Tamil Bible study

இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!

1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இந்த மாதத்தின் முதல் நாளைக் காணச்செய்த தேவனுக்கு கோடான கோடிஸ்தோத்திரம்! இந்த மாதம் முவதும் அவர் நம்மோடிருந்து, காத்து , வழிநடத்துமாறு ஜெபிப்போம்.

எலியாவைப் பற்றி எழுதுவதற்காக நான் அதிகமாகப் படித்துக் கொண்டிருந்தபோது,  வேதாகம வால்லுநர்கள் எலியாவைப் பற்றி சிந்தித்து அவருடைய வாழ்வின் உண்மையை எழுதிய விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது,  F.B மேயர் அவர்கள் எழுதிய எலியாவின் வாழ்க்கை வரலாறு. அவர் அதிக நேரம் எலியாவின் சாறிபாத்  ‘வீட்டு வாழ்க்கையை’ வெளிப்படுத்தியிருக்கிறார்.

எலியாவின் கேரீத் அனுபவத்தில் நம் தேவன் எலியாவுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்னவெனில், அந்த மலைப்பகுதியில், எங்கும், யாரும்  உதவி செய்ய முடியாத இடத்தில் தேவனை முற்றிலும் சார்ந்து வாழ்வது என்பதே என்று பார்த்தோம். ஒவ்வொரு வேளை உணவும் தேவன் அருளிய ஈவு என்று பார்த்தோம்.

அந்த ஆறு வற்றியபோது, 150 கிமீ தூரத்தில் இருந்த சாறிபாத்துக்கு போகும்படி கட்டளை வந்தது. அந்த ஊர் இஸ்ரவேலுக்கு வெளியே இருந்த சீதோன் நாட்டை சேர்ந்தது.  முதலில் இதை வாசிக்கும் நமக்கு எலியாவின் சூழ்நிலை தெளிவாகத் தெரியாது. இதைப்பற்றி எழுதும் ஒரு வேதாகம வல்லுநர்,

நாம் வெளிப்புறமாகப் பார்க்கும்போது எலியாவின் வாழ்க்கை மோசமாகத் தெரியவில்லை. ஒரு அருமையான தனி அறை, வெளியே பார்த்தால் மத்தியத் தரைக்கடல், பஞ்ச கால முழுவதும் குறைவுபடாத உணவு, ஆகாப் ராஜாவால்  அவனைப் பிடிக்கும்படி அனுப்பட்ட வீரர்களிடமிருந்து பாதுகாப்பு,  என்று எழுதியிருக்கிறார்.

இதைக் கேட்கும்போது எலியாவின் இந்த வாழ்க்கை நமக்கு மோசமாகத் தெரியவில்லை அல்லவா?

ஆனால் எலியாவுக்கு காத்திருந்த சாறிபாத் அனுபவத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதலில், ஒரு வசதியான தங்குமிடத்தை எலியா எதிர்பார்த்திருந்தால் அது அங்கு நிச்சயமாக இல்லை. அந்த வீடு, அவன் கேரீத் ஆற்றண்டை திறந்த வெளியில், கையினால் சேகரித்த படுக்கையின் மேல் படுத்ததை விட எந்த விதத்திலும் மேலானது அல்ல. நம் ஊரில் உள்ள கிராமத்து குடிசைகளைப் போன்ற ஒரு வீடுதான் அது. இங்குதான் எலியா அனுப்பப்பட்டான்.

இரண்டாவது எலியா எப்பொழுதுமே தனியாக வாழ்ந்த ஒரு மனிதன். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையை கையாளும் விதமே வேறு. அவர்களிடம் திடீரென்று இன்னொருவரோடு சேர்ந்து வாழச் சொன்னால் கொஞ்சம் கஷ்டமே. அதுவும் எலியா ஒரு முரட்டு மலைவாழ் மனிதனாக வாழ்ந்தவன். அந்தக் குடிசையில் ஒருவேளை அவனுக்கு இராத்திரியில் தூக்கம் பிடிக்கவில்லையென்றால் அவ்வளவுதான். பகலில் அந்த விதவையின் பையன் அங்கே விளையாடுவான், அந்தம்மா ஒருவேளை அங்கு ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கும்.  

எலியா! ஒரு தனி மனிதனாக, தனிமையை விரும்பியவனாக வாழ்ந்த அவனுக்கு அந்த இனிமை சாறிபாத்தில் கிடைக்கப்போவதில்லை.

இன்னொருபுறத்தில் பார்த்தால், அந்த விதவையும், அவள் குமாரனும் ஒரு வெளியூர்வாசிகள். அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டியிருந்தது. அவன் எவ்வளவு நாள் அங்கே அவர்களோடு தங்குவான் என்று யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு அழையா விருந்தாளி நம் வீட்டுக்கு வந்துவிட்டால் நமக்கு எப்படியிருக்கும்?

இங்குதான் தாழ்மை என்ற வார்த்தை முக்கிய இடத்தை வகுக்கிறது. எல்லாவிதமான பெருமைகளுக்கும் எதிர்மறையான வார்த்தை இது.  எனக்குதான் முதலிடம் என்பதற்கு நேர் எதிர்மறையான வார்த்தை அது.  எலியா வாழ்ந்த வீட்டு வாழ்க்கையிலும் அந்தத் தாழ்மை அதிகமாகக் காணப்பட்டது. நெற்கதிர் முற்றும்போது அது குனிந்து தலைவணங்கி நிற்பது போன்ற வாழ்க்கை. தேவனுடைய பிள்ளைகள், தேவ்னை முற்றிலும் அறிந்தவர்கள், அவரோடு உரையாடிய கிருபை பெற்றவர்கள் தங்களை முற்றிலும் தாழ்த்தி வாழும் வாழ்க்கை அது.

F.B மேயர் எழுதிய வார்த்தைகளை எழுதி முடிக்கிறேன்.

தேவன் நமக்காக வைத்திருக்கும் பரிசுகள் ஒவ்வொன்றும், அடுக்கடுக்காக, ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன என்று நினைத்தேன். நான் என்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தில் உயர உயரச் செல்லும்போது அவைகளை நான் எளிதாகக் காணமுடியும் என்றும் நினைத்ததுண்டு.

ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது தேவன் எனக்காக வைத்திருக்கும் பரிசுகள் ஒவ்வொன்றும் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளது என்று. இங்கு நான் உயரச் செல்ல வேண்டியதில்லை, நான் எவ்வளவு அதிகமாக தாழ இறங்குகிறேனோ அவ்வளவு அவை எனக்குத் தென்படுகிறது.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே! நாமும் எலியாவைப் போலத் தாழ்மையாக வாழக் கற்றுக் கொள்வோம்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment