Tamil Bible study

இதழ்:2379 என் வேதனை யாருக்குப் புரியும்?

1 இராஜாக்கள் 19:10 நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.

எலியா கர்மேல் பர்வதத்தில் தேவனுக்காக தனித்து நின்றான்! பாகாலின் தீர்க்கதரிசிகளை தனிமையாக எதிர்கொண்டான்! ஆனால் இப்பொழுதோ அவன் ஓரேப் பர்வதத்தில்  ஒரு குகையில் தனிமையாக வாடி நின்றான்.

என்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை! என்னுடைய வலி யாருக்கும் புரியாது! இந்த எண்ணங்கள் நாம் கைவிடப்பட்ட நிலையில் நிற்கும் போதுதான்  நமக்கு வரும். விசேஷமாக நாம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையையே தியாகம் செய்து உழைத்த பின்னர், நாம் செய்த யாவையும் மற்றவர்கள் மறந்து போய்விட்டார்கள் என்பதை உணரும்போது வரும் தனிமையை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

இங்கு நான் எழுதுவது, நான் எலியாவின் இடத்தில் இருந்து பார்த்தால் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதைத்தான். இதே விதமாக வேதத்தில் நாம் காணும் பல தேவனுடைய பிள்ளைகளும் துணையில்லாமல் தனித்து விடப்பட்ட நிலையை அனுபவித்திருக்கிறார்கள்.

யோவான் ஸ்நானகன் சிறையில் தனித்து இருந்ததைக்கூட என் மனக் கண்களால் காண முடிந்தது. அன்றைய காலத்து யேசபேலாகிய ஏரோதியாள், துன்மார்க்கமான ஏரோது ராஜாவின் வஞ்சகமான மனைவி அவனை அடைத்து வைத்திருந்தாள்.  அவனுடைய செவிகளுக்கு வந்த செய்திகள், அவனை கலங்கச் செய்திருக்கும்! நான் என்னை கட்டுபடுத்தி வனாந்ததரத்தில் வாழ்ந்ததும், வெளியா வந்து மேசியாவுக்கு வழியை ஆயத்தம் பண்ணியது மந்த செவிகளை போய் அடைந்து விட்டனவா? எனக்குத் துணை நிற்க யாருமே இல்லையா? என்று எண்ணி புலம்பியிருக்கலாம். அந்த இருண்ட அறையில் அவன், பல நூற்றாண்டுகளுக்கு முன் எலியா அனுபவித்த மன பாரத்தைத்தான் அனுபவித்திருப்பான்

இன்றும் எத்தனையோ பேர் இந்த மன பாரத்தோடு இதை வாசித்துக் கொண்டிருக்கலாம்!

நம்மை தனிமை வாட்டும்போது தேவனுடைய வாக்குத்தத்தம் மட்டுமே தனிமை என்ற இருளை ஊடுருவி நம்மை அடைய முடியும்! கர்த்தருடைய வார்த்தை எலியாவை சென்றடைந்தது போல!

கர்த்தராகிய இயேசுவை  பின்பற்றும்போது,  இந்த பூமியில் அவர்  அனுபவித்த தனிமையின் வேதனையை நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள்! அவர் தனிமையில் இருந்த வேளை  எல்லோராலும் கைவிடப்பட்ட வேளை, தன்னுடைய பிதாவானரே தன்னை விட்டு முகத்தை விலக்கிய வேளையில் தன் பிதாவை நோக்கி அவர், ஏன் என்னை கைவிட்டீர் என்று  கதறிய சத்தம் நாம் எல்லோரும் அறிந்ததே!

அருமையான தேவனுடைய பிள்ளைகளே உன் தனிமையை அவர் அறிவார் ஏனெனில் கர்த்தராகிய இயேசு நீ செல்லும் பாதையில் உனக்கு முன்பாக கடந்து சென்றிருக்கிறார். பயப்படாதே! நீ தனிமையாக இருக்கும் அந்த கெபியில் அவர் உன்னோடு இருக்கிறார்! அமைதலாயிரு! அவருடைய சத்தம் உன் செவிகளில் தொனிக்கும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment