Tamil Bible study

இதழ்:2414 ஒரு உன்னதமான நட்பு!

2 இராஜாக்கள் 2 : 1 – 1.கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

இன்றைய வேதாகமப் பகுதியை நான் வாசிக்கும்போது, எலியாவுக்கும், எலிசாவுக்கும் இடையில் அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் அவர்களுடைய நட்பு , அவர்களுடைய அன்பு, அவர்கள் தீர்க்கதரிசிகள் பாடசாலை அமைத்து அவற்றை வேறு வேறு இடங்களில் உருவாக்க  உழைத்த உழைப்பு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது. எலியா இந்த இந்த இளஞனோடு பணி புரிகையில் அவனுடைய ஆவலைக் கண்டு வியந்து,  ‘நான் ஒருவன் தான் மீதியாயிருக்கிறேஏன் என்று நினைத்து விட்டேன் எலிசா! எத்தனை தவறு அது! நீ கூட என்னை மாதிரியே இருக்கிறாய் எலிசா! என்னைப்போலவே நீயும் நம் பரம பிதாவானவரை நேசிக்கிறாய்’ என்றெல்லாம் கூறியிருப்பான்.

இப்பொழுது எலியா இந்த பூமியில் செய்த ஊழியத்தின் முடிவு வந்தாயிற்று. அவர்கள் இருவரும் அவர்கள் அமைத்து நடத்தி வந்த தீர்க்கதரிசிகளின் பாடசாலைகளுக்கு எலியாவின் விடை பெறுதல் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

எலியா மறுபடியும் மறுபடியும் எலிசாவை அவன் நண்பர்களோடு இருக்க சொல்கிறதைப் பார்க்கிறோம். அதற்கு வேதாகம வல்லுநர்கள் பலவித விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஆனால் என்னுடைய தாழ்மையான விளக்கத்தை இங்கு எழுதுகிறேன். எலியாவுக்குத் தெரியும் எப்படி தனிமையான பாதையில் செல்வது என்று. எலிசா தன்னோடு கொண்டிருந்த  நீண்ட நட்பை , ஒரு பயிற்சியாளராக அவன் இருந்த அந்த உன்னத ஐக்கியத்தை இழக்கப் போகிறான் என்றும் தெரியும்.அவன் அந்த வேளையில் எலிசா தன்னைபோன்ற, ஒரே சிந்தையுள்ள தீர்க்கதரிசிகளின் பாடசாலையின் மாணவர்களோடு தங்கியிருக்க வெண்டும் என்று எலியா விரும்பினான்.  மேத்யூ ஹென்றி அவர்கள் எழுதுவது போல எலியா இங்கே இரு அங்கே இரு என்று சொல்லியதெல்லாம் எலிசாவின் காதுகளில் ஏறவேயில்லை! எல்லோரையும் சும்மா இருங்கள் எனக்குத் தெரியும் என்று அடக்கி விட்டான்.

அதுமட்டுமல்ல எலிசா ‘ நான் உம்மை விடுவதில்லை’ என்று எலியாவை உறுதியாக பற்றிக் கொண்டான் என்று பார்க்கிறோம். எலியாவை அவன் அதிகமாக நேசித்தது மட்டுமல்ல, அவன் எலியாவின் கடைசி  நிமிடம் அவனோடு இருந்து தானும் எலியாவைப் போன்ற பரிசுத்தமான உன்னத வாழ்க்கை வாழ முயல முடிவு செய்தான் இந்த உத்தம சீஷன்.

மேத்யூ ஹென்றி அவர்கள், ‘ நாம் எல்லா ஆவிக்குரிய நன்மைகளையும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டும் ஏனெனில் நாம் இவ்வாறு சேர்ந்து இருக்கும் நாட்கள் மிகக் குறைவு’ என்று எழுதியிருக்கிறார். எவ்வளவு உண்மை அது!

அந்தக் கடைசி நிமிடம்! எலியா தேவனால் தன்னுடைய பரலோக வீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த கண்கொள்ளா நிமிடம் வரை எலிசா அவனோடு இருந்தான். எத்தனை உத்தமமான நட்பு அது!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment