1 இராஜாக்கள் 19:4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,
கர்மேல் பர்வதத்தில் நடந்ததேவனுடைய பெரிய மகத்துவமான, வல்லமையான செயலால், பாகாலின் தீர்க்கதரிசிகளின் பட்டாளத்தையே அழித்து விட்டு அந்த மலையை விட்டு இறங்கி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. கர்த்தர் வானத்து அக்கினி மூலம் எலியாவுடைய பலிகளை பட்சித்து தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணியிருந்தார்.
எலியா அந்த மலைமேல் பாகாலின் தீர்க்கதரிசிகள் மேல் வெற்றி சிறந்ததோடு நிறுத்தி விடவில்லை, இன்னும் மலை உச்சிக்கு ஏறி, தன்னை தாழ்த்தி மழைக்காக ஜெபித்தான் என்றும் பார்த்தோம். அந்த நாளின் சோர்வு உடலை வருத்தியபோதும் அவன் ஆகாரத்தையோ அல்லது இளைப்பாறுதலையோ தேடிப்போகவில்லை. இருபத்து ஐந்து மைல் தூரம் , மாரத்தான் போட்டியில் ஓடுவது போல ஓடி ஆகாபின் இரதத்துக்கு முன்னே சென்றான் என்று பார்த்தோம்.அவன் அவ்வாறு ஓடியபோது பெருமழை பெய்ய ஆரம்பித்துவிட்டதை நாம் மறந்து போக வேண்டாம்.
ஆகாபை சந்தித்த பின்னர் எங்கேயோ சற்றுக் கண்ணயர்ந்த எலியாவை தட்டி எழுப்பியவனின் கையில் எலியாவுக்கு யேசபேலிடமிருந்து ஒரு செய்தி காத்துக்கொண்டிருந்தது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவன் உயிரை வாங்கி விடுவேன் என்ற அச்சுறுத்தல்.
எலியா என்ன செய்தான்? எழும்பி அங்கிருந்து 80 மைல் தூரம் ஓடுகிறான்! யேசபேலின் பார்வைக்கு அப்பால் போய் சேர்ந்தாகி விட்டது! இங்காவது சற்று இமைகளை மூடுவானா என்றால் அதுவும் இல்லை. தன்னுடைய ஒரே துணையாயிருந்த ஊழியக்காரனை அங்கே பெயர்செபாவிலே விட்டு விட்டு, அங்கிருந்து ஒருநாள் பிரயாணம் பண்ணி, வனாந்தரத்தில் ஒரு சூரைச் செடியின் கீழ் உட்காருகிறான்.
இங்கு ஒரு உண்மை ஒளிந்து கொண்டுள்ளது! கண்டு பிடித்து விட்டீர்களா? இதுவரை எலியாவின் நடவடிக்கைகள் எல்லாமே கர்த்தருடைய வழிநடத்துதலால் இருந்தன! நமக்கே இது நன்கு தெரியும்! ஆகாபின் அரமனைக்கு போ என்றார், கேரீத்தண்டை போ என்றார், எழுந்து சாறிபாத்துக்கு போ என்றார், மறுபடியும் ஆகாபிடம் உன்னைக் காண்பி என்றார். அவன் மறு பேச்சில்லாமல் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஓடினான். ஆனால் இங்கு அவனை யேசபேலின் மிரட்டுதலுக்கு பயந்து எழும்பி வனாந்தரத்துக்கு ஓடு என்று கர்த்தர் சொன்னாரா? இல்லவே இல்லை!
கர்த்தருக்காக அநேக காரியங்களை ஓடி ஓடி செய்ததால் எலியாவின் சரீரம் களைத்துப் போனது, அவனுடைய சிந்திக்கும் திறமையும் குறைவுபட்டது. யேசபேலின் மிரட்டுதல் கிடைத்தவுடனே கர்த்தருடைய கட்டளைக்குக் காத்திராமல் எழுந்து ஓடுகிறான்.
புதிய ஏற்பாட்டின் காலத்தில் மார்த்தாள் அதிகமாக வேலை செய்து களைத்து போனாள். கடைசியில் வேலையில் சுமையால் அவள் கர்த்தராகிய இயேசுவிடம் வந்து ப்ரஷர் குக்கர் போல வெடிக்கிறாள். ஆனால் கர்த்தராகிய இயேசுவோ மார்த்தாளைப் பார்த்து என்ன கூறுகிறார் பாருங்கள்
பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
(லூக்கா 10 : 28 – 42)
எலியாவைப் பாருங்கள்! குறைந்த நேரத்தில் கர்த்தருக்காக எத்தனை காரியங்களை சாதித்து விட்டான்! இப்பொழுது அதனுடைய பாரத்தால் களைப்படைந்து போய் விட்டான்!
யாரோ எழுதியது ஞாபகத்துக்கு வந்தது! நாம் அவசர அவசரமாக எதையுமே செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் களைப்பும் அவசர அவசரமாய் வந்து விடும். எலியாவைப்போல இன்று நீ களைப்படைந்திருக்கலாம்!
அப்படியானால் இங்கு உன் வேலைகளை நிறுத்திவிட்டு கர்த்தருடைய சத்தத்தைக் கேள்!
நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்.
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
