1 இராஜாக்கள் 19 : 19 – 21 அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.
அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.
எலியாவின் வாழ்க்கையைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் என் ம தோன்றும் ஒரே வார்த்தை ‘தனிமை’ என்பது. உண்மையில் யாருமற்ற கேரீத் ஆற்றண்டையில் அவன் செலவிட்ட ஒன்பது மாதங்களும் தனிமைக்கு உதாரணம். அவன் உயிருக்கு இருந்த ஆபத்தும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் தான் அவன் தனிமையிலும் வெளி நாட்டிலும் காலத்தைக் கழித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவன் ஒரேபில் தனிமையாக இருந்த நாற்பது இரா பகல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. எலியாவைப் பற்றி சிந்திக்கும்போது என்னால் இவ்விதமான தனிமையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற எண்ணம்தான் மனதில் வந்தத!
சரி சரி! எலியாவைப்பற்றி ராஜாவின் மலர்களில் எழுதுவதற்காக எத்தனை மாதங்கள் எலியாவின் வாழ்க்கையை அலசிக் கொண்டிருக்கிறேன்! எங்காவது எலியாவின் குடும்பம் என்று கண்ணில் பட்டதா? இதுவரை எந்த வேத வல்லுநரும் எலியாவின் மனைவியையோ அல்லது பிள்ளைகளையோ பற்றி எழுதவேயில்லை. அவனுடைய சகோதர சகோதரிகளைப் பற்றியும் சொல்லப்படவில்லை! அவனுக்கு நிச்சயமாக பெற்றோர் இருந்திருப்பார்கல், அவர்களின் பெயரும் கொடுக்கப்படவில்லை. அவன் இஸ்ரவேலின் சரித்திரத்தில் எங்கிருந்தோ வந்து திடீரென்று இறங்குவதை பார்க்கிறோம்.
இங்கு ஓரேபில் அவனை சந்தித்த தேவன் அவனுடைய பணி இன்னும் முடியவில்லை அவன் எந்த முதியோர் இல்லத்திலும் ஓய்வு எடுக்க முடிவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இரண்டு ராஜாக்களை அபிஷேகம் பண்ணும் பெரிய பொறுப்பையும் அவனுக்கு கொடுத்து அவனை ஓரேபிலிருந்து வழியனுப்பினார். அதுமட்டுமல்ல எலியா தனக்கு பின்னால் தன்னுடைய ஊழியத்தைத் தொடரப்போகும் ஒருவனையும் அபிஷேகம் பண்ண வேண்டிய பணியை அவனுக்குக் கொடுத்தார்.
எலியா எலிசாவை சந்தித்ததும் தன்னுடைய தன்னுடைய ஆபீஸ் சாவியை கொடுத்து விட்டு , நான் வருகிறேன் இனி நீ தான் இந்தப் பணிக்கு பொறுப்பு என்று சொல்லிவிட்டு வரும் வேலையையா தேவன் எலியாவுக்குக் கொடுத்தார்? இல்லை! அவனை ஒரு ஊழியக்காரனாக உருவாக்கும் பணி! ஆங்கிலத்தில் மென்டர் ( Mentor) என்று சொல்வார்கள். தீர்க்கதரிசி பட்டம் வாங்கப்போகிற வாலிபன் எலிசாவுக்கு பத்து வருடங்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்!
எலிசாவைப்பற்றி நமக்கு கொஞ்சம் அதிகமாகவே இங்கு தெரிய வருகிறது. அவன் சாப்பாத்தின் குமாரன் என்றும், அவன் பன்னிரண்டு ஏர் பூட்டி உழுதான் என்றும் பார்க்கிறோம். அது பணக்காரர்கள் மட்டுமே செய்ய முடிந்த ஒன்று. அதுமட்டுமல்ல அவனுடைய குடும்பம் அந்த ஊரில் பிரபலமாயிருந்திருக்க வேண்டும். அவன் புறப்படும் முன் அந்த ஊர் ஜனங்களுக்கு அவன் விருந்து வைப்பதைப் பார்க்கிறோம்.
பெரிய பணக்கார குடும்பத்திலிருந்து, அவனை நேசித்த ஊர் மக்களிடமிருந்து விடை பெற்று அவன் அறியாத ஒரு புதிய உலகத்துக்குள் எலிசா காலடி எடுத்து வைக்கிறான். தனிமையே உலகம் என்று இருந்த எலியாவோடு, சொந்த பந்தங்களோடு கலகலப்பாயிருந்த எலிசாவை தேவன் கொண்டு வந்து சேர்க்கிறார்.
இப்படிப்பட்ட சம்பந்தம் திருமணங்களில் கூட நடப்பது இல்லையா? ஒருவர் அமைதியான குணமும், ஒருவர் கலகலவென்று பேசும் குணமும் கொண்ட எத்தனையோ கணவன் மனைவிமாரை நான் பார்த்திருக்கிறேன். நானும் என் கணவரும் கூட வித்தியாசமான குணமும் குடும்ப பின்னணியும் கொண்டவர்கள் தான்! ஆனால் எலியாவையும் போல எலிசாவையும் போல எத்தனை நட்புகள், எத்தனை உறவுகள் தழைத்து இருக்கின்றன!
இவர்கள் இருவருடைய நட்பையும் கர்த்தர் எவ்வாறு பலப்படுத்தினார் என்று நாம் தொடர்ந்து படிப்போம்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
