1 இராஜாக்கள் 12:8 முதியோர் தனக்கு சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி
நான் அன்று அந்த முடிவு எடுத்திராவிடில் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கும் என்று என்றாவது நினைத்த தருணம் உண்டா?
ஒருவேளை அது ஒரு மிகச்சிறிய முடிவாக இருக்கலாம் அதனால் பெரிய பாதிப்பு இல்லாமல் போயிருந்திருக்கும். ஒரு பெரிய விஷயத்தில் நாம் எடுத்த முடிவு தவறாயிருந்திருந்தால் அது எவ்வளவுதூரம் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதித்திருக்கும்!
இதைத்தான் நாம் இன்றைய வேதாகமப்பகுதியில் ரெகொபெயாம் செய்வதைப் பார்க்கிறோம்.அவனுடைய ராஜ்யபாரத்தின் முதல் கட்டத்திலேயே அவன் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவே பின்னர் வந்த அநேக துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் சக்கரமாய் அமைந்தது.
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை நாம் தேவனைக் குறித்துப் படிக்கும்போது அவர் யாரையும் ரோபோட் போல ஒருபோதும் நடத்துவது இல்லை என்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர் அப்படி நம்மை ஒரு இயந்திரம் போல இயக்கியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை. நாம் நாமாகவே முன்வந்து அவரை நேசிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அதனால் அவர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கீழ்ப்படிதலினால் வரும் ஆசீர்வாதங்களையும், கீழ்ப்படியாமையால் வரும் சாபங்களையும் தெளிவாக விளைக்கினார்.
உபாகமம் புத்தகத்தில் மோசே ஆசீர்வாதங்களும் சாபங்களும் என்று ஒரு அதிகாரமே பிரசங்கம் பண்ணியிருக்கிறார். நீ கீழ்ப்படிந்தால் நன்மை கிடைக்கும், கீழ்ப்படியாமல் போனால் தீமை விளையும் என்று நிறுத்தாமல், நம்முடைய தேவன் கீழ்ப்படிந்த, கீழ்ப்படியாத மனிதர்களுடைய வாழ்க்கையையும் நமக்காக வேதத்தில் எழுதும்படி செய்திருக்கிறார்.
இன்று இராஜாக்களின் புத்தகத்தில் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவைத் தவறாக எடுத்த ரெகோபெயாமைப் பார்க்கிறோம். அவனுடைய தலையில் ராஜ கிரீடம் ஏறியவுடனே , வரியின் பாரச்சுமையை ஏந்திய மக்கள் அவனிடம் பேசி வரியின் பாரத்தை சற்று குறைக்கும்படியாக விண்ணப்பம் வைக்கின்றனர். இதையேதான் அந்த அவையில் இருந்த முதியோரும் அவனிடம் கூறியிருந்தனர். ஒரு சிறிய வரிகுறைப்பு அவனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொடுத்திருக்கும். ஆனால் ரெகோபெயாமுக்கு இன்னொரு எண்ணம் இருந்தது. அவன் அவனுடைய வாலிப நண்பர்கள் சொல்லும் புத்திமதியின் படி வரிச்சுமையை கடினமாக அதிகரிக்க முடிவுசெய்தான்.
இதில் என்ன நாம் கவனிக்க வேண்டிய ஒன்று என்றால்,1 இராஜாக்கள் 12: 1-14 வரை உள்ள வசனங்களில் முதியோர் ஆலோசனை, வாலிபர் ஆலோசனை என்று பார்க்கிறோமேத் தவிர ஒருமுறைகூட தேவனிடம் ஆலோசனை பெற்றதாக சொல்லப்படவே இல்லை. அதன் விளைவு ஆரம்பம் முதல் முடிவுவரை தவறாகவே இருந்தது.
ஹென்ரி நோவன் என்ற பாதிரியார் தெரெசா அம்மையாரை கல்கத்தாவில் சந்தித்து தன்னுடைய பாதிரி வேலையை சரிவர செய்ய வேண்டிய புதிமதி கூறவேண்டுமாறு கேட்டார். அதற்கு அந்த அம்மையார், ஒவ்வொருநாள் காலையிலும் ஒருமணி நேரம் தேவனை ஆராதனை செய், அடுத்தபடியாக உனக்குத் தவறு என்று தோன்றுகிற எதையும் செய்யாதே என்றாராம்.
தேவன் நம்முடைய வாழ்வில் அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்ற அறிந்த நாம் முதலில் அவருடைய பிரசன்னத்தை நாடி, அவருடைய ஆலோசனையைப் பெற்று, அவருடைய வாக்குத்தத்தங்களோடு நம்முடைய வாழ்வை நடத்துவதுதானே சரியான காரியம்? நாம் நம்முடைய வாழ்வின் முக்கியமான தருணங்களில், முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் நமக்கு ஞானம் குறைவுபட்டால் நாம் தேவனிடத்தில் கேட்க வெண்டும் என்றுதானே வேதம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது! ஆனால் இன்று நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா அல்லது நண்பர்களின், உறவினரின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
கர்த்தருடைய ஆலோசனையை உதறித்தள்ளாதே! நீ சுயமாய், தவறாய் எடுக்கும் முடிவுகளுக்காக ஒருநாள் மிகவும் வருத்தப்படுவாய்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
