரிப்பில் வந்தது என்று எழுதியிருந்தது. எல்லா செய்தித்தாள்களுமே அவருடைய மரணத்தை கொண்டாடியது போல இருந்தது. தன்னுடைய மரணச் செய்தியை வாசித்த அவர் மிரண்டு போனார். தான் தன்னுடைய குடும்பத்தாருக்கு, சமுதாயத்துக்கு, நாட்டுக்கு விட்டுப்போகும் பெயர் இதுதானா என்று அவர் உள்ளம் பதைத்தது.  அவருடைய வாழ்க்கை அன்று மாறியது. மீதியான வாழ்நாள் முழுவதும் தன்னை சமுதாயத்துக்காக அர்ப்பணித்தார். தன்னுடைய பணம், சொத்து அனைத்தையும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும் உழைப்பவர்களுக்கு, நாடு, மொழி என்ற எந்த பேதமும் இல்லாமல், நோபெல் பரிசு என்று ஐந்து பிரிவாகக் கொடுக்கும்படி செய்தார்.

இதை வாசிக்கும்போது நான் என் குடும்பத்தாருக்கும், என்னுடைய சமுதாயத்துக்கும் எதை விட்டு செல்வேன் என்று யோசித்தேன். நம்முடைய சாலொமோன் எதை விட்டு சென்றான்?

2 நாளாகமம் 9 ம் அதிகாரத்தில் , அண்டைய நாடுகள் அவனுக்கு கொண்டு வந்த பொன்னையும் பொருளையும் பார்த்தபோது, அடேயப்பா! இவ்வளவு பெற்றும் இவன் ஏன் தேவனுக்கு நன்றியோடு நடந்து கொள்ளவில்லை என்று நினைக்கத் தோன்றியது. அவனுடைய இச்சையின் பாவத்தில் விழாமல் இருந்திருந்தால் இன்று அவன் இஸ்ரவேல் மக்களுக்கு எத்தனை அருமையான ஒரு மரபை விட்டு சென்றிருக்கலாம்!

சாலொமோன் தன்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும்போது,

நீ உன் வாலிப பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை…

காரியத்தின்  கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.  ( பிரசங்கி 12:1,13) என்று எழுதுகிறான்.

நாம் தேவனாகிய கர்த்தருக்கு நம் இருதயத்தை முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது, நம்முடைய நேரத்தை அவரோடு செலவிடும்போது, அவருடைய ஆளுமைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, விழித்திருந்து, ஜெபித்து நம்மை பாதுகாக்கும்போது, நாம் செய்வதெல்லாம் தேவனுடைய அன்பை பறைசாற்றும். கிறிஸ்துவைப்போன்ற வாழ்க்கையை வாழ நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்வதை இந்த உலகம் அறிந்து கொள்ளும்! இதுவே மனுஷராகிய நம்மேல் விழுந்த கடமையாகும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment