2 இராஜாக்கள் 2 : 6, 7 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்;
தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
இந்த நாள்!!!!! அவர்களுடைய நட்பின் கடைசி நாள்!!!! நான் எலியாவின் இடத்தில் இருந்திருப்பேனாகில் நான் எவ்வளவு மெதுவாக நடக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக நடந்திருப்பேன்!
அவர்கள் என்ன பேசியிருக்கக்கூடும்? அவர்கள் இப்பொழுதுதான் தீர்க்கதரிசிகளின் கல்வி நிறுவனங்களை பார்த்து விட்டு வந்ததால் ஒருவேளை எலியா எலிசாவிடம் அவற்றை திறம்ப்பட நடத்துவதைப் பற்றி பேசி உற்சாகப்படுத்தியிருக்கலாம். மோசே தன்னுடைய கடைசி உரையாடலில் இஸ்ரவேல் மக்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து பரலோக இன்பத்தை அனுபவிக்கும்படி ஊக்குவித்தது போல பேசியிருந்திருக்கலாம்.
நம்முடைய செயல்கள் வார்த்தைகளைவிட அதிகமாக பேசும் என்பார்கள்! வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து தேவனுடைய செயல் வீரனை பரலோகம் எடுத்து சென்ற அந்த நாளில் எலியா, எலிசா என்ற தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையே பேசியது!
அந்த நாளில் என்ன நடந்தது என்று சற்று பார்ப்போம். நாம் வாசிக்கிற இந்த வசனங்களில் அப்படியே இருவரும் போனார்கள். என்றும் பின்னர் அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள் என்றும் வாசிக்கிறோம்.
இந்த இருவருக்கும் இந்த இடம் நன்றாகவேத் தெரியும். எலியாவும் எலிசாவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் யோர்தான் கரையை அடைந்து விடுவார்கள். அந்த தடையை நன்கு அறிந்தும், அவர்கள் நடந்து அதன் கரையை கடக்க முடியாது என்று அறிந்தும் அவர்கள் நடப்பதை நிறுத்தவேயில்லை, அவர்கள் கண்கள் முன்னோக்க அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். எந்தத் தடையையும் பொருட்படுத்தவேயில்லை. அவர்களை பின் தொடர்ந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் யோர்தானின் கரையிலே நின்ற போதும் அவர்கள் தொடர்ந்தனர்.
வேதம் கூறுகிறது வேகமாய் ஓடிக்கொண்டிருந்த யோர்தான் ஆறு அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை என்று. என்ன ஆச்சரியம்! எலியாவின் சால்வை பட்டவுடன் அது இரண்டாய் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
எத்தனையோ முறைகள் என்னுடைய வாழ்க்கையில் எனக்கு முன்னாக உள்ள தடைகளை நான்பார்த்து நான் பயந்ததுண்டு! என்னால் முன்னேறி செல்ல முடியாமல் அவை என் எண்ணங்களையும், செயல்களையும் முடக்கியதுண்டு!
இன்று உன்னுடைய வாழ்வில் என்ன தடைகள் உள்ளன என்று சிந்தித்து பார்!
சாலைத் தடைகள்? தடைகள்? தாமதங்கள்? யோர்தான் ஆறு? எதுவாயிருந்தாலும் சரி! கர்த்தர் சொல்லுகிறார், நிற்காதே! முன்னேறி செல்! நான் தடைகளை நீக்கிப் போடுவேன் என்று!
நீ யோர்தானண்டை வரும்போது அந்தத் தடையை பார்த்துவிட்டு உட்கார்ந்து தூங்க வேண்டாம்! அதன் அந்தக் கரையில் கர்த்தர் உனக்காக ஒரு அற்புதத்தை வைத்திருக்கிறார்.
தயங்காதே! தடைகளை தகர்த்து விட்டு வெற்றி நடை போடு!
உங்கள் சகோதரி
Dr பிரேமா சுந்தர் ராஜ்
