இராஜாக்கள் 17:17 – 18 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன?
சில நேரங்களில் நான் வேதத்தைப் படிக்கும்போது, சிலருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களைப் பார்த்து ஏன் இப்படி நடந்தது, இந்த மனுஷனுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கப்பட்டது என்று எனக்குள் கேட்பதுண்டு. அந்த மாதிரியானத் தருணம்தான் இதுவும்.
அந்தப் பெண்ணைப் பற்றி பார்ப்போமானால் அவள் முதலில் விறகு பொறுக்கிகொண்டிருந்ததைப் பார்த்தோம். இருந்த கடைசி மாவிலும், எண்ணெயிலும் அடை சுட்டு தங்களுடைய கடைசி உணவை உண்ண தயாராகிக் கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட வேளையில் திடீரென்று வந்த அந்நியன், தன்னுடைய பிள்ளைக்குக் கூட அடை சுடுமுன்னர் தனக்கு ஒன்று கொடுக்குமாறு வேண்டியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.
ஆனால் அதன்பின்னர் அற்புதம் நடந்தது. அவர்கள் மூவரையும் போஷிக்க மாவும், எண்ணெயும் குறைவுபடவேயில்லை. அந்த விதவைக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம். நான் அந்தப் பெண்ணின் இடத்தில் இருந்திருந்தால், எல்லாமே நன்றாக நடக்கிறது என்று மனதுக்குள் பூரித்திருந்திருப்பேன்.
அவள் இருந்த நிலையை விட இப்பொழுது நிம்மதியான வாழ்க்கை, அன்றன்றுள்ள அப்பம் கொடுக்கப்படுகிறது என்று அவள் நிம்மதியாக இருக்கத் தொடங்கியபோது, ஒரு பூகம்பம் அவளைத் தாக்கியது. ஒரு கணத்தில் அவளை சுற்றியுள்ள எல்லாமே நொறுங்கிப்போனது. அவள் துக்கத்தோடு கதற ஆரம்பித்தாள். அந்த துக்கத்தில் புதிதாக உள்ளே வந்திருந்த எலியாவை குற்றம் சொல்ல ஆரம்பித்தாள்.
அன்று சாறிபாத்தில் நடந்தது இன்று உன்னுடைய குடும்பத்திலும் நடந்து கொண்டிருக்கலாம்.அந்த விதவை எலியாவை வார்த்தைகளால் குத்தியது போல இன்று உன்னை யாராவது குத்திக் கொண்டிருக்கலாம். இந்தப் பெண் தன்னுடைய துக்கத்தை காட்டத் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்த எலியாவைத் தாக்கியது போல நீயும் இன்று தாக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
இப்பொழுது எலியா அதை எப்படி எதிர்நோக்கினார் என்று பார்ப்போம். எலியா வார்த்தைகளால் தாக்கப்பட்ட போது எப்படி நடந்து கொண்டார்?
கிலேயாத்தின் மலைப்பிரதேசத்தில், தனிமனிதனாய் வாழ்ந்தவன், கேரீத் ஆற்றண்டையில் தனிமையாய் இருந்தவன், திடீரென்று சாறிபாத்தில் ஒரு வீட்டுக்குள் குடியேற்றப்படுகிறான். அவனுடைய பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டியிருந்தது. இன்னொருவருடைய வீட்டில் நெடுநாள் விருந்தாளியாய் வாழும்போது எவ்வளவு காரியங்களை நாம் அனுசரித்துப் போக வேண்டியதிருக்கும்.
அப்படிப்பட்ட வேளையில், அந்த அமைதியான குடிலில் திடீரென்று இருள் மூடுகிறது. அவளுடைய ஒரே குமாரன் அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டான். அந்தப் பெண் திடீரென்று சுனாமியாக மாறிவிட்டாள். அவளுக்குள் பொங்கிய துக்கம் வெடித்து சிதறியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மலைவாழ், தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்துவந்த எலியா இப்பொழுது தேவனுடைய மனிதனாய், அவன் கற்றுக் கொண்ட தாழ்மையை வெளிப்படுத்துகிறான். அவன் அந்தப் பெண்ணின் துக்கத்தால் ஏற்ப்பட்ட புண்ணை ஆற்ற தைலத்தை ஊற்றுகிறான்.
நாம் எப்படி? துக்கப்படுவோரின் புண்ணை ஆற்ற என்ன செய்கிறோம்? நம்மால் எதைக் கொடுக்க முடியுமோ அதைத் தான் நாம் முதலில் கொடுக்க வேண்டும். ஆறுதலான வார்த்தைகள்! அரவணைப்பு!
எலியா அந்த ஏழை விதவைக்கு , அவளுடைய வீட்டுக்குள் ஆறுதலைக் கொண்டு வந்தான். அப்படி செய்ததின் மூலம் அவன் தன்னுடைய தேவாதி தேவனுக்கு மகிமையைக் கொண்டு வந்தான்.
தேவன் நம்மை ஆறுதல் படுத்துவதே நாம் மற்றவருக்கு ஆறுதலாய் இருப்பதற்காத்தான் என்பது தெரியுமா?
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
