Tamil Bible study

இதழ்:2367 நான் பெருமைப்பட ஒன்றுமே இல்லை!

1 இராஜாக்கள் 18 : 44 – 46    ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான்.  

அன்று கர்மேல் பர்வதத்தின் மேல் எலியா தீர்க்கதரிசி தனி ஒருவனாக நின்று, தேவனுக்காக போராடியபோது, அங்கு கூடியிருந்தவர்களில் யாருக்கு வல்லமை அதிகம் என்று உலக நோக்காக பார்ப்போமானால் , நிச்சயமாக சமாரியாவில் சிங்காசனம் அமைத்திருந்த ராஜாவாகிய ஆகாபும் அவன் மனைவி யெசெபேலும் தான் அதிக வல்லமையுள்ளவர்களாகத் தோன்றியிருப்பார்கள்.

ஆனால் சால்வேஷன் ஆர்மி என்ற பெரிய கிறிஸ்தவ ஸ்தாபனத்தை நிறுவிய , வில்லியம் பூத் அவர்களின் வார்த்தையில், ஒரு தனி மனிதனின் பெலன் அல்லது வல்லமை அவன் எவ்வளவு தூரம் தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறான் என்பதில் உள்ளது. எலியா தன்னை தேவனுக்கு முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்திருந்ததால் அன்று அவன் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்த முடிந்தது.

ஒருவர் இவ்வாறு எழுதியிருந்ததைப் படித்தேன், தேவனுடைய கரத்தில் நாம் வெறும் கம்பிக் கயிறு (wire)தான். நம்மை தேவனாகிய கர்த்தர் என்னும் மின் சாக்கெட்டோடு இணைக்கும்போது நம்மூலமாக தேவனுடைய வல்லமை என்னும் கரெண்ட் பாய்கிறது. ஆம்! அன்று அந்த கர்மேல் பர்வதத்தில், ஆகாப் அல்ல எலியாவே அதிக வல்லமையை வெளிப்படுத்தினான்.

எலியா ஜெபத்தின் மூலமாக பெற்ற வல்லமையை நாம் ஒருவேளை கண்டிருப்போமானால்  அப்படிப்பட்ட வல்லமை நமக்கும் வேண்டும் என்று தோன்றியிருக்கும். எலியா ஒரு முரட்டு மலைவாழ் மனிதனாய் வாழ்ந்தவன். அவனுடைய ஆவிக்குரிய வாழ்விலும் மிகுந்த வல்லமையான  இரும்பு மனிதன். நாமும் அப்படி இருக்கக்கூடாதா என்ற ஆசை உண்டு அல்லவா?

ஆனால் டி.எல் மூடி அவர்கள் கூறியதைப் பாருங்கள். தேவன் ஒரு  மலையை நகர்த்த பெரிய இரும்புக் கம்பியை அல்ல, சிறிய புழுவையே தேர்ந்தெடுப்பார். அவர் இதைக் கூறியபோது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள்தான் அவரின் நினைவிலிருந்திருக்கும்.

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். (2 கொரி 4 : 7)

பவுல் கூறிய மண் பாண்டங்கள் என்ன என்று நமக்குத் தெரியும்! எவ்வளவு சீக்கிரம் அவை உடையக் கூடியவை என்று நாம் அறிவோம். சீக்கிரமாக கீறல் விழுந்துவிடும். ஒருநாள் நாம் சமைக்கவோ அல்லது அழகுக்கோ பயன்படுத்தும் அவை மறுநாள் சுக்குநூறாக நொறுங்கவும் கூடும். அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய வல்லமை நம்மில் வெளிப்படும்போது, நமக்கு அதில் எந்தவிதமான பெருமைக்கும் இடமில்லை என்பதை எவ்வளவு அழகாகத் தெளிவு படுத்துகிறார் பாருங்கள்!

அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். (2 கொரி 12 : 10)  

பவுலின் வார்த்தைகளின்படியாகப் பார்த்தால் நாம் பலவீனப்படும்போது பலமுள்ளவர்களாகிறோம். பெலவீனப்பாத்திரங்களாகிய நம்மைப் பெலப்படுத்துபவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே! நாம் கிறிஸ்துவுக்காக செய்யும் எல்லா காரியங்களிலும் நமக்கு பெலன் கொடுப்பவர் அவரே! இதில் நாம் பெருமைப்பட ஒன்றுமேயில்லை.

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு (பிலி 4:13) என்ற பவுல் அப்போஸ்தலன் போல, மிகுந்த பெலவீனனாக இருந்தும், கர்மேல் பர்வதத்தின்மேல் தேவ வல்லமையை வெளிப்படுத்திய எலியாவைப் போல  நாமும் ஒவ்வொருநாளும் அவர் கொடுக்கும் பெலத்தால் செயல்படுவோம். நாம் வெறும் மண்பாண்டங்கள்தான் என்பதை மறந்து நாம் பெருமையைத் தேடி அலையவேண்டாம்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment