Tamil Bible study

இதழ்:2341 உடன்படிக்கையின் பங்காளியாக கொடுக்கப்படும் தருணம்!

1 இராஜாக்கள் 17:13,14  அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து…. கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

20 ம் நூற்றாண்டில் பிரபலமான சுவிசேஷகர் பால் ராடர் அவர்களின் சரித்திரத்தைப் பற்றிப் படித்தேன். அவர் தனுடைய சிறு வயதிலேயே அவர் தகப்பனாருடன் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு ஊழியத்துக்கு சென்றவர். ஒருமுறை அவர் தேவனுடன் கொண்ட ஒரு தனிப்பட்ட அனுபவத்தால் அவர் உள்ளம் கொழுந்து விட்டு எரிந்தது.

ஆனால் அந்த கொழுந்து அவர் கொலராடோ பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவருடைய பேராசிரியர் ஒருவரால் அணைக்கப்பட்டது. அவர் , வேதம் உண்மையானது என்று நீ எப்படி சொல்வாய்? என்று சொல்லி, என்னுடைய விசுவாசம் என்னுடைய வெறும் அறியாமையைக் காட்டுகிறது என்று சொல்லிய போது அந்த வகுப்பை விட்டு வெளியேறாமல் அப்படியே அமர்ந்து அவர் கூறிய வார்த்தைகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்று பால் ராடர் , தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் காரியம் அவருடைய விசுவாசத்தை பாதித்து விட்டது. அவர் படிப்பை முடித்து விட்டு குத்துச்சண்டை வீரனானார். பின்னர் ஒரு எண்ணெய் கம்பெனியில் வேலை செய்தார். ஆனால் கர்த்தர் அவரை அப்படியே விட்டுவிடவில்லை. நியூயார்க் நகரில் தேவனாகியக் கர்த்தர் அவரோடு தம்முடைய மெல்லிய சத்தத்தால் பேசினார். அவர் அங்கிருந்து ஒரே ஓட்டமாய் தன்னுடைய அறைக்கு சென்று தன் முழங்கால்களில் விழுந்து தேவனுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். தன்னுடைய வாழ்வில் அவருக்குக் கொடுக்கப்பட்ட தருணதைப் பற்றிக்கொண்டார்! 20 ம் நுற்றாண்டின் சிறந்த சுவிசேஷராக தம்முடைய ஊழியத்தை செய்தார்.

இவருடைய கதையை நான் சிந்தித்தபோது, என்னுடைய நினைவுகள் சாறிபாத் நகரில் வாழ்ந்த விதவையின் வாழ்க்கையை நினைவு படுத்தியது. சீதோன் நாட்டில், பாகால் வழிபாட்டின் மத்தியில், தன்னுடைய தினசரி வாழ்வை நடத்திக் கொண்டிருந்த அவள், ஒருநாள் இஸ்ரவேலின் தேவனுடைய மெல்லிய சத்தத்தைக் கேட்டாள். அன்று அவர் அவளைத் தம்முடைய அன்பின் கரத்துக்குள் வரும்படி அழைத்தார். தேவனுடைய வட்டத்துக்கு வெளியே வாழ்ந்த இந்தப் பெண்ணுக்கு, அவருடைய வட்டத்துக்குள்ளே வந்து அவருடைய உடன்படிக்கையின் பங்காளியாக  ஒரு தருணம் கொடுக்கப்பட்டது.

தேவனாகிய கர்த்தர் அவளுக்குத் தன் வார்த்தையைக் கொடுத்தார், அவள் தம்முடைய தாசனாகிய எலியாவைப் போஷித்துப் பராமரித்தால், அவள் தம்முடைய வார்த்தையை சார்ந்து வாழலாம். அவருடைய வார்த்தையோ அவளுடைய எல்லாத் தேவைகளும் சந்திக்கப்படும் என்ற வாக்குத்தத்தம். எத்தனை அருமையான தருணம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது பாருங்கள்!

உனக்கு இன்று அப்படிப்பட்ட தருணம் கொடுக்கப்படுமாயின் அதை விட்டு விடாதே!

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில்,  விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்  ( மாற்கு 9:23)

அவரை விசுவாசித்தால் உனக்கும் எல்லாமே கூடும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment