Tamil Bible study

இதழ்:2346 ஒருவரை சோர்ந்துபோக விடாமல் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!

1 இராஜாக்கள் 17: 18   அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள்,

சாறிபாத் விதவையின் ஒரே மகன் இறந்துவிட்டான். அவளும் அவளுடைய குமாரனும் உணவில்லாமல் நாம் மரித்து விடுவோம் என்று நினைத்த  வேளையில் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டனர். நமக்கு வந்த ஆபத்து போய்விட்டது, இனி பஞ்சம் நீங்கும்வரை எந்தப் பிரச்சனையும் வராது என்று அந்தப்பெண் திருப்தியடைந்த வேளையில், அவள் எதிர்பாராத தீங்கு நடந்து விட்டது. ஒரு விதவைக்கு , தன் ஆண் பிள்ளையை இழப்பது தாங்கமுடியாத ஒரு இழப்பாகும்.

இந்தத் தாய் என்ன செய்வாள்? ஏன் எனக்கு இவளவு பெரிய தீங்கை கொண்டு வந்தீர் என்று எலியாவைப் பார்த்து கோபப்படுகிறாள். அதுமட்டும் அல்ல, அவள் தான் செய்த எதோ ஒரு தவறைத் தண்டிக்க தேவன் எலியாவை அவளிடத்தில் அனுப்பியிருக்கிறாரோ என்று நினைக்கிறாள்.

அவள் அப்படி சிந்திக்க காரணம் என்ன? அவள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் தீங்கு நடந்தால், உடனே அது தேவர்கள் அவர்களுக்கு அளித்த தீர்ப்பாகவே கருதப்பட்டது. இஸ்ரவேல் மக்களும்கூட தங்களுக்கு வந்த வியாதிகள் எல்லாமே தேவனாகியக் கர்த்தர் தங்களுக்கு கொடுக்கிற தண்டனை என்றே எண்ணினர்.

இன்று நம்மில் பலர் நமக்கு ஏதாவது கொடிய கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்படும்போது, நாம் செய்த ஏதோ தவறுகளைத்தான் தேவன் தண்டிக்கிறாரோ என்று நினைக்கிறோம். மற்றவர்கள் அப்படிப்பட்ட சூழலைக் கடக்கும்போது நாமும் அதே கண்ணோட்டத்தோடே அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்று எண்ணுகிறோம்.

எலியா இந்தப் பெண்ணின் வீட்டுக்குள் வரும் முன்னர் எங்கிருந்தான் என்று சற்று பின்னொக்கிப் பார்ப்போம். கிட்டத்தட்ட ஒரு வருடகாலம், கேரீத் ஆற்றண்டையில், மனித நடமாட்டம் அற்ற இடத்தில், உறவாட தேவனைத்தவிர வேறு யாருமற்றத் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தான். அங்கு ஒவ்வொருநாளும் தேவனுடைய புதிய கிருபையை ருசி பார்தான். ஒவ்வொருநாளும் காகம் சரியான வேளையில் அவனுடைய உணவை எடுத்துக் கொண்டு வந்தபோது, தன்னைப் போஷித்து பாதுகாக்க வல்ல தேவனுடைய செட்டைகளுக்குள் தஞ்சம் புகுந்தான். அந்த ஆறு வற்றி சிறிய நீரோடை போல சுருங்க ஆரம்பித்தபோதும், சர்வ வல்ல தேவன் அவனுடைய தேவைகளை சந்தித்தார்,

இதை நினைத்து பார்க்கும்போது, எலியாவை விட மேலான ஒரு தேவ மனிதனை, தேவன் அந்த விதவையின் வீட்டுக்கு அனுப்ப முடியுமா என்று நினைத்தேன். அவன் வந்த புதிதில் ஒவ்வொரு நாள் காலையிலும் குறையாத மாவையும் எண்ணெயையும் பார்த்தவுடன், எலியா அவர்களிடம், இப்படித்தான் தேவன் என்னை கேரீத்தண்டை காகத்தின் மூலம் அனுதின ஆகாரத்தி அனுப்பிப் போஷித்தார் என்று கூறியிருப்பான். அவர் நம்மை போஷிப்பார், கைவிடமாட்டார் என்று உற்சாகப்படுத்தியிருப்பான். அவர்களை இவ்வாறு ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேறு யாரால் முடியும்?

அவளுடைய குடிசையில், வற்றாத உணவு என்ற அற்புதம் மாத்திரம் இடம் பெறவில்லை, தேவனால் அனுப்பட்ட ஊக்கமும், உற்சாகமும் தினமும் இடம் பெற்றது. இதுவே பெரிய அற்புதம் என்று நான் சொல்வேன்.

வில்லியம் பார்க்ளே அவர்கள் எழுதியவாறு, அநேக நேரங்களில் ஒருவரிடம் பேசப்படுகிற வார்த்தையோ, அளிக்கப்படுகிற உற்சாகமோ அவர்களை சோர்ந்துபோகாமல் தங்கள் கால்களில் நிற்கச் செய்கிறது. அப்படிப்பட்ட வார்த்தையை பேசுகிறவர்கள் பாக்கியவான்கள்.

இன்று நீ யாரை ஊக்குவிக்க, உற்சாகப்படுத்த அனுப்பப்பட்டிருக்கிறாய்?

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment