1 இராஜாக்கள் 17:6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன் இன்று நாம் இந்த வசனத்தைத் தான் படிக்கப்போகிறோம் என்று நினைப்பீர்கள். ஆனால் நான் இன்று 2 இராஜாக்கள் 25:30 ல் காணப்படும், வேதத்தில் அடிக்கடி நினைவுபடுத்தப்பட்ட ஒன்றைதான் எழுதப்போகிறேன்.
2 இராஜாக்கள் 25:30 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அனுதினத் திட்டத்தின்படி, அனுதினமும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த காலகட்டத்தில் யூதாவின் ஜனங்கள் பாபிலோனியருக்கு அடிமையாயிருந்தனர். 27 – 28 வசனங்களில் வாசிப்போமானால், ஆச்சரியப்படும் விதமாக, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனை சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி, அவனோடே அன்பாய் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து, என்று எழுதியிருக்கிறது.
வேதாகம வல்லுநர்கள் இந்த சம்பவத்தைப் பற்றிக் கூறும்போது, இந்த ராஜாவின் மனமாற்றத்திற்கு காரணம், நேபுகாத்நேச்சாரின் குமாரனாகிய இவன் தன்னுடைய தகப்பன் இவர்களை அளவுக்கு மிஞ்சி கொடுமைப் படுத்தியதாக நினைத்தான், ஆதலால் அவன் இரக்கத்தைக் காட்ட முடிவு செய்து, யூதாவின் ராஜாவை அவனுடைய 55 வது வயதில் விடுதலை செய்தான்.யோயாக்கீமின் தினசரி தேவைகள் அற்புதவிதமாக பாபிலோனிய ராஜாவால் சந்திக்கப்பட்டது.
வேதத்தில் இங்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களின் வனாந்திர வாழ்க்கையிலும் அன்றாட தேவைகள் அவர்களுக்கு பரலோகத்தின் தேவனால் அருளப்பட்டது என்று பார்க்கிறோம். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது தேவன் அவர்களுக்கு தினசரி மன்னாவை அருளாமற்போயிருந்தால் அவர்கள் அனைவருக்கும் வனாந்தரத்தில் உணவு கண்டுபிடிப்பதே கடினமாக ஆகியிருக்கும். இந்த மன்னாவை அவர்கள் அன்றைய தேவைக்கு மட்டுமே சேகரிக்கும்படியாக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதிக ஆசைப்பட்டு அதைவிட அதிகமாக சேகரித்த மன்னா, மறுநாள் புழுக்கள் பிடித்துப்போயிற்று.
மோசே தன்னுடைய வயது முதிர்ந்த காலத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு இதைக்குறித்து ஞாபகப்படுத்தியபோது,
உபா 8:3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார் என்று எழுதுகிறார்.
லூக்கா 4:4 ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதே வார்த்தைகளைத்தான் அவர் வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்ட வேளையில் உபயோகப்படுத்தியதைப் பார்க்கிறோம். நம்முடைய நம்முடைய சரீரத்தைப் போஷிக்கும் உணவு மட்டும் முக்கியம் அல்ல நம்முடைய ஆவிக்குரிய உணவு அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் இதன்மூலம் அறிந்து கொள்கிறோம்.
எலியா ஒவ்வொருநாளும் தன்னுடைய அப்பத்தைக் காகங்கள் கொண்டு வருவதைப் பார்த்தபோது அவனுடைய விசுவாசம் அதிகரித்தது! அவன் இப்பொழுது தேவனை தன்னுடைய வாழ்வின் எல்லா சமயத்திலும் முழு மனதோடு விசுவாசிக்கும் நிலைக்கு வந்துவிட்டான்.
எலியா கேரீத்தண்டையில் அமர்ந்து, தனக்கு தேவன் அருளிய அன்றாட அப்பத்தினால் திருப்தியடைந்த அந்த குணத்தைதான் தேவன் உன்னிடமும் என்னிடமும் எதிர்பார்க்கிறார். எலியாவின் கேரீத் அனுபவம் வெறும் சரீர தேவைகளை தினமும் தேவன் சந்தித்தார் என்பது அல்ல, அவனுடைய அன்றாட ஆவிக்குரிய தேவைகளைப் பற்றியதும் தான்.
என்னுடைய வாழ்க்கையிலும் நான் ஆவிக்குரிய உணவை சேர்த்து வைக்க முடியும் என்று எண்ணின நாட்கள் உண்டு. நான் சொல்வது புரிகிறதா? வாரத்தில் ஒருநாள் திருச்சபை சென்றுவிட்டால் அது மீதி ஆறு நாட்களுக்கும் போதும் என்று நினைப்பது. ஆனால் மன்னாவைப்போல அதை மறு நாளுக்கு சேர்த்து வைக்க முடியாது, அதை ஒவ்வொருநாளும் தேவனுடைய சமுகம் என்னும் கேரீத்தண்டை அமர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அறியாத காலம் அது!
ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நொடியும் தேவனாகியக் கர்த்தர் தம்முடைய குமாரனாகிய எலியாவுக்கு, அந்த நாளுக்குத் தேவையான, ஆவிக்குரிய, ஆத்துமத்துக்குரிய, சரீரத்துக்குரிய உணவை அருளினார். அவர் நமக்கும் அனுதின மன்னாவை அருள வல்லவர்!
அன்றன்றுள்ள ஆகாரத்தை இன்று தாரும் என்று ஜெபிக்கும் நாம் இன்றைய தேவைகளுக்காக அவரை விசுவாசித்து பற்றிக்கொள்வது மட்டும் போதாது நாளைய தினத்தை அவரிடமே விட்டு விட வேண்டும்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
