1 இராஜாக்கள் 18:43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
முகங்குப்புற விழுந்து ஜெபித்த எலியாவிடம் அவன் ஊழியக்காரன் வந்து ஒன்றும் இல்லை, மழைக்கு அறிகுறியே இல்லை என்றான்.
முதலில் இதை வாசித்த போது அந்த மலையில் எலியா தன் ஊழியக்காரனை எங்கு அனுப்பி மேகம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னான் என்று யோசித்தேன். நாம் சற்று தலையைத் தூக்கி வானத்தை அண்ணாந்து பார்ப்போம். கருமேகம் காணப்பட்டால் மழை வரும் என்ற அறிகுறி அப்படித்தானே!
அந்த கர்மேல் மலையின் பூகோளத்தை சற்று ஆராய்ந்த போது, அங்கு புயல் மழையைக் கொண்டு வந்தது மத்திய தரைக் கடலே என்று தெரிய வந்தது. அந்த சமுத்திரத்தின் கரையிலே தான் கர்மேல் பர்வதம் இருக்கிறது. இந்த இடத்தை நான் பார்த்தும் இருக்கிறேன் என்று முன்னமே எழுதியிருந்தேன். மேகங்கள் புறப்பட்டு வரும் திசை அங்குள்ளவர்களுக்கு பழகியிருந்தது. அதனால் தான் எலியா அவனைப் போய் சமுத்திரமுகமாய்ப் பார் என்கிறான்.
ஆனால் இங்கு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது எலியா அவனிடம் இன்னமும் ஏழுதரம் போய்ப் பார் என்றதுதான். இந்த ஏழு என்ற எண் வேதத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
தேவன் வானத்தையும் பூமியையும் உருவாக்கியபோது ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்று பார்கிறோம். தேவனுடைய படைப்பு முழுமையாகி விட்டதன் அடையாளம் அது. இந்தப் பகுதி எலியா கர்மேல் பர்வதத்தின் மேல் செய்த ஊழியத்தின் முழுமை என்று சொல்ல நான் தயங்க மாட்டேன் ஏனெனில் ஏழாந்தரம் அந்த ஊழியக்காரன் போய்ப் பார்த்தபோது சிறிய மேகம் சமுத்திரத்திலிருந்து எழும்புவதாகக் காண்கிறான், அதன் பின்னர் மழை வந்து, வறண்ட பஞ்ச காலம் முடிவடைந்தது எனக்கு முழுமையாகவேத் தோன்றியது.
அந்த சிறிய மேகம்!!!! ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அளவுக்கு சிறிய மேகம் சமுத்திரத்திலிருந்து எழும்பிற்று !!!! எலியாவைப் போன்ற விசுவாசிகளுக்கு பெரிய மேகம் தென்பட வேண்டிய அவசியமேயில்லை. அவனுடைய விசுவாசம் மிகப்பெரியதானதால் ஒரு சிறிய மேகம் அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டதை அவனுக்கு விளக்கிற்று. அவன் பெருமழை வரப்போகிறதை தன் மனக்கண்களால் கண்டான். தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுகிறதையும் கண்டான்.
மலை உச்சியில் தன்னைத் தாழ்த்தி, பணிந்து, குனிந்து ஜெபித்தும் மேகத்தைக் காணாமல் எலியா மனந்தளர்ந்து போகவேயில்லை! உள்ளங்கை அளவுக்கு சிறிய மேகம் எழுந்தபோதும் அவன் மனம் தொய்ந்து போகவேயில்லை. அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் எடிசன் கூறியவிதமாக, “நம் ஒவ்வொருவரின் பெலவீனமுமே முயற்சி செய்யாமல் கைவிட்டு விடுவதில் தான் உள்ளது. இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே வெற்றியின் இரகசியம்” என்பது எவ்வளவு உண்மை. எலியா ஒருமுறை அல்ல ஏழுமுறை மேகம் எழுகிறதா என்று பார்க்கச் சொன்னான்.
இன்று கர்மேல் பர்வதத்தில் பணிவோடு ஜெபித்த எலியா எனக்கு ஒரு பெரிய காரியத்தை கற்றுக்கொடுக்கிறான், அது என்னவெனில், நாம் ஜெபித்தால் மட்டும் போதாது, நம் ஜெபத்திற்கு பதில் வரும்வரை பொறுத்திருந்து ஜெபிக்க வேண்டும்! முதலில் பதில் வராமல் இருக்கலாம், பின்னர் அந்த பதில் முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எலியாவைப் போலத் தளராமல் ஜெபிக்கும்போது நிச்சயமாக வெற்றி உண்டு!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
