1 இராஜாக்கள் 12: 16 ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறு உத்தரவாக; தாவீதோடே எங்களுக்கு பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை, இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு, இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
இந்த வருடத்தின் ஐந்து மாதங்கள் கண்ணின் மணி போல காத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த மாதம் முழுவதும் அவர் நம்மைக் காத்து பராமரிக்கும் படியாக நம்மை அவரிடம் ஒப்புவித்து ஜெபிப்போம்.
சாலொமோனின் குமாரனாகிய ரெகோபெயாம் தன்னுடைய சட்டத்தை சொல்லிவிட்டான்! ராஜாவாகிய அவன் சட்டம் இயக்கும் இடத்தில் இருந்தான். யெரோபெயாம் 10 இஸ்ரவேலின் கோத்திரங்களைத் தன் வசம் வைத்துக்கொண்டு தன்னை ஒன்றும் பம்பரமாய் ஆட்ட முடியாது, தான் சொல்வது மட்டுமே சட்டம் என்று இஸ்ரவேலின் முதியவர்களிடம் பேசிவிட்டான்.
அவனுடைய திட்டமான முடிவைக் கேட்ட இஸ்ரவேலர் யெரோபெயாமோடு சேர்ந்து புது திட்டத்தைத் தீட்டினர். அவர்கள் எருசலேமோடு உள்ளத் தொடர்பை அறவே அறுத்துவிட முடிவு செய்தனர்.
யெரோபெயாம் சீகேமிலே வாசம் பண்ணி அதைக் கட்டி, இஸ்ரவேல் மக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் எருசலேமுக்கு போகாதபடி செய்ய நினைத்தான். அவர்கள் ஒரே ஊரிலே ஆலயத் திருவிழாக்களுக்கு திரளும்போது அன்பான வார்த்தைகளும், பாசமும், அன்பும் அவர்களை ஒன்றாக்கிவிடும். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று அவர்கள் மறுபடியும் ஒரே ராஜ்யமாக வாழ ஆசைப்பட்டு விடலாம்.
ஆகையால் ராஜாவானவன் யோசனை பண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து; நீங்கள் எருசலேமுக்கு போகிறது உங்களுக்கு வருத்தம், இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றை பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.(12:28,29)
யெரோபெயாம் திறமையாக போட்ட திட்டம் இது, இந்தத் திட்டம் நிறைவேறிற்று! நாம் தேவனுக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணிக்காமல் வாழும்போது இதுதான் நடக்கும். நம்மால் ஒரு பொய்யைக்கூட எளிதாக நம்பி ஏமாந்து விட முடியும். எத்தனையோ ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இருந்த பெத்தேலிலும், தாணிலும் இரண்டு பொன் கன்றுக்குட்டிகள் இடம் பெற்றன! இரண்டு புது பட்டணங்களை எருசலேமுக்கு பதிலாக உருவாக்கி, இரண்டு புது தேவர்களை இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தருக்கு பதிலாக வைத்து, அவன் எளிதாக தன்னுடைய ஜனங்களை எருசலேமிலிருந்து திசை திருப்பினான்.
வேதத்தை படிப்பீர்களானால், யெரோபெயாமுக்கு கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியின் மூலமாக அவன் இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களுக்கு ராஜாவாவான் என்று வாக்குக்கொடுத்திருந்தார் என்று தெரியும். அவன் தேவனுடைய வாக்கை நம்பாமல் தனக்கு கிடைத்த பதவியை தக்கவைத்துக் கொள்ளவேண்டி, கடவுளை விட்டுவிட்டு, மதத்தை உபயோகப்படுத்திக் கொண்டான்.
இந்த 21 ம் நூற்றாண்டில் இந்த செய்தி நமக்கு என்ன சொல்கிறது? ரெகோபெயாம், யெரோபெயாம் போல நாமும் அன்றாட வாழ்வில் எத்தனையோ முடிவுகளை எடுக்கிறோம். அந்த முடிவுகளில் பல உலகத்தோடு ஒத்த வேஷம் தரிப்பவையாக உள்ளன! நம்முடைய ஆசைகளை நிறைவேற்றும் முடிவுகளாக உள்ளன! நம் உள்ளம் முற்றிலும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்படாமல் இருக்குமானால் அந்த முடிவுகள் நம்மை எதற்கும் தலை சாய்க்க செய்து விடுகின்றன! இரண்டு பொன் கன்றுக்குட்டிகளுக்கு கூட!
இன்று காலையில் நாம், கர்த்தாவே என் வாழ்க்கையை முற்றிலுமாக உம்முடைய பலிபீடத்தில் வைக்கிறேன், என்னை முற்றிலும் உமக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் என்று ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி,
Dr பிரேமா சுந்தர் ராஜ்
