1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,
நாம் எலியாவோடு கர்மேல் பர்வதத்தில் நின்று கொண்டிருந்தோம்! மிகவும் நீண்ட ஒரு நாளுக்குப் பின், பொழுது போகையில் கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்த அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கி சென்றனர், அந்தப் பொழுதில் எலியா ஆகாபை நோக்கி,
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். (1 இராஜாக்கள் 18 : 41)
இந்த வார்த்தைகள் என் கவனத்தை ஈர்ந்தது.
இரண்டு தனிப்பட்ட மனிதரை இங்கு பார்க்கிறோம். எலியாவைப் போலவே அன்று ஆகாபும் ஒருவேளை உணவு உண்ணாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது எலியா அவனை எழுந்து போய் உணவு உண்ணுமாறு கூறுகிறான். ஆனால் தேவனுடைய மனிதனாகிய எலியா போஜனத்தைப் பற்றிக் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, தேவனோடு பேச ஆரம்பிக்கிறான்.
இதை வாசிக்கும்போது, எலியா எவ்வளவு பெரிய காரியத்தை செய்தான்! தேவனோடு பேசி வானத்தின் அக்கினியையே பூமிக்குக் கொண்டு வந்தான். இன்றைய தினத்துக்கு இது போதாதா? என்று என் மனதில் கேள்வி எழுந்தது! இப்படி நாம் அடிக்கடி நினைப்பதில்லையா? ஜெபிக்க ஒரு நேரம், பொழுதுபோக்க ஒரு நேரம், வேலை செய்ய ஒரு நேரம், உணவு உண்ண ஒரு நேரம் ! அப்படித்தானே?
என்னைப்போல நீங்களும் இருப்பீர்களானால், உங்கள் நாளும், அன்றன்று என்னென்ன செய்ய வேண்டும் என்ற குறிப்பீடோடு ஆரம்பிக்கும். அதை செய்து முடித்தவுடன், அதை டிக் செய்து விடுவோம். உண்மையில் சொல்லப்போனால் ஜெபமும் அன்றைய நாளுக்குரிய ஒரு கடமைதான்! குறிப்பிட்ட நேரம் அதற்கும் ஒதுக்கப்பட்டு விடும்!
ஆனால் ஜெபம் என்பது ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கி செய்யப்பட வேண்டிய ஒரு கடமை அல்ல என்று நான் எப்பொழுது உணர்ந்தேனோ அப்பொழுது என்னுடைய ஜெப வாழ்க்கை நான் அன்று செய்த ஒவ்வொரு கடமையிலும் இழைபோல ஓடியது. அந்த நாள் முழுவதும் ஜெபத்தோடு செயல்பட முடிந்தது.
வேதத்தில் நாம் காணும் தேவனுடைய பிள்ளைகள் அநேகர் தாங்கள் தேவனோடு ஐக்கியம் கொள்ள வேண்டுமானால் ஜெபத்தை ஒரு குறிப்பிட்ட அட்டவணைக்குள் கொண்டு வந்து டப்பாவில் அடைக்க முடியாது என்ற இரகசியத்தை அறிந்திருந்தனர். தானியேல் போல ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட வேளையில் ஜெபிப்பது அவசியமே, ஆனால் அதுமட்டும் போதாது என்று சொல்ல வருகிறேன்.
எலியா கர்மேல் பர்வதத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக எல்லோர் மூனாலும் ஜெபித்திருந்தாலும், அது அவனுக்கு போதாது என்று தேவனோடு தனிப்பட்ட உறவாடுதலுக்காக அவன் மலையின் உச்சியைத் தேடிப் போகிறான். அவன் தேவனுடைய பிரசன்னத்தை நாடும் முன், எல்லாவித தடைகளையும், ஆகாபையும் கூட களைந்து விடுகிறான். ஆகாப் தன் சரீரப் பசிக்காக உணவு உண்ணச் செல்கையில், எலியா தன் தேவனைத் தேடும்படியாய் மலையின் மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, அவருடைய பிரசன்னத்தை நாடுகிறான்.
என்ன அருமையான பாடம் நமக்கு! நம்மில் பலர் அதிக அவசர வாழ்க்கை வாழ்வதால் கதவில் ஒரு கையை வைத்துக் கொண்டே ஜெபிக்கிறோம். என்னுடைய கதவு கைப்பிடி ஜெபங்கள் எல்லாம், என்னை இன்று ஆசீர்வதியும் தேவனே, என்னை பாதுகாத்துக் கொள்ளும், என் குடும்பத்தை பாதுகாரும் என்பதாகவே இருந்தது.
ஆம்! என் வாழ்க்கையும் இப்படி அவசர ஜெப வாழ்க்கையாகவே இருந்தது! இந்த ஜெபத்தில் ஒரு திருப்தி வேறு! சுத்தமாக ஜெபிக்கவே செய்யாத எத்தனையோ பேரைவிட நான் அதிகம் ஜெபிக்கிறேன் என்று. ஆனால் இந்த சோம்பேறித்தனமான ஜெப வாழ்க்கை என்னை வறண்டு போகச் செய்தது.
எலியாவைப் போன்ற தேவ மனிதர்கள் தேவ பிரசன்னத்தை நாடியதைப் பற்றிப் படிக்கும் போது நம் வறண்ட வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தை நாம் எவ்வளவு அதிகம் தேட வேண்டும் என்று உணருகிறோம் அல்லவா? எலியா தேவனோடு கொண்ட ஐக்கியம் எனக்கும் வேண்டும் என்ற வாஞ்சை வருகிறது அல்லவா? எலியாவின் ஜெப வாழ்க்கை அறுந்து போகாத சங்கிலி போலத் தொடர்ந்தது. அது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள்ளோ அடங்கவில்லை!
எலியாவைப்போல, தேவனை முகமுகமாய் தரிசித்த மோசேயைப் போல தேவ பிரசன்னத்தை ஒவ்வொரு நொடியும் நீயும் நாடு! தேவனுடைய பிரசன்னம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கும் சுகமே தனிதான்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
