1 இராஜாக்கள் 17:15 அவள் போய் எலியாவின் சொற்படி செய்தா:; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள்.
சாறிபாத்தின் விதவைக்கு கர்த்தர் ஒரு விசேஷமானத் தருணத்தைக் கொடுத்தார். தீர்க்கதரிசியான எலியா அவளிடம் கொஞ்சம் அப்பம் கொண்டுவா என்று கட்டளையிட்டபோது, அவள் தன்னுடைய நிலையை அவனுக்கு விளக்குகிறாள். அதைகேட்ட பின்னரும் எலியா அவளிடம் தனக்கு முதலில் தனக்கு ஒரு அடையைப் பண்ணுமாறு கூறியது மட்டுமல்லாமல், அவளுக்கும் அவள் குமாரனுக்கும் கூட பண்ணும்படியாக உத்தரவிடுகிறான்.
நான் ஒருவேளை அங்கிருந்திருந்தால், எலியாவே நான் முதலில் சொன்னது காதுகளில் விழவில்லையா? அங்கே ஒரு அடை சுடக்கூட மாவும் இல்லை, எண்ணெயும் இல்லை. எப்படி நம் மூவருக்கும் அடை சுடுவது???? என்று கேள்வி எழுப்பியிருப்பேன்.
ஆனால் அந்த விதவை மறு கேள்வி கேட்ட மாதிரி வேதம் நமக்கு சொல்லவில்லை. அதற்கு மாறாக, அவள் போய் எலியாவின் சொற்படி செய்தாள் என்று வேதம் கூறுகிறது. அவள் தன்னுடைய அடுப்படிக்கு சென்று, விறகுகளை அடுக்கி, அடுப்பைப் பற்றவைத்து, அந்த கொஞ்ச மாவையும், கொஞ்ச எண்ணெயையும் எடுது அப்பம் செய்ய ஆரம்பித்தாள்.
சில நேரங்களில் நான் வேதத்தில் நடந்த சில அருமையான சம்பவங்களைப் பற்றிப் படிக்கும்போது, நான் அந்த இடத்தில் ஒரு அமைதியான, மறைமுகமான, கூர்ந்து கவனிப்பவராக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஒரு மறைமுகமான சாட்சியாக தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காகக் கிரியை செய்வதைப் பார்க்க ஒரு ஆசை!
அப்படிப்பட்ட ஒரு தருணம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்குமாயின், தானியேல் சிங்கத்தின் குகையின் தள்ளப்பட்ட போது….. மறு நாள் தரியு ராஜா தானியேலை பெயர் சொல்லி அழைத்தபோது…. தானியேல் தம்முடைய தேவன் இரா முழுவதும் தம்மோடிருந்தார், சிங்கத்தின் வாயைக் கட்டினார் என்று சிங்கத்தின் கெபியிலிருந்து பதில் கொடுத்த போது…. ஆஹா! இப்படிப்பட்ட ஒரு தேவனைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லாமல் நான் கண்ணீரோடு நின்றிருப்பேன்.
தானியேல் சிங்கத்தின் குகையில் இருந்தது எனக்கு ஒரு மகாப் பெரிய வல்லமையுள்ள தேவனை வெளிப்படுத்தினாலும், அவர் ஒரு விதவையின் தினசரித் தேவைகளை தம்முடைய கிருபையால் சந்தித்தாரே அதுதான் இன்று எனக்கு கண்ணில் நீரை வர வைத்தது. ஒவ்வொருநாள் காலையிலும் எழுந்து, என் தேவன் என் பக்கத்தில் இருக்கிறார், இன்றைய நாளின் சுகம், பெலன் போன்ற தேவைகளை சந்திப்பார் என்ற நிச்சயம் கொடுக்கும் அனுபவமே தனிதான்.
அது மட்டுமல்ல! எனக்கு இயேசுவின் கல்லறை வெறுமையாய் இருந்ததைக் கண்ட பெண்களோடு நானும் நிற்கவும் ஒரு ஆசை! அதே கணம் சாறிபாத்தின் விதவை தன்னுடைய மாவையும், எண்ணெயையும் எடுத்து, எலியாவின் கட்டளைப் படி அப்பம் சுட ஆரம்பித்தாளே அங்கு நிற்கவும் ஆசை.
என்ன ஆச்சரியம் பாருங்கள்! அன்று அவர்கள் மூவருக்கும் மாவும் எண்ணெயும் நிறைவாக இருந்தது, மறு நாளும் நிறைவாக இருந்தது. ஒவ்வொருநாளும் அவர்கள் மூவரும், அவளுடைய வீட்டாரும் உண்ணும்படியாய் நிறைவாக இருந்தது. எலியா உண்மையையே பேசியிருந்தார்! அவர் மட்டும் அல்ல, அவருடைய தேவனாகியக் கர்த்தரும் கூட!
ஒவ்வொருநாளும் அவள் அந்த மாவையும் எண்ணெயையும் பார்க்கும்போது அவளுடைய உள்ளம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று இஸ்ரவேலின் தேவனுக்குத் துதி பாடியிருக்கும்.
இதையேதான் தேவன் உனக்கும் செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளுக்கும் உரிய பெலனைத் தருவார். ஒவ்வொரு நாளுக்கும் உரிய தேவைகளை சந்திப்பார். இது அவர் நமக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்! விசுவாசத்தோடு ஒவ்வொரு நாளும் உன்னை தேவனுக்கு ஒப்புவி, உன் தேவைகளை அவர் சந்திப்பார்.
அவர் வாக்கு மாறாதவர்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
