Tamil Bible study

இதழ்:2301 இன்று எது உன்னை ஆளுகை செய்து கொண்டிருக்கிறது?

1 இராஜாக்கள் 15:34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பார்வையிலும் நடந்தான்.

இராஜாக்களில் என்னை மிகவும் குழப்ப வைப்பது இந்த இரண்டு பெயர்கள் தான்! நீங்களும் அப்படி நினைத்ததுண்டா?

யெரொபெயாம் இஸ்ரவேலின் வட பகுதியை ஆள ஆரம்பித்தபோது,  சாலொமோனின்  குமாரனாகிய ரெகொபெயாம்  யூதா, பென்யமீன் கோத்திரங்களின்  சிங்காசனத்தில் அமர்ந்தான். இந்தப் புத்தகத்தில் 14 ம் அதிகாரத்திலிருந்து  மறுபடியும், மறுபடியும் வரும் ஒரு வாக்கியம் என்னவென்றால், அவர்கள் கர்த்தருடைய பார்வைக்கு  பொல்லாப்பானதை செய்தார்கள் என்பது.

இந்த பொல்லாப்புக்கு காரணம் அவர்கள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனதுதான்.  அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், உத்தம மனதோடும் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அது அவர்களிடமிருந்து கிடைக்கவேயில்லை. சீனாய்மலையில் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போன அவர்கள் முன்னோர்கள்போல, இஸ்ர்வேல் மக்களுக்கு அவர்கள் பல தேவர்களை அறிமுகப்படுத்தினார்கள். பெத்தேலிலும், தாணிலும் இரண்டு பொன் கன்றுக்குட்டிகள் அவர்களுடைய கடவுள் ஆயின.

அங்கு யாருமே தேவனை புறக்கணிக்கவில்லை  ஆனால் அவரை ஆராதிக்காமல் வேறொரு ஆராதனையும் இடம் பெற்றது. தேவனுக்கு ஓரமான ஒரு இடத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் செய்த வழிபாட்டில் , தேவனாகிய கர்த்தர் முற்றிலும் வெளியேற்றப்பட்டதை அவர்கள் உணரவேயில்லை.

நாம் யாருக்காக அல்லது எதற்காக வாழுகிறோமோ, நம்முடைய நேரத்தை எவ்விதம் செலவிடுகிறோமோ, நம்முடைய சக்தியை எங்கு செலவிடுகிறோமோ, நம்முடைய பணத்தை எதற்காக செலவிடுகிறோமோ அதுவே நம்மை ஆளுகை செய்து நம்மை உற்சாகப்படுத்தும் என்பது டேவிட் லாயிட் ஜோன்ஸ் என்பவர்களின் எழுத்து.

இஸ்ரவேல் மக்களின் எண்ணங்களையும், வாழ்வையும் , ஆராதனையையும் உயர்த்துவதற்கு பதிலாக அவர்களுடைய ராஜாக்கள் , அவர்களை விக்கிரக ஆராதனை என்ற புதை மணலில் விழுச்செய்தனர்.

நான் மிகவும் விரும்பும் சுவிசேஷகர் சார்ல்ஸ் ஸ்வின்டோல் அவர்கள் நமக்கு கொடுக்கும் புத்திமதியைக் கேளுங்கள், ‘பார்வைக்கு கவர்ச்சியான  விக்கிரகங்களுக்கும், நம்மை ஆராதிக்க வைக்கக்கூடிய ஆடம்பரங்களுக்கும்  நம் கவனத்தை  நாம்  செலுத்தும்போது, இயேசுவாகியக் கர்த்தர் அந்த அறையின் மையத்தில்  இருப்பாரானால், நம்முடைய கவனத்தை ஈர்த்த அவை அத்தனையுமே தேவையற்ற ஒரு பொருட்களாகவேத் தெரியும்.

அது மட்டுமல்ல, தம்முடைய மகத்துவத்தையும், மகிமையையும் நமக்கு வெளிப்படுத்த வல்ல தேவாதி தேவனோடு, நாம் ஒருவராலும் ஒருபோதும் அசைக்கமுடியாத பிணைப்பை, நமக்கு உண்டு பண்ணிக் கொள்ளவேண்டும்!

ஒரு நிமிஷம்! ஒரே ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன்! கர்த்தராகிய இயேசு அந்த நம்முடைய அறையின் மையத்தில் இருக்கிறாரா என்று மட்டும் சொல்லி விடுங்கள்!

தேவனுடைய பிள்ளைகளே! ஆராதனை என்பது,  தேவனோடு தனிப்பட்ட அறையில், நாம் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் தருணம். அவர் யார் என்பதையும், அவருடைய குணாதிசயங்களையும், தன்மைகளையும் நினைத்து உள்ளம் நெகிழ்ந்து அவருடைய முகத்தை நோக்கிப்பார்க்கும் நேரம்!

இப்படிப்பட்ட அனுபவம் உண்டா? இன்று சற்று நேரம் ஒதுக்கி உங்கள் தனியறையில் அவரை ஆராதனை செய்யுங்கள்! மற்ற எல்லாமே உங்களுக்கு வெறும் தூசியாகிவிடும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment