Tamil Bible study

இதழ்:2344 துக்கிப்போருக்கு ஆறுதலைக் கொடுக்கிறோமா?

1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

எலியாவும், சாறிபாத்தின் விதவையும் கொஞ்ச நாட்கள் தங்களுடைய தினசரி வாழ்வைத் தொடர்ந்த பின்னர், வேதம் கூறுகிறது, அந்தப் பெண்ணின் ஒரே மகன் நோய்வாய்ப்படுகிறான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் என்கிற வார்த்தை அவன் மரித்துப் போனதைக் காட்டுகிறது. அவனுடைய தாயைப் பிள்ளையில்லாதவளாகத் தவிக்கவிட்டு அவன் மரித்துப் போகிறான்.

அந்த விதவை இதுவரை பட்ட கஷ்டம் போதாதென்று, அந்நிய தேசத்தானாகிய எலியாவைத்தவிர யாருமற்ற நிலைக்கு அவள் தள்ளப்படுகிறாள். அவளுடைய துக்கத்தை உங்களில் பலரால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். துக்கம் என்பது மரணத்தால் ஏற்படுவது மட்டும் அல்ல, குடும்பத்தில் உள்ள உறவுக்குள் வரும் பிரிவால் கூட ஏற்படலாம்.

அதனால் தான் இன்று எலியாவின் சாறிபாத் வீட்டு வாழ்க்கையைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, நாம் எவ்வளவு பெலசாலிகளாக இருந்தாலும் நம்மை பாதிக்கும் துக்கத்தைப் பற்றியும் சிந்திக்கலாம் என்று நினைத்தேன்.

தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள். கிறிஸ்து இயேசுவின் பிரசன்னம் நம்மோடு இருக்குமானால் எவ்வளவு கசப்பான சூழலையும் மாற்றிவிடலாம் என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். ஆனால் எலியாவைப்போல நாம் நம்முடைய குடும்பத்தில், சமுதாயத்தில் உள்ள துக்கிப்போருக்கு சுகத்தையும் ஆறுதலையும் கொண்டு வருகிறோமா என்பதே கேள்வி.

கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, தம்மிடம் துக்கத்தோடு வந்தவருக்கு எவ்வளவு மென்மையான ஆறுதலைக் கொடுத்தார் என்பதை நாம் அறிவோம். பன்னிரண்டு வருடம் பெரும்பாடுள்ள ஸ்திரீயை சமுதாயம் புறக்கணித்தது. அவளுடைய மதமே அவளை ஆலயத்துக்குள் நுழையக்கூடாது என்றது.

அந்தக் கொள்ளையான வரி வசூலித்த மனிதன் சகேயு! யாரும் இவனோடு இருக்கவே விரும்பவில்லை. ஒரு நல்ல நண்பன் கூட அவனுக்கு இல்லை. தான் இழந்த வாழ்க்கையைக் குறித்து துக்கித்திருப்பான். கர்த்தராகிய இயேசு அவனுக்கு விடுதலையைக் கொடுத்தார்.

தீரு, சீதோன் நாட்டிற்கு மூன்று நாள் பிரயாணமாய்ப் போய் அங்கு துக்கத்திலிருந்த ஒரு பெண்ணை சந்தித்தார். ஏனெனில் அவளுடைய மகள் மிகவும் வியாதியாயிருந்தாள். அவளுக்கு துக்கத்திலிருந்து விடுதலை தேவைப்பட்டது.

சாறிபாத் விதவையின் துக்கம் அவளுடைய ஒரே குமாரனை இழந்தது. எலியா அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய பிரசன்னத்தினால் ஆறுதலைக் கொடுத்தான். அதுதான் அந்த வேளையில் அந்தப் பெண்ணுக்குத் தேவைப்பட்டது.

இன்று நீயும் நானும் யாருக்கு ஆறுதலைக் கொண்டு வருகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment