1 இராஜாக்கள் 19: 9,10 இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
எலியா மிகுந்த களைப்போடு பெயர்செபாவை நோக்கி ஓடியது நமக்குத் தெரியும்! அங்கே கர்த்தர் தன் தூதன் மூலமாக உணவும், இளைப்பாறுதலும் அவனுக்கு வழங்கினார். சரீர பெலவீனத்தால் ஆத்துமத்திலும் பெலவீனம் வந்து விட்டது போலும்!
அவன் அந்த நாட்டின் வரைபடத்தில் யாருமே கண்டுபிடிக்க முடியாத ஒரு கெபிக்குள் இருந்தான். எல்லா மனிதரையும் விட்டு தூரமாக சென்று விட்டான். ஆனால் அந்த இடத்திலும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று!
இன்றைய வேதாகமப் பகுதியை இரண்டாகப் பிரித்துப் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதலில் கர்த்தர் அவனைத் தேடி ஒருக் கேள்வியுடன் வருகிறார். எலியாவே இங்கே உனக்கு என்ன காரியம்? நீ ஏன் என் சித்தத்தை விட்டு விலகிப் போகிறாய்? எலியாவைப் பார்த்து தேவனாகியக் கர்த்தர் கோபம் கொள்ளவில்லை! அவனைக் கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால் அவர் மென்மையாகக் கேட்ட அந்தக் கேள்வி தன்னுடைய சித்தத்துக்குள் அவன் வரும்படியான அழைப்பு என்றே நான் நினைக்கிறேன்.
இரண்டாவதாக நான் இந்தப்பகுதியில் பார்ப்பதை, எலியா தன் மனப்பாரத்தை இறக்கி வைத்த இடமாகத்தான் பார்க்கிறேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்று உமக்குத் தெரிய வேண்டுமா? சொல்கிறேன் கேளும்! உம்மால் தான் இங்கு இருக்கிறேன்! ஆம்! இஸ்ரவேலில் எல்லோரும் உம்மை பந்தாடிக் கொண்டிருந்தபோது நான் மட்டும் உமக்கு உண்மையாக இருந்தேன். உம்முடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் யேசபேல் கொலை செய்தபோது நான் மட்டும் ஒளிந்து கொள்ளாமல் என் கழுத்தை நீட்டினேன் அல்லவா? அரமனைக்குள்ளே கூட தைரியமாகச் சென்றேன்! உமக்காக! உமக்காகத்தான்! உனக்கு இப்பொழுது ஒரு கேள்வி உம்மிடம் கேட்கிறேன் யெகோவா! நீர் எங்கே இருக்கிறீர்? அந்த கர்மேல் மலை எழுப்புதல் 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லையே நீர் எங்கேயிருந்தீர்????? என்ன செய்து கொண்டிருந்தீர்???? என்று தன் மனதின் பாரத்தைக் கொட்டித்தீர்க்கிறான்!
வேதாகம வல்லுநர்கள் இதைப்பற்றி எழுதும் போது, ஒருவர் எழுதுகிறார், இந்த ஒரேப் கெபியில் நின்ற எலியாவுக்கும், கர்மேல் மேல் நின்ற எலியாவுக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது என்று. இன்னும் ஒருவர், எலியா கர்த்தர் பேச ஆரம்பித்ததும் தன் மனதில் உள்ளவற்றை வெடித்து விட்டான் என்று எழுதுகிறார், இன்னொருவர், எலியாவின் கண் முன்னே கர்த்தர் நிற்கவில்லை, அவன் முன்னே தெரிந்தது, அந்தக் கோபத்தில் நின்ற யேசபேல்தான் என்று எழுதுகிறார்.
தன்னுடைய பரம பிதா தன்னை நடத்தின விதத்தில் மனம் உடைந்து போன எலியாவை இங்கு பார்க்கிறோம். ஆனால் இந்த சம்பவத்தின் மூலம், பாரங்களை சுமக்க முடியாமல் தவிக்கும் தன்னுடைய பிள்ளையை பரம பிதாவானவர் நடத்திய விதமே என்னுடைய கண்களில் பட்டது. உலகத்தின் பாரங்கள் நம்மை அழுத்தும்போது, நம்முடைய பிதாவானவர் நம்மிடம் வந்து நம் பாரங்களை, நம்முடைய கவலைகளை, நம்முடைய மன வருத்தங்களை, கோப தாபங்களையெல்லாம் அவருடைய சமுகத்தில் நாம் இறக்கி வைக்கும்படி விரும்புகிறார்.
ஒரேப் மலையின் மேல் , ஒரு குகையில் தனிமையாக, மனக்கசப்புடன், பயத்துடன் நின்று கொண்டிருந்த தன்னுடைய குமாரனை தம்முடைய அன்பின் கரத்தினால் அணைக்க தேவனாகியக் கர்த்தர் வந்ததை இங்கு பார்க்கிறோம்.
இன்று உன்னுடைய பாரங்களையும் கர்த்தரிடத்தில் இறக்கி வை! தேவனாகியக் கர்த்தர் நீ கடந்து போகும் பாதையை அறிவார்! உன்னை சந்திக்க நீ ஒளிந்து கொண்டிருக்கும் குகைக்கே வருவார்! பயப்படாதே!
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1 பேதுரு 5 : 7)
உங்கள் அகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
