1 இராஜாக்கள் 17: 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள்,
வேதத்தில் நாம் காணும் மனிதர்களில் ஒருவன் தன் வாழ்வை அதிகமாக நாசம் செய்து விட்டான் என்றால் அது தாவீது என்றே நான் சொல்வேன்!
இன்னொருவனின் மனைவிமேல் காமம் கொண்டது மட்டுமல்லாமல், அவள் கர்ப்பவதியானாள் என்றவுடன் அவளது கணவனைத் திட்டமிட்டுக் கொலை செய்தவன். இப்படி நடந்து கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அவன் நன்கு அறிந்தவன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவன் தன்னுடைய நடத்தையை, முதலாவது தேவனுடைய பார்வையிலிருந்தும், பின்னர் தன்னுடைய இராஜ்யத்தின் ஜனங்களிடமிருந்தும் மறைத்து விட்டதாக நினைத்தானே அதுதான்!
நான் என்றுமே இந்த சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரு காரியம் என்னவென்றால் , தேவன் நாம் செய்வதெல்லாவற்றையும் பார்க்கிறார் என்பது மட்டுமல்ல, நம்முடைய குற்றங்களின் அடிப்படை பின்னணியையும் அறிவார். நாம் தவறுவதற்கு முன்னரே அதை அறிந்திருக்கிறார்.
தாவீது அறிக்கையிட்ட விதமாக, (சங்:69:5) தேவனே என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர், என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
இந்த ஒரு அறிவு , நாம் தேவனுக்கு முதலிடம் கொடுத்து வாழும்போது நமக்குள் வருகிறது. இந்த அறிவு, நாம் எதையும் அவரிடத்திலிருந்து மறைக்கவே முடியாது, நாம் எந்த இடத்தையும் நமக்கு மறைவிடம் என்று நினைக்கக்கூடாது என்றுத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
சாறிபாத் விதவையின் வீட்டிலும் இதுதான் நடந்தது என்று நான் நினைக்கிறேன். எலியாவின் தேவனின் கிருபையை அனுபவித்த அவள், நிச்சயமாக அவள் வானத்துக்கும் பூமிக்கும் தேவனாகிய அவரை விசுவாசிக்க ஆரம்பித்திருப்பாள். எலியாவை தேவனுடைய ஊழியக்காரன் என்றும் அறிந்திருப்பாள்.
அப்படிப்பட்ட வேளையில் அவளுடைய குமாரன் மரணத்தைத்தழுவியபோது, அவளுடைய வேதனையின் மத்தியில் பலவித எண்ணங்கள் அவள் மனதில் ஓடின. அவள் செய்த தவறுகள் எல்லாம் அவளை சுற்றி ரீங்காரமிட்டன. தன்னுடைய பாவங்களே தன்னுடைய ஆசீர்வாதத்தைத் தடை செய்வதாக எண்ணியிருப்பாள். அவற்றை அவள் எலியாவிடம் நேரிடையாகக் காட்டுவதை இன்றைய வேதாகமப்பகுதி நமக்குக் காட்டுகிறது. முதலில் அவள் அவனை தேவனுடைய மனுஷனே என்று அழைப்பதின் மூலம் அவள் எலியாவுக்கும், அவனுடைய தேவனுக்கும் மரியாதைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். பின்னர் அவள் தன் அக்கிரமத்தைக் குறித்துப் பேசுகிறாள்.
இந்தத் தவறைத்தான் நம்மில் அநேகர் செய்கிறோம். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்தபோது, இதை நமக்குத் தெளிவாகக் கற்பித்தார். நீ ஒரு ஐந்துமுறை மணந்த சமாரியப் பெண்ணாக இருந்தாலும் சரி, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைப்போல இருந்தாலும் சரி, அவர் உன்னை சந்திக்க வருவார். நீ 18 வருடங்கள் அசுத்தம் என்றும், தீட்டு என்றும் கருதப்பட்டவளாக இருந்தாலும் சரி, நீ அவரைத் தொட சம்மதிப்பார்.
சகோதர், சகோதரிகளே! இது உங்களுக்கும் பொருந்தும்! உங்கள் கடந்த காலம் எப்படிப்பட்டதாயிருந்தாலும் அது உங்கள் ஆசீர்வாதத்தைத் தடை செய்ய முடியாது!
ஆம்! நம்முடைய கடந்தகாலம் நம்மை அவரிடமிருந்து பிரிக்கவே முடியாது. இதை நீ நம்பாவிட்டால், தாவீதிடம் கேள், அவனுடைய கடந்தகாலத்தின் இருளை மன்னித்து, மறந்து அவனை நேசித்த அவனுடைய பரமபிதாவின் மன்னிக்கும் கிருபையை அவனைத்தவிர யார் அதிகமாக உணர்ந்திருக்க முடியும்?
அந்த விதவையின் கடந்த காலம் எப்படிப்பட்டதாயிருந்தாலும் சரி, எலியா அவளுடைய பிள்ளையைத் தன்னுடைய கரத்தில் ஏந்தி சென்றது, எலியாவின் தேவனாகியக் கர்த்தர், நம்முடைய கடந்த காலத்தின் பாவங்களை நினையாமல் நம்மை அரவணைப்பதைக் காட்டுகிறது.
தேவனின் மன்னிப்பில் ஒரு சிறந்த அம்சமே அவர் மன்னித்த பாவங்களை மறந்தும் விடுகிறார் என்பது. அந்த விதவையின் எந்த பாவமுமே அவள் நினைப்பதற்கும், கேட்பதற்கும் மேலாக தேவன் அவளுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களைத் தடை செய்யமுடியாது என்பதே உண்மை. அது அவளுடைய இறந்த மகனை உயிரோடே எழுப்புவதையும் கூடத் தடை செய்ய முடியவில்லை!
தேவன் மன்னித்த, மறந்த உன்னுடைய கடந்த காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? உன்னுடைய கடந்த காலத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதா என்று அறிய நீ ஒன்றும் பரலோகத்துக்கு ஏறிப்போக வேண்டாம். உன் உள்ளமே அதை உனக்குக் காண்பிக்கும், உன்னால் மற்றவர்களை இளகிய மனதோடு மன்னிக்கவும் முடியும்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
