1 இராஜாக்கள் 17:12 அதற்கு அவள் பானையில் ஒரு பிடி மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையெண்ரு உம்முடைய தேவனாகியக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இதோ நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துபோக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
இதுவரை நாம் திஸ்பியனாகிய எலியா கேரீத்தண்டை பெற்ற அனுபவத்தைப் படித்தோம், பின்னர் எலியா அந்நிய தேசத்திலுள்ள சாறிபாத்துக்கு ஒரு முன்பின் தெரியாத விதவையண்டை அனுப்பப்பட்டதைப் பார்த்தோம்.
யோவான் 7 ம் அதிகாரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! அதில் இயேசுவின் சகோதரர் அவரை விசுவாசியாமல், ஏன் அந்தரங்கத்தில் இவற்றை செய்கிறீர், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். ஜனங்களுக்குள்ளே சிலர் அவர் நல்லவர் என்றனர், சிலர் அவர் ஜனங்களை வஞ்சிக்கிறவர் என்றனர். சிலர் இவர் கல்லாதவர் ஆனாலும் வேதத்தை இப்படி அறிந்திருக்கிறாரே என்றனர். அவரைப்பற்றிய பேச்சு அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாக நடந்தது. இந்தப் பின்னணியில் இயேசு,
தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றர். (யோவான் 7:24)
இதை வாசிக்கும்போது இயேசு அவர்கள் கற்பனை பண்ணி வைத்திருந்த மேசியா என்ற பெட்டகத்தில் அடங்கவில்லை என்று மட்டும் புரிந்தது. அவர் சரியான துணிமணி உடுத்தவில்லை, சரியான பெரிய பள்ளியில் படிக்கவில்லை, அவர்களுடைய அச்சுக்குள் அவர் அடங்கவேயில்லை. அவர்கள் கற்பனை பண்ணிய பாத்திரம் அவர் இல்லையென்றதும் அவரை நிராகரித்தனர்.
இந்த சம்பவம் என் நினைவுக்கு வந்ததின் காரணம், நான் இன்றைய வேதாகமப் பகுதியில் வாசிக்கிற சாறிபாத் விதவை, ஒரு பாகால் வழிபாட்டு மையமானா சீதோனில் வசித்தவள், வெளிப்புறத்தில் அவள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாளா என்ற சந்தேகம் கூட வருகிறது.
ஆனால் இந்தப் பெண் கூறுவதைப் பாருங்கள்! உம்முடைய தேவனாகியக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். எலியாவைப் பற்றி ஒருவேளை சீதோனிய மக்களும் கேள்விப்பட்டிருக்கலாம். எலியா தன்னுடைய ஜீவனுள்ள கர்த்தரின் நாமத்தில் மழையை நிறுத்திய அற்புதம் அவர்கள் செவிகளுக்கு எட்டியிருக்கும். ஆனால் அதைக் கேள்விப்பட்ட இந்தப் பெண் தன்னுடைய இருதயத்தில் அவரை ஜீவனுள்ள கர்த்தர் என்று விசுவாசித்திருப்பாள் என்று யார் கண்டது? இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தர் அந்த மக்களை வழி நடத்துவதைக் கேள்விப்பட்ட ராகாப் அவரை விசுவாசித்ததால் இரட்சிக்கப்படவில்லையா?
இந்த ஏழை விதவை இஸ்ரவேலின் தேவனை ஜீவிக்கிற தேவன் என்று விசுவாசித்தாள். இங்கு என்னை ஆச்சரியப்பட செய்தது இந்தப்பெண்ணின் விசுவாசம்! சீதோனின் மக்கள் கையால் செய்யப்பட்ட விக்கிரகங்களை வழிபட்டுக் கொண்டிருந்த போது இந்தப் பெண், இஸ்ரவேலின் தேவன் என்றென்றும் ஜீவிக்கிறவர் என்று உறுதியாக நம்புகிறாள்!
என்ன விசுவாசம்! என்ன நம்பிக்கை!
ஒருவருவருடைய வெளியரங்கத்தைப் பார்த்து யார் யார் கடவுளுடைய பிள்ளைகள் என்று நாம் நியாயந்தீர்க்க முனையும் போது, தேவனாகியக் கர்த்தர் அவர்களுடைய உள்ளரங்கத்தைப் பார்த்து, யார் அவருடைய பிள்ளைகள் என்று அறிந்து தீவிரமாகச் செயல் படுகிறார். நாம் யாருடைய இருதயத்தையும் அறிய முடியாது. ஆனால் கர்த்தரோ அந்த எரிகோவாவிலாகட்டும், அல்லது சாறிபாத்திலாகட்டும், நாம் புறக்கணிக்கும் ஏதோ ஒரு ஊரிலாகட்டும், தம்மை அறிந்தவர்களை அவர் அறிவார்.
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்.
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
