எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.
1 இராஜாக்கள் 19 : 19
எனக்கு கதைகள் கேட்க மிகவும் பிடிக்கும், விசேஷமாக நன்றாக கதைகள் கூறுவோர் சொன்ன கதைகள் மனதில் எப்பொழுதுமே நிற்கின்றன!
அதுமட்டுமல்ல வேதாகமத்தில் நான் படித்த ஒவ்வொரு கதைகளும் என் மனதில் ஆணித்தரமாக பதிந்து உள்ளன! விசேஷமாக டாக்டர் லூக்கா அவர்கள் இயேசு கிறிஸ்து சொன்ன கதைகளை அழகாக, விளக்கமாக கூறியிருப்பது எனக்கு மிகவும் பிடித்தவை. லூக்கா இயேசுவின் கதைகளை விரிவாக, அந்தக் கதையிலிருந்து நாம் ஒன்றல்ல, பல கருத்துகளை எடுத்துச் செல்லும்படி கூறுவார். லூக்கா 16 ல் சொல்லப்பட்ட உவமையும் அப்படித்தான்!
லூக்கா 16: 10, 11 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான் .அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
எலியா, எலிசாவின் நட்பைப் பற்றி நாம் படித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த கொஞ்சம், அநேகம் என்ற வார்த்தைகள் எப்படி பொருந்தும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?
திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.
(உன்னதப்பாட்டு 2 : 15)
சாலொமோன் எழுதிய உன்னதப்பாட்டில், உறவு என்கிற திராட்சத் தோட்டத்தைக் கெடுக்கிற சிறு நரிகளைப் பற்றி எழுதுகிறார்.
சாலொமோனுடைய வார்த்தைகளில் சிறு காரியங்கள் கூட நட்பையோ, உறவையோ கெடுத்து விட முடியும். இயேசுவின் உவமையில் கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.
இப்பொழுது எலியாவும் எலிசாவும் சந்தித்த இடத்தைப் பார்ப்போம். எலிசா வேலை செய்து கொண்டிருந்த வயலுக்கு எலியா வருகிறான். வேதம் கூறுகிறது எலியா தன்னுடைய சால்வையை எலிசாமேல் போடுகிறான். எலிசா அதை கவனிக்காமல் ஏதோ தவறுதலாக தன் மேல் விழுந்துவிட்டதாக நினைத்து உதறியிருக்கலாம். ஆனால் எலிசா அதை கவனித்தான். சிறு காரியம் அவனுக்கு முக்கியமாகப் பட்டது. அடுத்த வசனத்திலேயே நாம் எலிசா தன் குடும்பத்தாரிடம் விடை பெறுவதை பார்க்கிறோம். எலிசா சிறு காரியமாய்க் காணப்பட்டதில் வெற்றி சிறந்தான்.அவனுடைய பார்வையில் எதுவுமே சிறியது என்று இல்லை! கொஞ்சத்திலே உண்மை காணப்பட்டது!
ஒரு சால்வை! ஒரு விடை பெறுதல்! ஒரு ஊழியக்காரன் எலியா! இந்த சிறு காரியங்களில் உண்மையாக இருந்ததால் எலிசாவை, தம்முடைய குமாரனாகிய இயேசுவுக்கு அடுத்த படியாக அநேக அற்புதங்களை செய்த ஒரு ஊழியக்காரனாக தேவனாகியக் கர்த்தர் உயர்த்தினார். அதுமட்டுமல்ல அடுத்த 10 வருடங்கள் அவன் எலியாவுடன் கொண்டிருந்த நட்பு பல பெரிய காரியங்களை இஸ்ரவேலில் நடப்பித்தது.
சிறு காரியத்தில் உண்மையாயிருத்தல், பெரிய நட்பை உருவாக்கும்! ஆனால் சிறு நரிகள் கெடுத்துவிடும்!
இந்த 21ம் நூற்றாண்டில் எல்லோரும் இண்டெர்னெட் உலகத்தில் இருக்கும் போது, ஒரு சிறு முயற்சி, ஒரு சிறு புன்னகை, ஒரு சிறு பரிசுப் பொருள், சிறு காரியங்களில் கூட ஒருவருக்கொருவர் உண்மையாயிருத்தல் போன்றவை குடும்பத்தில் உள்ள உறவுகளை பலப்படுத்தும். முயற்சி செய்யுங்கள்!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
