1 இராஜாக்கள் 19:11 – 13 அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குபின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
நாம் சில நாட்களுக்குப் பிறகு எலியாவைப் பற்றித் தொடர்ந்து படிக்கப் போகிறோம்.
எலியா கர்மேல் பர்வதத்தில் தேவனுக்காக தனித்து நின்றான்! பாகாலின் தீர்க்கதரிசிகளை தனிமையாக எதிர்கொண்டான்! ஆனால் இப்பொழுதோ அவன் ஓரேப் பர்வதத்தில் ஒரு குகையில் தனிமையாக வாடி நின்றான்.
என்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை! என்னுடைய வலி யாருக்கும் புரியாது! இந்த எண்ணங்கள் நாம் கைவிடப்பட்ட நிலையில் நிற்கும் போதுதான் நமக்கு வரும். விசேஷமாக நாம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையையே தியாகம் செய்து உழைத்த பின்னர், நாம் செய்த யாவையும் மற்றவர்கள் மறந்து போய்விட்டார்கள் என்பதை உணரும்போது வரும் தனிமையை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.
ஒரு நிமிடம் என்னோடு நீங்களும் உங்களுடைய தனிமையான ஒரு நாளை மனக்கண் முன்னால் கொண்டு வாருங்கள்! ஒருவேளை அது ஒரு அழகான நீரூற்றண்டையில் இருந்திருக்கலாம்! அல்லது நடு இரவில் நீங்கள் வெளியே சென்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்! என்ன மன அமைதி! அந்த ஒரு நொடியில் நாம் அனுபவித்த அமைதியை மறக்க முடியாது அல்லவா?
எலியாவின் வாழ்க்கையில் அநேக நாட்கள் இப்படிப்பட்ட தனிமை இருந்தது. அது அவன் வளர்ந்த கிலேயாத் மலை வாழ்க்கையாகட்டும் , அல்லது அவன் மறைந்து வாழ்ந்த கேரீத் ஆற்றண்டையாக இருக்கட்டும், அவனுக்கு தனிமை பழகிப் போன ஒன்றுதான்.
ஆனால் அவனுடைய தற்போதைய மனநிலை வேறுவிதமாக இருந்தது. அவனுக்கு முன்னால் இருந்த பாதை இருளாய் தோன்றியது. உயிருக்கு பயந்தவனாய் அவன் இந்தக் குகையில் ஒளிந்து கொண்டிருக்கிறான்.அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார் என்று வேதம் கூறுகிறது. இந்த வார்த்தை என் கவனத்தை ஈர்த்தது. ஒருவேளை இந்த வார்த்தை என்னிடம் சொல்லப்படுமானால், கர்த்தர் எபடி கடந்து போவார்? எப்படி என்னிடம் வருவார்? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.
கர்த்தர் எலியாவை காக்க வைக்கவில்லை! பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று என்று பார்க்கிறோம். அதுமட்டுமா, பின்னர் பூமி அதிர்ச்சி, அதன் பின்னர் அக்கினி என பெரிய ஒரு திகில் காட்சியே அரங்கேறிவிட்டது. ஆனால் தேவனாகிய கர்த்தர் இந்த எந்த இயற்கையின் சீற்றத்திலும் காணப்படவில்லை.
இந்த இயற்கையின் மாபெரும் வெளிப்பாட்டிற்கு பின்னர் எலியா ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்டான். எபிரெய மொழியில் இது ஒரு மெல்லிய, அமைதியான சத்தம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. என்ன அருமையான வார்த்தை! தேவனாகியக் கர்த்தர் தன்னுடைய பிள்ளையோடு பேச வந்த வேளையில் அவருடைய சத்தம் மெல்லியதாய் இருந்தது. இதை உன் மனக் கண்கள் முன்பு கொண்டு வா! எலியா தன்னுடைய தகப்பனின் சத்தத்தை அறிந்து கெபியின் வாசலுக்கு வந்து நிற்கிறான்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! தேவனுடைய அன்பு என்னும் பனி அமைதியற்ற மனதை வந்து அடைய முடியாது. பவுல் 1 தெசெலோனிக்கேயர் 4:12 ல் கூறிய விதமாக
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும்….
நாம் தேவனுடைய சமுகத்தில் அமைதலாய் இருக்கும்போது தான் நம்மால் அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்க முடியும். உன்னுடைய அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையின் நடுவே சற்று அமைதலாய் தேவனுடைய சமுகத்துக்கு வா! அவருடைய அமர்ந்த , மெல்லிய சத்தம் உன் செவிகளில் தொனிக்கும்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
