1 இராஜாக்கள் 18:43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
எபிரேயர் 10:36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
கால தாமதத்தை விரும்புவோர் யாரையும் நான் இதுவரை பார்த்ததேயில்லை!
என்னுடைய இத்தனை வருட பயணங்களில், சரியான நேரத்திற்குள் விமான நிலையம் போவதும், அங்கே உள்ள போர்டில் விமானம் புறப்படும் கேட் நம்பரையும், சரியான நேரத்தில் புறப்படுகிறதா அல்லது தாமதா என்று பார்ப்பதும் எப்பொழுதும் நாங்கள் செய்கிற ஒரு காரியம் தான். ஆனால் விமானம் புறப்படும் நேரம் தாமதம் என்பதைப் பார்க்க மட்டும் ஒருநாளும் பிடிக்காது. வெளிநாட்டு பயணங்களின் போது, ஒரு விமானம் தாமதமானதால் தொடர்ந்து எடுக்க வேண்டிய அடுக்கடுத்த விமானத்தைத் தவற விட்டு, வேறே நாடுகள் வழியாய் சுற்றிக் கொண்டு வந்த அனுபவங்களும் உண்டு!
தாமதம் என்ற வார்த்தைக்கு பின்னால் நீண்டக் காத்திருப்பு என்ற வார்த்தை மறைந்து கொண்டிருக்கிறது! அது ஒரு விமான நிலையமாகட்டும், அல்லது நாம் எதிர்பார்த்திருக்கும் வேலையாகட்டும், அல்லது பிள்ளைகளின் திருமண காரியமாகட்டும், நாம் நேசிப்போரின் இரட்சிப்பு ஆகட்டும் – எதுவானாலும் காத்திருப்பு கடினமே!
நம்முடைய பெருமூச்சின் வேண்டுதலுக்கு பதில் வரும் வரை காத்திருப்பதும், ஒரு வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருப்பதும் அதைவிட மிகவும் கடினம் என்று நினைக்கிறேன். நான் பொறுமையை இழக்கும்போதெல்லாம் தேவன் என்னுடன் , தரித்திரு, சும்மாயிரு, காத்திரு என்ற வார்த்தைகளோடு பேசி நான் காத்திருப்பதின் அவசியத்தை தெளிவு படுத்தியிருக்கிறார்.
தேவன் வடிவமைத்த எலியாவின் வாழ்க்கையில் , அவன் மூன்றரை வருடங்கள் மழை வரக் காத்திருக்க வேண்டியதாயிற்று. வறட்சியின் காலம் ஆரம்பித்தபின்னர் எத்தனை நாட்கள் அல்லது வருடங்கள் அது தொடரும் என்று தேவன் எலியாவுக்கு சொல்லவேயில்லை. அவன் அந்த நாட்களில் எங்கே எப்படி வாழப்போகிறான் என்றும் சொல்லவேயில்லை. அவனுக்கு சொல்லப்பட்டதெல்லாம் அந்தந்த நாளுக்குரிய கட்டளைதான்! ஒவ்வொருநாளும் அவன் தேவனை சார்ந்து வாழும் வாக்கையை வாழக் கற்றுக்கொண்டான்.
எலியா மலையின் உச்சியில் ஏறி, தேவன் வாக்குத்தத்தம் பண்ணின மழைக்காக ஜெபிக்க ஆரம்பித்தபோது, அவனுடைய வேலைக்காரன் வந்து மழைக்கு அடையாளமே இல்லை என்றான். எனக்கு என்ன தோன்றியது என்றால், எலியா கர்த்தரோடு கொண்ட அனுபவத்தால் தன்னுடைய மனதில், பரவாயில்லை! எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது, ஏனெனில் என் நேரம் என்பது கர்த்தருடைய நேரம் தான். நான் இன்னும் பொறுமையாகக் கத்திருப்பேன். அவர் தாமதிக்கும் இந்த வேளையில் நான் அவரை சார்ந்து வாழும் இந்த வாழ்க்கைக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன். அவருடைய வேளையில் அவர் வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றுவார், என்று நினைத்திருப்பான்.
இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி! இன்று உங்கள் ஜெபத்திற்கு பதில் வராமல் தாமதமாகியுள்ளதா? நீ பொறுமையாக காத்திருந்தும், எலியாவின் ஊழியக்காரன் கூறியது போல பதில் வரக்கூடிய அடையாளமே இல்லையா?
இன்று உங்களுக்கு என்னுடைய ஆறுதலான வார்த்தை என்னவென்றால், தயவுசெய்து காத்திருங்கள்! தொடர்ந்து விசுவாசத்தில் காத்திருங்கள்! தேவன் எலியாவின் விசுவாசத்தின்படி வெறும் மழையை அனுப்பவில்லை, எபிரேய வார்த்தை விளக்குகிறவிதமாய் கர்த்தர் பெருமழையை அனுப்பினார்.
பெரும் இரைச்சலோடு வரும் பெருமழை போன்ற ஆசீர்வாதம் உங்களையும் வந்தடையும்! உங்கள் ஜெபம் கேட்கப்படும்போது, அதை உங்களால் மறைத்து வைக்க முடியாது! கர்த்தர் இவ்வாறு தம் பிள்ளையை ஆசீர்வதித்திருக்கிறார் என்று அனைவரும் பார்த்து வியப்பார்கள்! கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டிருக்கிறார்! ஆமென்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
