Tamil Bible study

இதழ்:2410 எந்த வேலை செய்து கொண்டிருக்கிறாயோ அதையே நீ தொடரு!

1 இராஜாக்கள் 19 : 13, 15, 16 அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று….
அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி,
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.

கர்த்தருடைய பர்வதத்தின் உச்சியிலுள்ள ஒரு கெபியின் வாசலில் நின்று கொண்டிருந்த எலியா தேவனாகிய கர்த்தருடைய மெல்லிய சத்தம் அவனோடு பேசுவதைக் கேட்டான்.அவன் அவனிடம்எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்று கேட்டார். இது இரண்டாவது முறையாக எலியாவிடம் கர்த்தர் கேட்ட கேள்வி! முதலில் அவனிடம் கேட்டபோது அவன் மிகுந்த களைப்போடு இருந்தான். அவனுக்கு ஆகாரமும், நித்திரையையும் கொடுத்த தேவன் அவனை ஒரேபுக்கு வரச்சொல்லி அங்கு அவனிடம் இரண்டாம் முறையாக இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

எலியா என்ன பதில் சொல்கிறான்? அவன் முதலில் கூறிய காரணத்தையே மறுபடியும் கூற ஆரம்பிக்கிறான். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்ற காரணத்தை கர்த்தர் அந்த இடத்திலேயே தவறு என்று சுட்டிக்காட்டி அவன் முகம் கோணுவதை நிறுத்தியிருக்கலாம். ஆனால் கர்த்தர் அப்படி எதுவும் செய்யாமல் நீ திரும்பிப் போ என்கிறார். நீ மறுபடியும் போய் நீ எங்கே வேலை செய்து கொண்டிருந்தாயோ அங்கே உன் வேலையைப் பார் என்கிறார். உன் பணி இன்னும் முடிய வில்லை, உனக்கு நான் இன்னும் பணி வைத்திருக்கிறேன் என்கிறார்.

இன்று உனக்கும் எனக்கும் இது எவ்வளவு முக்கியமான ஒரு கட்டளை! நீ திரும்பிப் போ! இது எவ்வளவு முக்கியமானது என்று ஒருவேளை நீ யோசிக்கலாம்!

நாம் தேவனாகியக் கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி பலிபீடத்தை பட்சிக்கும் காட்சிகளை இன்று பார்க்காததினால் சில நேரங்களில் இந்த வேதாகமக் கதைகள் நமக்கு இந்த 21 வது நூற்றாண்டில் பொருந்தாதவை என்று நினைக்கிறோம். நாம் காகத்தின் மூலம் உணவு வரும் என்று காத்திருக்கவும் இல்லை, விதவையின் வீட்டில் அன்றாட உணவு தேவனால் கொடுக்கப்பட்டு வாழ்வும் இல்லை, விதவையின் மகனை உயிரோடு எழுப்பவும் இல்லை.

ஆனாலும் தயவுசெய்து அன்றைய எலியாவின் தேவன் இன்று நம் தேவன் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்! நம் தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன்! வல்லமையுள்ளவர்! அவர் உன்னை இன்று தம்முடைய பணிக்காக அழைப்பாரானால் அதை நிறைவேற்ற வல்லவர்!

கர்த்தர் எலியாவிடம் நீ திரும்பிப் போ என்றபோது, எந்த யெசெபேலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அர்த்தம்! நீ தனிமையாக இருக்கிறாய் என்று பயப்பட வேண்டாம் என்று அர்த்தம்!

எலியா திரும்பிய போது அவனுடைய பணி இன்னும் வெற்றிகரமாக இருந்தது. அவன் சீரியாவின் ராஜாவை அபிஷேகம் பண்ணினான், யெகூவை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினான், எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு பின்னாகத் தம்முடைய பணிகளைத் தொடர எலிசாவை அபிஷேகம் பண்ணினான். அதன் பின்னர் பத்து வருடங்கள் அவன் எலிசாவை தன்னிடம் வைத்துக் கொண்டு இஸ்ரவேல் அனைத்தும் நிறுவிய தீர்க்கதரிசிகளின் பாடசாலைகள் இஸ்ரவேல் மக்களின் ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது.

எலியாவின் வாழ்வில் அவன் ஒரேபின் மேல் நின்றதிலிருந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வரை இருந்த பத்து வருடங்கள் அவனி ஒரு முக்கியமான தீர்க்கதரியாக மாற்றியது. ஆனால் நாம் எலியாவை கர்மேல் பர்வதத்தின்மேல் நின்ற சம்பவத்தை மட்டுமே வைத்து நினைவு கூறுகிறோம். அவன் ஒரேபிலிருந்து வந்த பின் நிறைவேற்றிய கர்த்தருடைய பணிகள் இஸ்ரவேலின் சரித்திரத்தில் இடம் பெற்றவை.

இன்று நீ எங்கு இருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது! ஆனால் தேவன் உன் வாழ்வில் ஒரு மிகப்பெரிய நோக்கத்தை வைத்திருக்கிறார் என்பதை மறந்து போகாதே!திரும்பிப் போ! தேவனுடைய பணிகளைத் தொடரு! தேவனுடைய நோக்கம் உன்னில் நிறைவேறட்டும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment